Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென் திருப்பதி எனும் திருமலைவையாவூர் - புரட்டாசி திவ்யதரிசனம்!

சென்னையிலிருந்து 7௦ கி.மீ. தொலைவிலும்,செங்கல்பட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும்  உள்ளது படாளம் கூட்ரோடு. அதன் வலப்புறம், வேடந்தாங்கலுக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது 'திருமலைவையாவூர் '.


பெயர்க் காரணம்:
ராம - ராவண யுத்தத்தில் மயங்கி விழுந்த லட்சுமணன் மற்றும் வானர சேனைகளை குணப்படுத்த அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றார்.  அத்தருணம், இங்கு இருக்கும் 'தட்சணகருடகிரியை'க்  கடந்து செல்லும் வழியில், இங்கு அருள்பாலிக்கும் பிரசன்ன வேங்கடேசபெருமாள் மற்றும் வராக பெருமாளை தரிசித்து வணங்கினாராம்.  அ வ்வாறு வணங்கும்போது, தன் கையில் இருந்த  சஞ்சீவி மலையைக்   கீழே வைக்காமல், தன் வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றியுள்ளார். இப்படி மலையைக் கீழே வைக்காமல் கரம் மாற்றிய ஊர் ஆதலால் இது ' திருமலை வையாவூர்' என்று அழைக்கப்படுகிறது.


தல வரலாறு:
         முன்பொரு காலத்தில், ஹிரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய்போல் சுருட்டி  ஆழ்கடலினுள் ஒளித்து, தேவர்களுக்குத் துன்பம் இழைத்து வந்தான் . இதனால் வருந்திய தேவர்கள் பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலிடம் சென்று முறையிட்டனர். திருமால் வராஹ அவதாரம் எடுத்துச்   சென்று அசுரனை அழித்து வதம் செய்தார். பின்னர், தன் கோரை ப்பற்களால் பூமியைத் தூக்கி, முன்பைப்போல நிலைப்படுத்தினார் .
அதன்பின், விஸ்வரூபம்  எடுத்த வராக பெருமாள், உலகத்தாருக்கு  அருள்புரிய கருடனை அழைத்து, வைகுண்டத்தில் இருந்து பஞ்சபூதத்தால்  ஆன மலையை எடுத்து வரச்சொன்னார்.  அதன்படியே,  கருடன்  மலையை எடுத்துக்கொண்டு வந்து, சுவர்ணமுகி ஆற்றின் அருகில் வைக்கும்போது,  அதன் சிறுபகுதி அருகில் இருந்த பாலியாற்றங்கரையில் விழுந்தது. இப்படி சுவர்ணமுகி ஆற்றின் அருகில் வைக்கப்பட்ட மலைதான், 'கருடகிரி  என்ற  திருமலை' என்றும், பாலியாற்றங்கரையில் விழுந்த பகுதிதான் 'தட்சண கருடகிரி  என்ற  திருமலைவையாவூர்' என்றும் அழைக்கப்படுகின்றன. 
மேலும்,  இத்தலத்தை தென்திருப்பதி, தென்வைகுண்டகிரி, தென்கருடகிரி, தென்சேஷகிரி, தட்சணகருடகிரி, வராக க்ஷேத்திரம், ராமானுஜ யோககிரி எனப்  பல திருநாமங்களில் மக்கள் அழைக்கிறார்கள்.

தலத்தின் சிறப்புகள்:
           திருமலை வேங்கடேசபெருமாள்  மீது அளவுகடந்து பக்திகொண்டிருந்தார், மன்னர் அபாரஜித வர்ம தொண்டைமான்.  அவர் ஆட்சியில் ஒருமுறை போர்ச்சூழல்  உருவாகவே, திக்குமுக்காடிப்போனார்  மன்னர்.  செய்வதறியாது குழம்பிய மன்னரின் நிலைகண்டு, திருமால் தன் பக்தனின் நாட்டையும்  மக்களையும் காப்பாற்ற எண்ணி,  சங்கு மற்றும் சக்கரம் கொண்டு எதிரிகளைத் துவம்சம் செய்தார் . இதனால், மனமகிழ்ந்த தொண்டைமான் திருமலையிலும், திருமலை வையாவூரிலும் அழகான திருக்கோயில்களைக் கட்டுவித்தாராம். அதையடுத்து, திருமலைவையாவூர் தலத்தில், மன்னர் தொண்டைமானுக்கு ஒருதேரின் மீது செங்கோலுடன்  காட்சியளித்தாராம் பெருமாள். 
இதன் சாட்சியாக,  மலையின் மீது உள்ள பாறைகளில் தேர்சக்கரங்கள் மற்றும் குதிரையின்கால் குளம்பின் அடையாளங்கள் இன்றைக்கும் காணப்படுகின்றன.
         ராமானுஜர் இத்திருத்தலத்துக்கு  எழுந்தருளி, சிறிதுகாலம் வாசம் செய்து, ' திருவைகுண்டகிரி' எனப் பெயரிட்டு,  பெருமாளை வணங்கியுள்ளார். இதனால் இத்திருத்தலம் 'திருவைகுண்டகிரி' என்றும் அழைக்கப்படுகிறது.
சந்நிதிகள்:
          கோயிலுக்குள்   நுழையும்போதே, தலத்தின் ஆதிமூர்த்தியான வராகபெருமாள்  தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார். இங்கு எழுந்தருளியுள்ள அனுமன் ஜெயவீர ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கிறார். சுற்றுப் பிராகாரங்களில் அலர்மேல்மங்கை தாயார் , ஆண்டாள், ராமானுஜர், சுதர்சன நரசிம்மர் ஆகியோருக்குத் தனிதனிச் சந்நிதிகள் உள்ளன .இங்கு தலதீர்த்தமாக 'வராகதீர்த்தம்' உள்ளது.
சிறப்பு நாட்கள்:
பிரம்மன்,  திருப்பதியில்  இரண்டு  விளக்குகளை ஏற்றி , அந்த விளக்குகள் கலியுகம்  முடியும் வரை அணையாமலிருக்க  அருள்புரியும்படி திருமாலிடம் வேண்டினார். பிரம்மனின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள்,  ஐப்பசி மாத திருவோண நன்னாளில் ஒளியுடன் கூடிய வராக ரூபத்தில் எழுந்தருளி, விளக்குகள்  அணையாமல் இருக்க அருள்புரிந்தார். இந்த ரூபத்திலேயே  திருமலைவையாவூரில் கருடனுக்கும் அருள்புரிந்திருக்கிறார், பெருமாள். 
இதனால்,  இத்திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோணத் திருநாளில் பெருமாள் ஜோதிரூபமாக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாதமும் திருவோண நாளில் சிறப்பு தீபதரிசனம்   நடைபெறுகிறது. 
               மேலும், திருமலையைப் போலவே, பிரதிவாரம் வியாழக்கிழமையில், பெருமாள் நேத்திர தரிசனம் தருகிறார். ஆண்டுதோறும்,  சித்திரை மாதம் கள்ளபிரான்  பிரம்மோற்சவமும், புரட்டாசியில் திருமலையில் நடைபெறுவதைப்போலவே மஹாபிரம்மோற்சவமும் , ஆங்கில வருடப்பிறப்பன்று திருப்படி உற்சவமும் , தமிழ் வருடப் பிறப்பன்று லட்சதீபம் ,வைகுண்ட ஏகாதசி,குலசேகராழ்வார் சாற்றுமுறை ஆகியவையும் நடைபெறுகின்றன. பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்கள்  மிகச் சிறப்பு வாய்ந்தவை.
           மேலும், புரட்டாசி மாதம் பக்தர்கள் இவ்வையாவூருக்கு பாதயாத்திரையாகவும் வந்து, வராக தீர்த்ததில் நீராடி, இங்கு அருள்பாலிக்கும் பிரசன்ன வேங்கடேசபெருமாளை வணங்கிச் செல்கின்றனர்.
பரிகாரத் தலம்:
       இங்கு சனிக்கிழமையன்று வராகதீர்த்தத்தில் நீராடினால், பிரம்மஹத்தி தோஷம்  நீங்கும். மேலும், வராக தீர்த்தத்தில் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்தால் திருமணத்தடை நீங்கும் . ஜெயவீர  ஆஞ்சநேயருக்கு அங்கப்பிரதட்ணம் செய்தால், தீராத வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மேலும், இத்தலத்தில்  'துலாபார காணிக்கை' செய்தால், அனைத்து வளங்களும் பெறுவர் என்பது ஐதீகம் .


 நடைதிறந்திருக்கும் நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை , காலை 8 மணி முதல் 12 மணி வரையும்,   மாலை 2 மணி முதல் 7 மணி வரையும் நடைதிறந்திருக்கும்.  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் , காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை  மட்டுமே நடைதிறந்திருக்கும்.
கட்டுரை -  இ.அன்பரசன் (மாணவப் பத்திரிகையாளர் )
படங்கள் - பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின் (மாணவப் பத்திரிகையாளர்)

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close