Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோ ராசிக்காரர்களுக்கு வளம் சேருமா? சீமான் ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு எப்படி?


வைகோவின் கன்னி ராசிக்காரர்களுக்கு துர்முகி புத்தாண்டு வளம் சேர்க்குமா?

"எதிலும் தூய்மையை விரும்புபவர் நீங்கள்! சந்திரன் 10-வது ராசியில் நிற்கும்போது புது வருடம் பிறந்திருப்பதால், உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். அரசால் அனுகூலம் உண்டு. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்தில் செவ்வாய் 3-ம் இடத்தில் வலுவாக நிற்பதால், தைரியம் பிறக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்திருப்பதால், உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

ராகு பகவான் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிலேயே தொடர்வதால், மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கேது 6-ம் வீட்டில் நீடிப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கு சாதகமாகும்.
01.08.16 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால், எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். பணம் வந்தாலும் செலவுகளும் தொடரும். ஆனால், 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக வருவதால், உடல் நலம் பாதிக்கும். மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ஆனால், 17.01.17 முதல் 9.03.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால், அமைதி உண்டாகும். கணவன் -மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நோய் குணமாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். அவர் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்துகொள்வார். பேச்சில் கனிவு பிறக்கும்.

27.02.17 முதல் 11.04.17 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-ல் மறைவதால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள், பண இழப்புகள், சகோதர வகையில் மனக்கசப்புகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏற்படும். வழக்கில் தீர்ப்பு தாமதம் ஆகும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக் கும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். பூர்வீகச் சொத்தில், உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.   

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உணவு, ஸ்பெகுலேஷன், சிமென்ட், கல்விக் கூடங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் நீடிப்பது பற்றி மனக் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்தினாலும், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் வேலை யில் ஆர்வம் உண்டாகும். சிலர் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மாணவ-மாணவிகள், படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நினைவாற்றல் கூடும். கலைத் துறையினரின் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். புது வாய்ப்புகளும் வந்து சேரும்.  
மொத்தத்தில் இந்த புத்தாண்டு சிற்சில தருணங்களில் சுகவீனங்களை அளித்தாலும் வசதி, வாய்ப்புகளை அள்ளிக்கொடுப்பதாகவும் அமையும்.


பரிகாரம் : சுவாதி  நட்சத்திர நாளில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அருளும் ஸ்ரீயோக நரசிம்மரை, வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி  பெருகும்."

பஞ்ச் :

* எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் ( வாழ்க்கையே (நடை)பயணத்துல தான ஓடுது....)
* சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ( சூப்பர்..சூப்பர்..சூப்பரு...)
* மனக் குழப்பம் உண்டாகும். (வரத்தானே செய்யும்...)
* உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும்.(சமாளிப்போம், வேற என்ன செய்ய...)
 
சீமானின் கும்பம் ராசிக்காரர்களுக்கு  துர்முகி ஆண்டு செல்வாக்கை கூட்டுமா?

பிரதிபலன் பாராமல் உதவுபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். இழுபறியான வேலைகள் முடிவடையும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறந்திருப்பதால், அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளை களால் மதிப்பு கூடும். மகளின் திருமணம் கூடிவரும். மகனின் உயர்கல்வி, வேலை போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்தை சீர்படுத்துவீர்கள்.

வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். வீடு கட்ட, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புது வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடனும் அனுசரணையுடனும் நடந்துகொள்வார்கள். சிலருக்கு சொந்தமாக வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

01.08.16 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம் கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை, குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். செலவுகள் அதிகமாகும். சில வேலை களைப் போராடி முடிக்க வேண்டி வரும். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். ஆனால், 17.01.17 முதல் 9.03.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால், தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால், வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக் கூடும். மனைவிவழி உறவினர் களுடன் மனத்தாங்கல் வரும். உங்களைவிட வயதில் குறைந்த வர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கேதுவும் உங்கள் ஜன்ம ராசியிலேயே தொடர்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். எவருக்கும் முன்பணம் தர வேண்டாம். புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகை களால் ஆதாயம் அடைவீர்கள். இயன்ற வரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். 


உத்தியோகத்தில்,  உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கம் உண்டாகும். சூழலுக்கு ஏற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைகூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே, படிப்பில் கவனம் செலுத்தவும். கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும். பெரிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஆரோக்கியக் குறைவையும், காரியத் தடங்கல்களையும் தந்தாலும், தொடர் முயற்சிகளால் இலக்கை எட்டிப் பிடிக்கவைப்பதாக அமையும்.


பரிகாரம் :

அஷ்டமி திதி நாளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் யோக பைரவரைத் தரிசித்து, தேங்காய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். சங்கடங்கள் நீங்கும்."
* ஆளுமைத் திறன் அதிகரிக்கும் (அழகுக்கு எதுக்கு மேக்கப்பு...)
* இயன்ற வரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும்.(தனியா நின்னாலும் தன்மானத்தோட நிப்போம்ல)
* எதிர்பார்த்த லாபம் வரும். ( மிக்க மகிழ்ச்சி...)
* பெரிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். ( வந்துதானே ஆகவேண்டும்..)

பின்குறிப்பு:

ராசி பலனை கணித்தவர் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன். மேற்கோள் குறிக்குள் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர, இதில் இடம்பெற்ற தலைப்பு, முன்னுரை, பின்னுரை, பஞ்ச் ஆகியவற்றுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close