Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உலகிற்கே வழிகாட்டும் உன்னத சகோதரர்கள்!' - கேரளத்தின் நாலம்பல வழிபாடு


கேரளாவில் ஆடி மாதம், 'ஆன்மிக மாதமாக' கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஆடி மாதத்தை, 'ராமாயண மாதம்' என்றே கேரள மக்கள் அழைக்கிறார்கள். இங்கு சகோதரர் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன் ஆகிய நான்கு பேருக்கும் தனித்தனியே கோயில்கள் எழுப்பி, மக்கள் வழிபட்டு வருகின்றனர். அத்துடன் ஆடி மாத்தில், ஒரே நாளில் நான்கு கோயிலுக்கும் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், குடும்பத்தில் சகோதரத்துவ பாசம் நீடித்து நிலைக்கும் என்பது ஐதீகம்.

பழங்கால பெருமை கொண்ட கேரள ராமாயண கோயில்கள் குறித்தும், இராமாயணத்தில் ராமனின் சகோதரர்களிடையே நிலவும் சகோதரத்துவ பாசம் குறித்தும் விவரிக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.

"உலகம் இன்று சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. உலக மக்கள் அனைவரும் எந்த மதம், எந்த ஜாதியாக இருந்தாலும் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்கிறது. ஆனால் உண்மையில் உலகத்தின் எல்லா இடங்களிலும் ஒரே தாய்க்குப் பிறந்த புதல்வர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா? சொத்துச் சண்டையில் சொந்த சகோதரன் மேல் வழக்குத் தொடுத்து நீதிமன்றம் செல்பவர்கள் எத்தனை பேர்?

'சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர்கள்' எத்தனை பேர்?

உலகில் தோன்றிய அத்தனை மொழி நூல்களிலும், உடன்பிறந்த சகோதரர்களின் உன்னதமான பாசத்தை உரத்துப் பேசும் நூல் நம் பாரத தேசத்தைச் சேர்ந்த ராமாயணம்தான்.

மாபெரும் இதிகாசமான ராமாயணம், தாய் மகன் பாசம், தந்தை மகன் நேசம், நட்பு, குரு சீடன் உறவு, கணவன் மனைவி காதல், தலைவன் தொண்டன் பக்தி என்று இப்படி எத்தனையோ அறங்களைப் பேசினாலும், ராமாயணம் வலியுறுத்தும் தலையாய அறம் சகோதர பாசம்தான்.

ராம லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்கு இணையான சகோதரர்கள் உலகில் எங்குமில்லை. அண்ணன் ராமனிடம் பாசம் செலுத்தும் அந்த மூன்று தம்பியரும் பாசம் செலுத்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சுகிறார்கள். லட்சுமணன் அதிர்ஷ்டசாலி. அவன்தான் மூவரிலும் ராமனுடன் அதிக நாட்கள் இருந்தவன். பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்தவன். கானகத்திற்கும் அண்ணனுக்குச் சேவை செய்யவென்றே உடன் சென்றவன். தூக்கத்தைத் தொலைத்து இரவிலும் பகலிலும் அண்ணனையும் அண்ணியையும் காவல் காத்து நின்றவன்.

அண்ணி சீதை கூடத் திருமணம் வரை ராமனுடன் வாழவில்லை. திருமணமான பின் கானகம் வந்தாலும் அங்கே  அசோகவனத்தில் ராமனைப் பிரிந்து வாழ்கிறாள். உத்தர காண்டத்தில் அவள் நாடு கடத்தப்பட்டுக் காடு சென்றபோதும் கணவனைப் பிரிய வேண்டிய துர்ப்பாக்கியம். ஆனால் லட்சுமணன், தன் இறுதி மூச்சு வரை ராமனைப் பிரியவே இல்லை. அவன் பெற்ற பேறே பெரும்பேறு.

பரதன், ராமன்மேல் மட்டற்ற பாசம் செலுத்தினாலும் அவன் துரதிருஷ்டசாலி. ராமன் மேலான அவனது பாசத்தை, பெற்ற தாய் கைகேயி புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்டிருந்தால் பரதன் நாடாளவும் ராமன் கானகம் செல்லவும் வரம் கேட்டிருப்பாளா?

தந்தை தசரதரும் பரதனைப் புரிந்து கொள்ளவில்லை. அவன் தனக்கு ஈமக்கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டல்லவா அவர் இறந்தார். லட்சுமணனும் பரதனைப் புரிந்துகொள்ளவே இல்லை. என்ன கோபம் அவனுக்கு பரதன் மேல்? கோசலை, வசிஷ்டர் ஆகியோர் கூட பரதனை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள். குகனும் தொடக்கத்தில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பரதன், ராமனின் பாதுகையை அரியாசனத்தில் வைத்து, அதன் கீழ் அமர்ந்து நாடாளும் அளவு ராமனிடம் பாசம் கொண்டிருந்தான்.

சத்துருக்கனன் அதிகம் பேசாதவன். ஆனால் பரதன், ராமன்மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் அவன். ராம பட்டாபிஷேகத்திற்கு முந்திய இறுதிக்கட்டத்தில், பரதன் பதினான்கு ஆண்டாகியும் ராமன் அயோத்தி வராததால் நெருப்பில் விழத் துணிகிறானே? அப்போது கானாள நிலமகளைக் கைவிட்டுப் போன ராமனை எண்ணி சத்துருக்கனன் உருகுகிறான். தன்னை அரசாளுமாறு பரதன் சொன்னபோது விரக்தியுடன் நகைக்கிறான். அதிகம் பேசாமலே, தான் கொண்ட ராம பக்தியை உறுதிப்படுத்துகிறான் சத்துருக்கனன் என்ற அந்த லட்சியத் தம்பி.

இந்த அற்புதமான சகோதரர்கள் நால்வரையும் கோயில் கட்டிக் கொண்டாட வேண்டாமா? கேரளத்தில் உண்மையிலேயே இவர்களுக்குத் தனித்தனி ஆலயங்கள் எழுப்பிக் கொண்டாடுகிறார்கள்.

*ராமனுக்கு அடுத்த அவதாரமல்லவா கண்ணன்? திரேதாயுகத்தில் பிறந்தவன் ராமன். அடுத்து வந்த துவாபர யுகத்தைச் சார்ந்தவன் கண்ணன். தான் சொன்னபடி வாழ்ந்தவன் ராமன். தான் சொன்னபடி வாழச் சொன்னவன் கண்ணன். பின்வந்த அவதாரமான கண்ணன், முந்தைய அவதாரமான ராமனையும் அவனது மூன்று சகோதரர்களையும் சிலையெழுப்பி வழிபட்டிருக்கிறான்.

கண்ணன் ஆட்சி புரிந்த துவாரகை கடலில் மூழ்கியதே? அப்போது கண்ணன் வழிபட்ட ராம லட்சுமண பரத சத்துருக்கனர் சிலைகள் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகவே கடல் நீரில் மூழ்காது மிதந்தனவாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் இச் சிலைகள் மிதந்துவந்தபோது கண்டெடுத்தவர்கள் சில மீனவர்கள். வலையில் சிக்கிய சிலைகளை அவர்கள் வியப்போடு தொழுதார்கள். அந்தப் பகுதியின் தலைவராக விளங்கியவரிடம் பக்தியோடு சிலைகளை ஒப்படைத்தார்கள். ஜோதிடர்களை வரவழைத்து இந்த அற்புதச் சிலைகளின் வரலாற்றைக் கண்டறிந்தார் அந்தத் தலைவர். அப்போது வானில் ஓர் அசரீரி எழுந்தது. ராமர் சிலையை அரவணைத்தவாறு நடக்கவேண்டும் என்றும், எந்த இடத்தில் ஒரு மயில் வட்டமிடுகிறதோ அங்கே அந்தச் சிலைக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது அசரீரிக் குரல்.

சிலையோடு நெடுந்தூரம் நடந்தும் மயிலைக் காண இயலவில்லை. மக்கள் மனம் தளர்ந்தபோது ஒரு பக்தர் தொலை தூரத்திலிருந்து ஏராளமான மயில் இறகுகளோடு அங்கு நடந்து வந்தார். அவரோடு ஒரு மயிலும் நடந்து வந்தது. மக்களும் தலைவரும் மனம் மகிழ்ந்து மயிலைக் கண்ட அந்த இடத்திலேயே ராமனுக்கு ஆலயம் நிறுவினார்கள்.

ராமர் ஆலயம் திருச்சூர் அருகே திருப்பையார் என்ற இடத்தில் அமைந்துள்ளது. (திருச்சூரிலிருந்து 24 கிலோ மீட்டர்.) கடந்த காலத்தில் திருப்புறை ஆறு இந்நகரைத் தழுவிக் கொண்டு ஓடியதாம். அதனால்தான் ஆறு என இவ்வூரின் பெயர் முடிகிறது. மரவேலைப்பாடுகளும் சிற்பங்களுமாக இந்தக் கோயில் தனி அழகோடு திகழ்கிறது. ஆகஸ்ட் - செப்டம்பரில், ஓணத்தையொட்டி படகுப் போட்டி இங்கு நடைபெறுவதுண்டு. ராமன் இருக்கும் இடத்தில் படகுப் போட்டி நடத்தும்போது நமக்கு குகன் ஞாபகம் வரக் கூடும். அதிகத் தொலைவில் இல்லாமல் சகோதரர்கள் நால்வருக்கும் தனித்தனியே நான்கு ஆலயங்கள் எழுப்பியுள்ளார்கள். இந்த நான்கு ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் பெரும் புண்ணியம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். ஒவ்வோர் ஆலயத்தில் உள்ள சகோதரனும் மற்ற மூன்று ஆலயங்களுக்கும் பக்தன் சென்று வந்தான் என அறிகிறபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, கூடுதலாக அருள்பாலிப்பான் என்பது அடியவர்களின் நம்பிக்கை. ஒரே நாளில் இந்த நான்கு அம்பலங்களையும் தரிசிப்பது நாலம்பல தரிசனம் என்று சொல்லப்படுகிறது.

நாலம்பல யாத்திரை என்பது திருப்பையார் ராமர் கோயிலில் தொடங்கி, பாயம்மலில் உள்ள சத்துருக்கனன் ஆயலத்தில் நிறைவு பெறுகிறது. திருப்பறையார் ராமர் ஆலயம் ஆறடி உயரமுள்ள ராமர் சிலையைக் கொண்டுள்ளது. சங்கு சக்கரத்தோடும் மாலையோடும் காட்சி அளிக்கிறது அந்த அழகிய சிலை. ராமபிரான் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பு, சேதுபந்தனம் கன்னி மாதம் திருவோணத்தை ஒட்டி ஒரு விழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது என்பது. குருவாயூரிலிருந்து கொடுங்கலூர் செல்லும் வழியில் உள்ளது இத்திருக்கோயில்.

இதையடுத்து வழிபட வேண்டிய பரதனுக்கான திருக்கோயில் இரிஞாலக்குடாவில் கூடல் மாணிக்கம் என்ற இடத்தில் உள்ளது. கூடல் மாணிக்கம் ஆலயம் என்றே அது அழைக்கப்படுகிறது. இங்கு பரதாழ்வார் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். நின்ற கோலம். திருப்பையாரிலிருந்து கொடுங்கலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோயில். லட்சுமணப் பெருமாளின் ஆலயம் மூழிகுளம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது. ஆறடி உயர லட்சுமணனை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். லட்சுமண விக்ரகத்தின் கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. மூழிகுளம் ஆலயம் எரணாகுளம் மாவட்டத்தில் உள்ளது.

பாயம்மல் என்ற இடத்தில் உள்ளது புகழ்பெற்ற சத்துருக்கன ஆழ்வார் திருக்கோயில். சின்னஞ்சிறு கோயில். சத்துருக்கன விக்கிரகமும் சிறியதுதான். முதலில் திருப்பையாறு ராமபிரானை நிர்மால்ய தரிசனத்தில் அதிகாலையில் வழிபட்டு, பின்னர் கூடல் மாணிக்கம் பரதனையும் மூழிக்குளம் லட்சுமணனையும் உஷத் கால பூஜை நேரத்தில் தொழுது, நிறைவாக பாயம்மல் சத்துருக்கனை உச்சிக்கால பூஜையின்போது வழிபடுவது மரபு.

இந்த நான்கு சகோதரர்களின் ஆலயங்களையும் ஒரே நாளில் வழிபடும் நாலம்பல தரிசனத்தை மலையாள கர்க்கடக மாதத்தில் மேற்கொள்வது சிறப்பு. (அதாவது ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை.) அவ்விதம் வழிபட்டால், குடும்பத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். சகோதர பாசம் தழைக்கும். நமக்கு அதிக அறிமுகமில்லாதவர்கள் கூட, நம் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் நம் வாழ்வில் வெற்றி பெற உதவுவார்கள் என்பது அடியவர்களின் நம்பிக்கை".

- ரா.வளன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close