Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுப்ரபாதத்தின் முதல் வரி... தந்தது யார்?


ன்னையாய், குழந்தையாய், காதலனாய், தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும், அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம்  செய்துகொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு ரசானுபவம்!

இதன் அடிப்படையிலான விளைவுதான், திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் வழிபாடுகளும் எனலாம். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு. அவ்வளவு ஏன்? ஜைன மதத்திலும் சுப்ரபாதம் பாடப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், வேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.
விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன், வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன்  கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார், ‘கௌசல்யா சுப்ரஜா ராமா...’ என்று! ஆக, முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.
இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் வேங்கடேச சுப்ரபாதம்.

வேங்கடேச சுப்ரபாதம்

திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.

வேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

2-ம் பகுதி- வேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

3-ம் பகுதியான பிரபத்தியில், திருமகளின் பெருமை குறித்தும், வேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

4-வது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

அரங்கமாநகருளானுக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது.

திருமலையில் வேங்கடேச சுப்ரபாத தரிசனம்

திருமலை வேங்கடவனுக்கு நித்தமும் பல ஸேவைகள் நடை பெறும் என்றாலும், முதலாவதாக இடம்பெறுவது சுப்ரபாத ஸேவைதான். அதிகாலையில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், கோயில் சேவகர்கள், வீணை இசைக் கலைஞர்கள் ஆகியோர் தங்க வாசலை அடைவார்கள். அங்கே துவார பாலகரை வணங்கி, ஸ்வாமியை மனத்தில் தியானித்தவண்ணம் திருக்கதவைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் நுழைந்ததும், கதவு சாத்தப்படும்.

பிறகு, திருச்சந்நிதியில் தீபங்கள் ஏற்றப்பட, வேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க... முதல் நாள் இரவு தொட்டிலில் கிடத்திய ‘போக நிவாஸ மூர்த்தி’யை திருப்பள்ளி எழுந்தருளச் செய்வார்கள். பின்பு, அவரை மூலவருக்கு அருகில், எப்போதும் அவர் இருக்கும் இடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். வேங்கடேச சுப்ரபாதம் முடியும் தருணத்தில் சந்நிதியின் திருக் கதவுகள் மீண்டும் திறக்க, ஸ்வாமிக்கு பாலும் வெண்ணெயும் சமர்ப்பித்து, தீபாராதனை நிகழும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர். இந்த தரிசனத்தையே சுப்ரபாத தரிசனம், விஸ்வரூப தரிசனம் என்பார்கள். அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

பகவானின் அர்சசாவதார நிலையில் (உருவ வழிபாடு - தற்போது நாம் திருக்கோயில்களில் வழிபடும் தெய்விகத் திருவுருவங்
கள்) முதன்முதலாக திருமாலுக்கு சுப்ரபாதம் பாடிய பாக்கியமும் பெருமையும் பெற்றவர் யார் தெரியுமா?
‘பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்’ என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப் பட்டது வேங்கடேச சுப்ரபாதம். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், பி.வி.அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத் தரப்பட்டது.

இவரிடம் இருந்து வேங்கடேச சுப்ரபாதம் பாடும் முறையைக் கற்றுக்கொண்ட அனந்தசயனம் ஐயங்கார், தனது வாழ்நாள் முழுவதும் திருமலை சந்நிதானத்தில் சுப்ரபாத ஸேவையில், அந்தத் தெய்விகப் பாடலைப் பாடி சேவை செய்திருக்கிறார். முதன்முதலில் இசைத்தட்டு வடிவில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வெளியிட்டவரும் அனந்தசயனம் ஐயங்கார்தான். இவருக்குப் பிறகே, திருப்பதி திருமலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில்  சுப்ரபாதம் ஒலிக்கத் துவங்கியது.!

 

- கிளிக் ரவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close