Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இளைஞர்கள் மாற்றத்திற்கான உத்வேகம் உள்ளவர்களாக திகிழ வேண்டும்!' - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

   
ந்தியாவிலுள்ள ஶ்ரீ சத்ய சாய் சேவா சங்கமும்,  சத்ய சாய் பன்னாட்டு மையமும்  இணைந்து ஆந்திரபிரதேசம், புட்டபர்த்தியில்  நடத்திய  'முதல் உலக இளைஞர்கள் திருவிழாவில்' சத்ய சாய்பாபாவின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டு பேசினார், மின்சாரம் மற்றும் புதுப்பித்தக்க எரிசக்திகளுக்கான  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
 

அவர் பேசுகையில் "துரதிருஷ்டவசமாக நிறைய இளைஞர்கள் தவறான பாதையில் சென்று தங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்கிறார்கள். அத்தகைய இளைஞர்கள் சமூகத்திற்கு சேவையாற்றும் வகையில் மடைமாறவேண்டும். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்துக்களும், மிகவும் மதிக்கத்தக்கவை. தற்போதைய இளைஞர்கள் சிறிய விஷயத்திற்குக் கூட சோர்ந்து போய்விடுகிறார்கள். அவர்கள் குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வந்து, பெரிய அளவில் தனக்கான இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையினைக் கண்டறிந்து கூர்மையான அறிவினைப்பெற முயலவேண்டும். சுவாமி விவேகானந்தர், காந்தி, ஶ்ரீ சத்ய சாய் பாபா காட்டிய அமைதி வழியில் சமூக சேவையாற்றவேண்டும்.
          

நிறைய இளைஞர்கள் இளமையிலேயே சிறந்த முறையில் சாதித்து உள்ளனர். அப்படி நமக்கு கிடைத்தவர் தான் 'கணித மேதை'- ஶ்ரீநிவாச ராமனுஜர். அவருக்கு கணிதத்தில் ஆர்வமே ஆன்மிக உணர்தலில் இருந்து தான் உருவானது. அதுபோல், ஒவ்வொருவரும் தன் அகநிலை புரிந்து செயல்பட வேண்டும்" என்றார்.
 

அவரைத் தொடர்ந்து பேசிய ஶ்ரீ சத்ய சாய் பன்னாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர ரெட்டி, " இல்லாதவர்களுக்கு உணவு, உடை, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதுதான், எங்கள் அமைப்பின் முதன்மை நோக்கம். எப்போதும் உற்சாகமாக இருங்கள். அனைவரும் அன்புடனும், சேவையாற்றும் மனநிலையிலும் இருந்தாலே  கடவுளைக் காணலாம்" என்றார் உற்சாகமாக.
    

இவ்விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லஷ்மண், ஆந்திர மாநில அமைச்சர் - ரகுநாதரெட்டி மற்றும் ஶ்ரீ சத்ய சாய் சேவா & பன்னாட்டு அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இவ்விழாவில் 3700-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் செர்பியா, கஜகஸ்தான், இஸ்ரேல், டிரினிடாட் உள்ளிட்ட 69 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்   கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் நாட்டின் கொடியினை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
 

ஜூலை - 12-ம் தேதி துவங்கிய, 'உலக இளைஞர்கள் திருவிழா',  நேற்று  மாலையுடன்  முடிவுபெற்றது. இங்கு அனுதினமும் ஶ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடம் இருக்கின்ற 'குல்வந்த் ஹாலில்'  காலை 8 மணியிலிருந்து வேதமுழக்கங்களும், காலை 9 மணியிலிருந்து கீர்த்தனைப்பாடல்களும், பஜனைப்பாடல்களும் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. சரியாக 10 மணிக்கு ஶ்ரீ சத்யசாய் பாபாவின் நினைவிடத்தில்  தீபாராதனை காட்டப்பட்டவுடன், ஒரு பெருத்த மணியின் ஓசை பலமாக ஒலிக்க,  விழா முடிவுறுகிறது.

சத்யசாய்பாபாவின் சமாதிக்கு கீழே எழுதப்பட்டிருந்தது  ஒரு உலகையே அசைக்கும் ஒரு வாக்கியம் - "love all , serve all" என்று. அதுதானே இவ்வுலகில் எல்லாம்.

 - ம.மாரிமுத்து
படங்கள் - மீ. நிவேதன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ