Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவராத்திரியில் ஒன்பது நாள் வழிபாடு எதற்காக?


துகைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டமுண்டன், சும்பநிசும்பர், ரக்த பீஜன் இப்படியோர் அசுரக் கூட்டம் அண்டத்தை ஆட்டிப்படைத்தது.

முப்பத்து முக்கோடி தேவர்கள், மும்மூர்த்திகள், இந்திரன், திக்பாலகர்கள் ஆகிய எவராலும்அசுரர்களை அடக்க முடியவில்லை. உலகைக் காக்கும் பொறுப்பை சுமப்பவர்கள் தேவர்கள். சும்மா இருக்க முடியுமா? சிந்தனையில் ஆழ்ந்தார்கள்!

ஈசன் விழித்துக்கொண்டார். தனது உடலில் ஒன்றியிருக்கும் தேஜஸை அதாவது சக்தியைப் பிரித்து வெளியே எடுத்தார். அதைப் பார்த்து, மற்ற தேவர்களும் தங்களது தேஜஸை ஆற்றலை வெளியே கொண்டு வந்தார்கள். அனைத்து தேவர்களது சக்தியும் ஒன்றாகத் திரண்டு ஒரு பேரொளியாக மாறியது. அந்தப் பேரொளியின் பெயர் துர்கை! ஆண்மையில் உறைந்திருந்த சக்தி, அவசரத்துக்கு உதவவில்லை. எனவே, அந்தப் பேரொளி பெண்மையாகத் தோற்றமளிப்பதையே தேவர்கள் விரும்பினர்.

உண்மையில்... ஆண் பெண் என்பது வெளித் தோற்றத்தில் தென்படும் மாறுபாடே. உள்ளே உறைந்திருக்கும் ஆற்றல், ஆக்கப் பிறந்ததாக இருக்க வேண்டும். இதை மெய்ப்பிப்பதே துர்கையின் தோற்றம். தேவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, அவர்களது ஆயுதங்களும் அம்பாளை வந்தடைந்தன. சுருங்கச் சொன்னால், அனைத்துத் தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே அம்பாள் என்ற தகவலை ‘தேவி மகாத்மியம்’ விவரிக்கிறது.

பிரம்மனின் சக்தி இணைந்திருப்பதால் அவள் ப்ராம்மீ. அவளிடம் மகேசனின் பங்கும் உள்ளதை மாகேஸ்வரி என்ற பெயர் சுட்டிக்காட்டுகிறது. இதைப்போல், முருகப்பெருமான், விஷ்ணு மற்றும் இந்திரன் ஆகியோரது சக்தியையும் தன்னில் கொண்டவள் என்பதை... கௌமாரீ, வைஷ்ணவி, வாராஹி (வராக மூர்த்தியின் அம்சமானவள் என்பதால்) இந்திராணி என்ற தேவியின் பெயர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போரில் ஒவ்வொரு எதிரி விழும்போதும் அந்த வெற்றியைக் குதூகலமாகக் கொண்டாடுவதுண்டு. தேவி, உலகின் எதிரிகளான ஒன்பது அசுரர்களை அழித்தவள். ஆதலால், அவளை ஒன்பது நாட்களாவது கொண்டாடுவோம். அவள் மக்களுக்காகச் செயல்பட்டவள்; மக்கள்

துன்பத்தை அகற்றி, இன்பம் சேர்த்தவள்!

பேரொளியின் பூரண மகத்துவம் இரவில் பளிச்சிடும். இரவில், அவளைத் தரிசிப்பது கண்ணுக்கு விருந்து. ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு. சூரியன், பகலில் ஒளி தருவான். இவள், இருளிலும் ஒளி தருபவள். மனதில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்ற ஆதவனால் இயலாது; தேவியால் இயலும். மற்றவர்களைவிட அம்பாளிடம் தனித் தகுதி உறைந்திருப்பதை உணர முடிகிறது.

 

மக்கள் மனதிலிருந்து பயம் அகல வேண்டும். அவர்களை, ஏழ்மை தழுவக் கூடாது. அவர்களது அறியாமை அகன்று, அறிவொளி மிளிர வேண்டும். ஆக... மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பவள் அவள்.

உலகின் தாய் அவள். பிள்ளைகளில் பாகுபாடு பார்க்காது தாயுள்ளம். பிள்ளை களின் உள்ளத்தில் கெட்ட எண்ணம் தென்படலாம். ஆனால், கெட்ட எண்ணம் கொண்ட தாயுள்ளம் உலகில் இல்லவே இல்லை என்று ஆதிசங்கரர் கூறுவார்!

மனதில் நினைத்தால் போதும்; அவள், மரண பயத்தை அகற்றி விடுவாள். அவளின் திருவுருவை அலங்கரித்து அடிபணிய வேண்டாம்; உள்ளம் அவளை நினைத்தாலே போதும்... அவளின் அருள் கிடைக்கும்.

இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை வளம்பெற அறிவூட்டுபவள் அவள். வாழ்க்கையின் அடித் தளத்தையே தகர்க்கும் ஏழ்மை, மக்களை பற்றாமல் பார்த்துக்கொள்பவள் அவள். ‘பயம், ஏழ்மை ஆகியவற்றை அகற்றி, அறிவொளி அளிக்க எப்போதும் கருணை உள்ளத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் தாய் துர்கை’ என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது (துர்கே ஸ்ம்ரு தாஹரஸி...).
பயம் போக்கும் துர்கை வடிவத்துக்கு மூன்று நாள், ஏழ்மையை அகற்றும் லட்சுமி வடிவத்துக்கு மூன்று நாள், அறிவொளி தரும் சரஸ்வதி வடிவத்துக்கு மூன்று நாள்... இப்படி ஒன்பது நாட்கள் அம்பாளை வழிபடுவது சிறப்பு! மூன்று தடவை சொன்னால் முற்றுப்பெற்றதாக எண்ணலாம். ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்று வேதம் மும்முறை சொல்லும். மூன்று நாட்களில் பயம் அகன்றது. அடுத்த மூன்று நாட்களில் ஏழ்மை அகன்றது. கடைசி மூன்று நாட்களில் அறிவொளி நிலைத்தது. ஆகையால், அம்பாளுக்கு ஒன்பது நாள் பணிவிடை செய்வது விசேஷம்!

நவராத்திரி...

தெரிந்துகொள்ளுங்கள்!

வருடத்தில் நான்கு வகை நவராத்திரிகள் உண்டு. அவை:  பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு, பிரதமையில் தொடங்கும் ‘லலிதா நவராத்திரி’, மாசி மாதம் வரும் ‘ராஜ மாதங்கி நவராத்திரி’, ஆடியில் வரும் ‘மகா வராஹி நவராத்திரி’, புரட்டாசியில் வரும் ‘சாரதா நவராத்திரி’.

ராமபிரான் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்த பிறகுதான், அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று ‘தேவி பாகவதம்’ சொல்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிற்காலச் சோழர் காலத்தில் இருந்துதான் நவராத்திரி திருவிழா அரசு விழாவாக அங்கீகரிக்கப் பட்டது என்பார்கள்.

உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் ‘ராம லீலா’ என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த விழா வில், ராவணன் மீது ராமர் அம்பு எய்து, தீயவை அழிக்கப் படுவதாகச் சொல்வது சிறப்பம்சம்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரவூர் எனும் திருத்தலம். இங்கே வெண்தாமரை பூத்துக் குலுங்கும் ஒரு சதுரக் குளத்தின் நடுவே அமைந்துள்ளது மூகாம்பிகா எனும் சரஸ்வதி கோயில். இவளை தட்சிண மூகாம்பிகா என்றும் கூறுகிறார்கள். குளத்தின் நடுவே உள்ள கோயிலுக்குச் செல்ல சிறிய பாலம் உள்ளது. இங்கே தினமும், இரவு நடை சாத்தும் முன்பு மூலிகைகளைக் கொண்டு தயாரித்த கஷாயத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இதை வாங்கி உட்கொண்டால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள்  நீங்கும் என்பது ஐதீகம்.

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒன்பது நாட்களும் கிருஷ்ணரையே துர்கையாக பாவித்து வழிபடுகிறார்கள். அப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு புடவை உடுத்தி ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close