Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய பெண் கடவுள் சிலை பாகிஸ்தானுக்கு எதற்கு? தகிக்கும் தொல்லியலாளர்கள் 

டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ள 'பெண் கடவுள் சிலைக்கு' உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்துள்ளது பாகிஸ்தான். ' பெண் கடவுள் சிலையை பாகிஸ்தான் கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை' என்று கொதிக்கின்றனர்  இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள்.

பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ பகுதியில் 1926-ம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முக்கியமாக சிந்து சமவெளி நாகரிக காலம் தொடர்பான வரலாற்றை விளக்கும் வகையில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வெண்கலச் சிலை, சிந்து மாகாணப் பகுதியில் பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலை 10.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. 

இந்தச் சிலையை ஆராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், கி.மு.2500-ம் ஆண்டுக்கு முற்பட்ட கலைப்படைப்பாக இச்சிலைக் கருதப்படுவதாகவும், இந்தச் சிலை ஒரு பெண் நடனமாடுவது போன்ற வடிவத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இச்சிலை, ஐரோப்பாவில் உள்ள லியானார்டோ டாவின்சியின் மோனலிசா ஓவியம் போன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் சர் மார்டிமர் வீலர் என்பவர் கடந்த 1946-ம் ஆண்டு, இச்சிலையை டெல்லிக்குக் கொண்டு வந்து கண்காட்சியில் வைத்தார். 

இந்நிலையில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. இதனைத்தொடர்ந்து, பல ஆண்டுகளாக இச்சிலைத் தொடர்பான பிரச்னை எதுவும் எழாத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல், இச்சிலைத் தொடர்பான பிரச்னையை பாகிஸ்தான் அரசியல் கட்சியினர் கையில் எடுத்தனர். 

இந்தியாவில் உள்ள நடனமாடும் பெண் சிலையை, பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு, இந்திய அரசுக்கு முதன் முறையாகக் கடிதம் அனுப்பியது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், தற்போது இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ள அந்நாட்டு அரசியல் கட்சியினர், பாகிஸ்தான் நாட்டின் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக போற்றப்படும் 'நடனமாடும் பெண் கடவுள் சிலையை' இந்தியாவிடமிருந்து மீட்டு, பாகிஸ்தான் கொண்டு வரவேண்டும் என்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நீதிமன்றத்தில், ஜாவத் இக்பால் ஜாப்ரே என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இவ்விகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொல்லியல் துறை வல்லுநர் குடவாயில் பாலசுப்ரமணியன், "குறிப்பிட்ட பெண் கடவுள் சிலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்துக்கு முன்பு ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்த சமயத்தில் கிடைத்த அரியப் பொக்கிஷம். அதனால், அவற்றைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. முக்கியமாக பாகிஸ்தான் நாடு, கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை போற்றிப் பாதுகாக்கும் நாடு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதி காலத்தில் இந்து மதத்தை வழிபட்ட மக்கள் வாழ்ந்து வழிப்பட்ட பெண் தெய்வத்தின் சிலையாகத்தான், குறிப்பிட்ட அந்தச் சிலை இருக்கிறது. அப்படியென்றால், அந்தப் பகுதியில் இந்து மதத்தை வழிப்பட்ட மக்கள் வாழ்ந்தது உண்மை என்று தெரிய வருகிறது. இஸ்லாம் மார்க்கத்தை விரும்பி வணங்கும் மக்கள் கொண்ட பாகிஸ்தான், இந்த ' இந்திய பெண் கடவுள் சிலையை' மீட்டு என்ன செய்யப்போகிறது? 

இந்தியாவின் செல்வங்கள் எல்லாம் பல நாடுகளிடம் இன்றும் இருக்கிறது. பல நாடுகளும் அவற்றை இன்றுவரை சொந்தம் கொண்டாடி வருகிறது. அவற்றில் கோகினூர் வைரமும் ஒன்று. இதுபோன்று ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் போர்த்துக்கீசியர் ஆட்சிக் காலங்களில் எல்லாம் இந்தியாவின் செல்வங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை எல்லாம் அள்ளிச் சென்று, இன்று பல்வேறு நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அவற்றில் ஒன்றுகூட இன்றுவரை இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை. அந்த அடிப்படையில், இந்தப் பெண் கடவுளின் சிலையை திருப்பிக் கேட்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று தகித்தார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறுகையில், அண்மைக் காலங்களில் கடத்தப்பட்ட சிலையாக இருந்தால், திருப்பித் தருவது தர்மம். பல ஆண்டுகளாகப் போற்றி பாதுகாத்து வரும் பொக்கிஷத்தை, அவர்கள் கேட்டு வழக்கு தொடுத்திருப்பது தவறான அணுகுமுறை. முக்கியமாக நட்புணர்வு அடிப்படையிலேயே, இப்பிரச்னையை பாகிஸ்தான் அணுகியிருக்க வேண்டும். 

34 உலக நாடுகளுடன், இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த 34 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இல்லை. அதனால், பாகிஸ்தான் வேண்டுகோள் கடிதமும் முன்வைக்க முடியாது. இந்தச் சிலையை இந்தியா, பாகிஸ்தானிடம் கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இந்தியாவுக்குக் கிடையாது" என்றார். 

பாகிஸ்தானுக்குச் சொந்தமான பெண் கடவுள் சிலையை, இந்தியாவிடம் இருந்து மீட்டு வருவது குறித்து யுனெஸ்கோவிடம் முறையிட பாகிஸ்தான் அரசு தற்போது பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் தேசிய கலை அருங்காட்சியக தலைமை இயக்குநர் ஜமால் ஷா கூறியுள்ளார். இதனால், நடனமாடும் பெண் கடவுள் சிலை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

- ரா.வளன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close