Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 1

திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு)

முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, திருப்பரங்குன்றம்!


மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன. மலையடிவாரத்திலேயே, கோயிலின் முகப்பு கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. உண்மையில், கோயிலின் கோபுர வாசலுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தையும், அதன் முகப்பையும்தாம் நாம் முதலில் எதிர்கொள்கிறோம்.


முகமண்டபமான இதற்கு, 'சுந்தரபாண்டியன் மண்டபம்' என்றும் பெயருண்டு. வரிசைகட்டிப் புறப்படும் குதிரை வீரர்களும் ஏராளமான சிற்பங்களுமாகக் காட்சியளிக்கிறது, இந்த மண்டப வாயில் பகுதியிலேயே, விநாயகர் மற்றும் துர்கை பிரதட்சணமாக வருவதற்கு வகை செய்திருக்கின்றனர். கருப்பண்ணசாமியை வழிபடுவதற்கான ஏற்பாடு. மலையடிவாரக் கோயில் என்றே குறிப்பிட்டாலும், உண்மையில் மலையடிவாரத்திலிருந்து தொடங்கி, மலையின் உள்பகுதிவரை கோயில் வியாபித்திருக்கிறது.

 

பிரம்ம தீர்த்தம் (அல்லது பிரம்ம கூபம்). இதை சந்நியாசிக் கிணறு என்கிறார்கள். நோய்களைத் தீர்க்கும் குணமுடைய இந்தத் தீர்த்தத்திலிருந்துதான், முருகப்பெருமானுக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது. அழகான கொடிமரம்; அதற்கு முன்பாக மயில், நந்தி, மூஷிகம் என்று வாகனங்கள். இந்தத் தலத்தின் சிறப்புகளில், இவ்வாறு மூன்று தெய்வங்களுக்கான மூன்று வாகனங்களும் வரிசையாக அமைந்திருப்பதும் ஒன்றாகும்.


திருப்பரங்குன்றம் என்பது என்ன பெயர்? இந்த மலையை வானிலிருந்து பார்த்தால், சிவலிங்க வடிவில் தோற்றம் தரும். எனவே, பரம்பொருளே மலையானார் என்னும் பொருளில், இது பரங்குன்றம் ஆனது. இறைவனார், பரங்கிரிநாதர் என்று திருநாமம் பெறுகிறார். 
மலைச்சாரலில் ஸ்ரீதடாதகைப் பிராட்டியார் (மீனாட்சியம்மையின் பால திருநாமம்) - ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே, ஆதியில் முருகனுக்கு அம்மையும் அப்பனும் காட்சிகொடுத்த இடமாகக் கருதப்படுவதால் அறுபடை வீடுகளில் முக்கியமானதாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது.
கம்பத்தடி மண்டபத்திலிருந்து வலதுபுறமாகச் சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம். மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கியபின்னரே, முருகனைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்பது மரபு.


முருகன் சந்நிதிக்கு அருகில், சிவனாரை எதிரெதிராக நோக்கியபடி... ஸ்ரீமகாலட்சுமியுடன் அருள்பாலிக்கிறார், ஸ்ரீபவளக்கனிவாய்ப் பெருமாள். ஆமாம், திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து அவதரித்த சௌந்தரவல்லியும் அமிருதவல்லியும், முருகப் பெருமானை மணமுடிக்க வேண்டி, முறையே நம்பிராஜன் மகளான வள்ளியாகவும், தேவேந்திரன் மகளான தெய்வானையாகவும் வளர்ந்தனர்.

தேவேந்திரனும் இந்திராணியும், சூரபத்மனால் பற்பல கொடுமைகளுக்கு உள்ளாகி, தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்டு ஒளிந்து வாழ்ந்த காலத்தில், செல்வமகளைத் தங்களுடைய ஐராவத யானையிடம் விட்டுச் சென்றனர். யானை (அது, தேவ யானை) வளர்த்த பெண் என்பதால், அவள் தெய்வானை (தெய்வ யானை - தேவ சேனா - தேவ குஞ்சரி) ஆனாள். மருமகனையும் மகளையும் புளகாங்கிதத்துடன் கண்ணுறும் திருமால் - திருமகள் சந்நிதியில், அவர்களுடன் மதங்க முனிவரும் காட்சி தருகிறார் (இந்தப் பெருமாள், மீனாட்சியம்மன் திருமணத்தின்போது, மதுரைக்கு எழுந்தருள்வார்).

முருகக் கடவுளின் திருமணத்தில் பங்கு பெற சகலரும் வந்து தங்கியதால், இந்தத் தலத்துக்கு சிறப்புகள் அதிகம். திருமணம், பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றது. மூலவரான முருகனுக்கு அபிஷேகம் இல்லை. எண்ணெய்க் காப்பும் புனுகும் சார்த்துகின்றனர்.

திருமண நாளன்று தங்கக் கவசம். அபிஷேகங்கள் யாவும் அவருடைய ஞானவேலுக்கு மட்டுமே நடைபெறும். அருணகிரிநாதர், இந்த முருகனை மனமுருகப் பாடியுள்ளார்.

கோயில் மகாமண்டபத்தில் முருகனின் சகோதரர்களாகப் போற்றப்படும் நவ வீரர்கள் (வீரபாகு உள்ளிட்ட ஒன்பது வீரர்கள்), பைரவர், சந்திரன், உஷா - பிரத்யுஷா உடனாய சூரியன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

வசந்த மண்டபத்தில் உற்சவ முருகனின் தரிசனம். ஸ்ரீவிநாயகர், சைவ நால்வர், அறுபத்துமூவர் ஆகியோர் காட்சி தர... கிழக்குப் பார்த்த சந்நிதியில் ஸ்ரீசெந்திலாண்டவர். அருகில் ஸ்ரீசனி பகவான் சந்நிதி. இங்கு சனிக்கு மட்டுமே சந்நிதி. பிற நவக்கிரகங்கள் இல்லை.
திருப்பரங்குன்ற முருகனின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close