Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழநிமலையில் இருப்பது முருகனா? தண்டாயுதபாணியா?


போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநிமலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி, தண்டாயுதபாணி வடிவை உருவாக்கி, ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.


போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். 
போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின்  திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும்  உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.


நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது, மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே அதற்குக் காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.
தினமும் இரவில் முருகப்பெருமான்  மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தை, தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது, இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்துப் பிழிந்து, தீர்த்தமாக வழங்குகின்றனர்.


தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
காலை பூஜையின்போது  தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது, காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம்; உச்சிக் காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம்; சாயரட்சையில் ராஜ அலங்காரம்; ராக்காலத்தில் முதிய வடிவம்.

மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதிக் காப்பு அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம், தற்போது செய்யப்படுவது இல்லை.

 


மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை தண்டாயுதபாணி பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக்காரர்களும் இறைவனின் புகழ் பாட, மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகின்றன. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு, பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக, அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.


மூலவர் சந்நிதி, வழக்கமாக காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திருவிழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்கால பூஜை முடியும் வரையிலும் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பழநியில் பக்தர்களது காவடிப் பிரார்த்தனை பிரசித்தம். 


பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது.
‘போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுதபாணிதான். தேவஸ்தானத்தின் பெயரும் தண்டபாணிதான். ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் தண்டாயுதபாணி என்றே பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.


- எஸ்.கதிரேசன்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close