Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இதை வகுளாதேவியின் (கிருஷ்ணாவதாரத்தில் வரும் யசோதாதான் அவர்) மேற்பார்வையிலேயே பெருமாளுக்குரிய நைவேத்தியங்கள் தயாராவதாக ஐதீகம். இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று, திருப்பதி என்றாலே லட்டு, லட்டு என்றாலே திருப்பதி என்றாகி விட்டது.

ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டாலும் ஒருபுதிய மண்சட்டியிலே தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

பெருமாள் அணிந்துகொள்ளும் உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த தேவஸ்தான அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு 'மேல்சாத்து வஸ்திரம்' என்று பெயர். வெள்ளிக்கிழமை மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த சில வேளைகளில் ஆண்டுக் கணக்கில்கூட காத்திருப்பார்கள்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

 திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் 'சிலாதோரணம்' என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்று சொல்கிறார்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சாத்துகின்றார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால், கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள், திருப்பதிக்கு விமானத்தில் வருகின்றன.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது. இந்த சமயத்தில் 7 வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் தேரில் எடுத்துச் செல்லப்படுகிறார். பக்தர்களுக்கு காண கிடைக்காத காட்சியாகும்

எல்லாவற்றையும் விட ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரத்துடன் சுவாமி சேவை சாதிக்கிறார். இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிகின்றனர். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. இந்த விழாவில் கலந்துகொண்டு வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • -எஸ்.கதிரேசன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close