Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செந்தேனாக இனிக்கும் செந்திலாண்டவர்... கந்த சஷ்டி சிறப்புப்பகிர்வு - 6


திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் கோயில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது.


 கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கின்றது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது. மேற்கு ராஜகோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.


 முதல் பிராகாரத்தில் தெற்கில் 'ஜெயந்திநாதர்' எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வானைக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.


மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர, இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.


இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன்மணி அம்மை, பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவகிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு.


இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, அவர் கையில் வேலும், அருகில் தேவியரும் இல்லை.


கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும், கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!


முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.


திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும், நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேஸ்வரனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப்படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.


மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகின்றன.


மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.


மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை 'தோழன்சாமி' என்பார்கள். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.


இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு, ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.


 திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் 'மாப்பிள்ளைச் சாமி' எனப்படுகிறார்.


ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறுமுகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.


முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பார்கள்.


அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.


தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
 

- எஸ்.கதிரேசன்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close