Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தோஷம் அள்ளித்தரும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!

ங்கரன்கோவில் - கோமதி அம்மன் என்ற திருநாமத்துடன் அம்பிகை தவம் இருக்க, அவளுக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த புண்ணிய திருத்தலம் இது. வருடந்தோறும் இங்கு நிகழும் ஆடித்தபசு திருவிழாவில் கலந்துகொண்டு தரிசிக்க, கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள் யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

இத்தகு மகிமைகள் கொண்ட திருவிழா இங்கே நடைபெற புராணம் கூறும் காரணம் என்ன?

ஒருமுறை, 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த  வேண்டும்!’ என்று எண்ணினாள் அம்பிகை. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, ''ஸ்வாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்!'' என வேண்டினாள். உடனே சிவபெருமான், ''தேவி... உனது எண்ணம் நிறைவேறும். பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத் தலத்துக்குச் (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்போம். மகா சக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!'' என்றார்.

அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை. தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

அது மட்டுமா? எந்தத் திருக் காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாளோ, அந்தக் காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை!  ஆம். சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள்! சங்கன் - சிவ பக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி. ''சிவன் தான் பெரியவர்!'' என்று சங்கன் சொல்ல, ''இல்லை, விஷ்ணுவே பெரியவர்!'' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

இருவரும் முனிவர்கள் பலரைச் சந்தித்துத் தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், ''அறியாமைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்!'' என்றார். அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதித் திருமேனி நாராயணராகக் கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

இன்றைக்கும் அந்த நாகர்களின் வேண்டுகோளின்படி, சங்கரநாராயணர் திருவருளால் உருவான நாகசுனை தீர்த்தம்,பக்தர்களின் உடல் உள்ளப் பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது.

அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன்  துவங்கும் இந்தத் திருவிழாவில் முத்தாய்ப்பாக... (ஆடி மாதம்) உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும்.

மகத்துவம் மிகுந்த இந்த வைபவம் சங்கரன்கோவில் திருத்தலத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இவ்விழாவில் நீங்களும் கலந்துகொண்டு கோமதி அம்மையின் அருள்பெற்று வாருங்கள்.

- கண்ணன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ