Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மச்சான் சாமி' என்று முருகனை யார் அழைக்கிறார்கள்? (கந்த சஷ்டி விழா சிறப்புப் பகிர்வு - 7) #KandaSashtiSpecial

மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்!


காயத்ரி மந்திரத்தின் எழுத்துக்களே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம்.


முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.


முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க, வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தப்பெருமானை தரிசிக்க வேண்டும்.


போர் நடந்த இடம் என்பதால், செந்திலாண்டவர் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது.
மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணிகலன்கள் அணிவிக்கப்படுகின்றன.


உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.


மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.


இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு  அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.


மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.


ஸ்ரீ செந்தில் ஆண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல்தான்கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.


தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.


செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் 'சிங்க கொழுந்தீசர்' என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.


கி.பி. 1670-ம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.


‘இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!’ என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.


பிரிட்டிஷ் - கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.


ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைரவேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.


 திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர். மாசித் திருவிழாவின் 8-ம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.


தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும். கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள்வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.


திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


ஆவணித் திருவிழாவின் 7-ம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.


விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து, முருகன் கோயிலுக்குள் போவார்.


- எஸ்.கதிரேசன்


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close