Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி ஏழுமலையானுக்கு இஸ்லாமிய பக்தர் வழங்கிய காணிக்கை!


 வெங்கடேசப் பெருமாளுக்கு, அதிகாலை முதல் நள்ளிரவு வரை பலவிதமான ஆர்ஜித சேவைகள் நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானது 'அஷ்டதள பாத பத்மாராதனை' சேவை. இந்த சேவை தொடங்கப்பட்ட விதமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகும்.
'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது.


ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு மலர் என வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ததை மீண்டும் பயன்படுத்தலாம். வில்வத்துக்கும் நிர்மால்ய தோஷம் கிடையாது!
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குரிய பூஜையில் 108 தங்கத் தாமரைப் பூக்களை நன்கொடையாக வழங்கியவர் ஒரு இஸ்லாமிய பக்தரென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லாவா? ஆனால் அவர் வைத்த வேண்டுகோளின்படியே செவ்வாய்கிழமைதோறும் 'அஷ்டதள பாதாள சேவை' இன்றளவும் நடைபெற்று வருகிறது. 


புராண இதிகாச காலத்தில் ஆதிசேஷன் கபில மகரிஷியிடம் இந்த அஷ்டதள பாத பூஜையைப் பற்றிக் கூறி இருக்கிறார் என்று கூறுகிறது வெங்கடேஸ்வர மகாத்மியம். பிரம்ம தேவன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்களுடன் மற்றும் தேவதா கணங்களுடன் தேவகங்கையில் பூக்கும் தங்கத்தாமரைப் பூக்களைக்கொண்டு வெங்கடேசப் பெருமாளுக்கு இந்தப் பூஜையை செய்தாராம். இதில் மனம் மகிழ்ந்த வெங்கடேசப் பெருமாள், பிரம்ம தேவனுக்கு லோக கல்யாண வரத்தை வழங்கினார். இப்போது இந்த 108 நாமவளி பூஜையை நாம் செய்தால், 16 வகையான ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஒருமுறை ஹைதராபாத்திலிருந்து வந்த ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருப்பதிக்கு வந்து ஏழு மலைகளையும் நடந்தே கடந்து சென்று திருமலையை அடைந்தார். அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கவே அதைக் கேட்ட அர்ச்சகர்கள் திடுக்கிட்டு ஆச்சர்யமுற்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் தேவஸ்தான செயல் அலுவலரிடம் (E.O) அனுப்பி வைத்தனர். அவரை சந்தித்தவர், “ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரைச் சேர்ந்த சிறிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்தவித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், மங்களா சாசனம் ஆகியவற்றையும் பாடுவோம். “எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திர சத என்பது இறைவனின் திருநாமத்தைப் போற்றிக் கூறும் 108 முறை போற்றுவது). இதுதவிர, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.  

இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்ற சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால், எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் சில பூக்களை மட்டும்தான் என் கொள்ளுத் தாத்தாவால் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிதளவு பூக்களைச் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிதளவு பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறேன்” என்று கூற, அச்சரியத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல் அலுவலர், “என்ன, நீங்கள் 108 தங்கப் பூக்களைச் சேர்த்துவிட்டீர்களா?'' என்றார்.

 

 

திருப்பதி திருமலையின் அழகிய தரிசனத்தை இந்த வீடியோவில் காணவும்

“ஆம்!” என்ற ஷேக் மஸ்தான்,  “ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பூக்களைச் சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட ஒரு பூவும் மூன்று சவரன். 108 பூக்களின் மொத்த எடை சுமாராக இரண்டரை கிலோ)
“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின்போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே. எங்கள் கோரிக்கையைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் எங்கள் தாத்தாவின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும். இதுதான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
சற்று நேர அமைதிக்குப்பின் செயல் அலுவலர், “எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். வெங்கடேசப் பெருமாள் சேவையில் பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தார். அதன்படியே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி அளவில், திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

1984-ல் திருமலையில் ஏழுமலையான் சந்நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றளவும் நடக்கிறது.
திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் ரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.

- எஸ்.கதிரேசன்

எடிட்டர் சாய்ஸ்