Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியது யார் தெரியுமா?

அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.  புத்தாடை, பட்சணங்கள், பட்டாசுகள் மட்டுமின்றி, நாம் அறிந்து கொண்டாடவேண்டிய இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் உண்டு இந்த பண்டிகை நாள் குறித்து.

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

 

தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். அவர் தோன்றிய நாளே தீபாவளி.


சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ரங்கத்தில் திருவரங்கநாதர் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று திருவரங்கனுக்கு விசேஷமாக `ஜாலி அலங்கார’ வைபவம் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டு மகிழ்வர்.

 தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

 

 புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

 உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர்.

 வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தன்தெராஸ்’ என்று பெயர்.
 பீகாரில் ஒரு பிரிவினர், மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
 மத்தியப்பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.

 உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக... ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று புத்தாடை மற்றும் ஆபரணம் வாங்கும் வழக்கமில்லை.


 கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!

 மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.
 நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைப்பார்கள்.


எண்ணெய்க் குளியல் எப்போது?

சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக் கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், ‘தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூற வேண்டும்’ என்றும் ‘அன்று எண்ணெயில் லட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் உறையவேண்டும்’ என்றும் பகவானிடம் வேண்டி வரம்பெற்றாள் பூமாதேவி.

எனவே தீபாவளி திருநாளில், அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6.00 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15-மணிக்கு நீராட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close