Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்னருக்குத் தொழுநோய் நீக்கிய நாகராஜா!   - ஆவணி மாத தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் எனும் ஊரின் பெயரே, இங்கு கோயில் கொண்டுள்ள நாகர்களினால்தான் அமைந்தது. நாகர்கோவிலில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் நடந்தால், நாகராஜா கோயிலை அடைந்துவிட முடியும்.

தல வரலாறு:
முன்னொரு காலத்தில், புல்லும் புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம் பெண்ணொருத்தி புல் அறுக்க, சுயம்புவாய் இங்கே அமைந்திருந்த ஐந்து தலை நாகராஜா சிலையின்மீது அவளது அரிவாள் பட்டு, சிலையின் தலையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. இது கண்டு அஞ்சிய அந்தப் பெண் பக்கத்துக் கிராமத்திலிருந்து சிலரை அழைத்து வர, அவர்களும் இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்து, அந்த இடத்தில் ஒரு சிறு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். அதைக் கேள்வியுற்றுப் பல
இடங்களிலிருந்தும் மக்கள் திரள்திரளாக அங்கே வந்து வணங்கியுள்ளதாக விரிகிறது வரலாறு.

அதன்பின்னர், இப்பகுதியில் ஆட்சி புரிந்துவந்த குறுநில மன்னரான களக்காட்டு மன்னர் ஸ்ரீவீர உதய மார்த்தாண்ட வர்மாவை பல ஆண்டுகளாக தொழுநோய் வருத்தியது. பின்னர், இந்தத் தலத்தின் சிறப்பை மக்கள்வாயிலாக அறிந்த மன்னர், ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட, அவரது நோய் பூரணமாக குணம் அடைந்ததாம். அதனால் இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறார் மன்னர் ஸ்ரீவீர உதய மார்த்தாண்ட வர்மா. எனவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சிறப்பானவை.

ஆலயத்தின் தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழையும்போது, நாகர்களின் சிலைகள் நம்மை வரவேற்கின்றன. பக்தர்கள் அனைவரும் திருக்குளத்தில் கால்களைக் கழுவிய பின்னரே நாகராஜரை தரிசிக்க உள்ளே நுழைகின்றார்கள்.
நாகராஜா சந்நிதி முழுவதும் பக்தர்கள் கூட்டம், நாகராஜாவின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு வழிபடுகிறது. ‘மந்திரம் என்பதற்கு மனதை விடுவிப்பது�என்று பொருள். இதனால், பக்தர்கள் அனைவரும் தங்கள் மனக்கவலைகளை விட்டு மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுகிறார்கள்.

 

தலத்தின் சிறப்புகள்:
இங்குள்ள நாகராஜர் சுயம்புவாக எழுந்தருளியதால், இன்றுவரை பிரதிஷ்டை செய்யப்படாமலேயே அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறார். இத்தலத்தில் பகவான் ராகுவும் கேதுவும் இணைந்த உருவாகக் காட்சியளிப்பது சிறப்பு. மேலும் அப் பரிவாரத் தெய்வங்களைச் சுற்றி இயற்கையான ஓர் ஊற்று காணப்படுகிறது. அந்த ஊற்றிலிருந்து கிடைக்கும் மண் ஆறு மாதம் வெள்ளை நிறமாகவும், ஆறு மாதம் கறுப்பு நிறமாகவும் நிறம் மாறக்கூடியது. அந்த ஊற்று மண்தான் கோயிலின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நாகராஜா கோவிலுக்கு சமண மதத்தைச் சேர்ந்த பாசுவத முனிவர் வந்து வழிபாடு செய்திருக்கிறார். புத்தரின் உருவம் ஒரு தூணில் செதுக்கப்பட்டிருக்கிறது. சைவம், வைணவம், புத்தம், சமணம் ஆகிய மதங்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இக்கோயில் விளங்கிவருகிறது.

பரிகாரங்கள்:
சர்ப்ப தோஷ பரிகாரம், கால சர்ப்ப தோஷ பரிகாரம், ராகு- கேது பரிகாரம், தொழில் காரியம், திருமண காரியம், குழந்தைப் பாக்கியம் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். ஜாதகப்படி கல்நாகர் பிரதிஷ்டை செய்ய விரும்பும் பக்தர்கள், இத் திருத்தலத்தில் உள்ள நாகர் பீடத்தில் ஒற்றைக் கல் நாகரைப் பிரதிஷ்டை செய்யலாம்.

 

ஒவ்வொரு கோயிலுக்கும் குறிப்பிட்ட சிறப்பு நாட்கள் இருக்கும். அப்படி, நாகராஜா ‘ஆயில்யம்' நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரத்தன்று வந்து பகவானை வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு. முக்கியமாக, ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் மிகச்சிறப்பு.

இங்கு, பெருமாளுக்கு தை மாதம் 10 நாட்கள் திருவிழாவும், திருக்கார்த்திகையன்று சொக்கப்பனை ஏற்றும் திருவிழாவும், விஜயதசமியன்று ஏடு தொடங்கும் விழாவும், முருகப்பெருமானுக்கு சஷ்டி விழாவும் சிறப்புடன் நடைபெறுகின்றன.
கோயில் நடைத் திறப்பு விபரம்: ௐகாலை 4 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடைதிறந்திருக்கிறது.

கட்டுரை மற்றும் படங்கள்: செ.ராஜன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ