Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.39 கோடி வரி செலுத்த மறுக்கும் திருப்பதி தேவஸ்தானம்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில், திருப்பதி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.39 கோடி சொத்து வரியை செலுத்த மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி முதல் 5 கோடி வரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றுடன் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை பக்தர்கள் நன்கொடையாகவும், காணிக்கையாகவும் செலுத்தி வருகின்றனர். இவற்றுடன் பக்தர்கள் நாள்தோறும் செலுத்தும் முடி காணிக்கையும், ஏலம் விடப்படுவதால், அதிலிருந்தும் பல கோடி ரூபாய் வரை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக ஶ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவரம், கோவிந்தராஜ சத்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாகவும் தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைக்கிறது.

திருப்பதியில் உள்ள சத்திரங்கள் மூலம் தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் வருவாயில், திருப்பதி நகராட்சிக்கு ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்த தேவஸ்தான நிர்வாகம் மறுத்து வந்துள்ளது.  மேலும், திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட்டு வருவதால், சொத்து வரி செலுத்த தேவையில்லை என்றும், தேவஸ்தான அதிகாரிகள் கூறி வந்தனர்.

இதனால் கடந்த 12 ஆண்டுகளாக வேதஸ்தானம் வரி செலுத்தாததால், செலுத்த வேண்டிய வரி தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.39 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில், திருப்பதி நகராட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "திருப்பதி தேவஸ்தானம் சேவை நிறுவனமாக இருந்தாலும், சத்திரம் பயன்படுத்துவதற்கு பக்தர்களிடம் வாடகை வசூலிப்பதால், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், இவ்விகாரத்தில் "திருப்பதி நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டார். 

நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தேவஸ்தானம் வரி செலுத்த மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், திருப்பதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், போதிய நிதி இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ