Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 9

ஒளிமயமான வாழ்வை அடியவர்களுக்கு உருவாக்கித் தருகின்ற உமையம்மையையும் சிவபெருமானையும் கயிலை மலையில் தேவர்களும் மூவர்களும் தோத்திரம் செய்து வணங்கி மகிழ்ந்து திரும்புகின்றனர்.
சிவபெருமானும், தேவியும் கயிலையில் தனித்திருக்கின்றனர். அப்போது இறைவி நாயகனை வணங்குகிறாள்.


‘‘நாயகரே! தற்போது என் நாமம் ‘தாட்சாயிணி’ என உள்ளது. தட்சனின் மகள் என்ற பெயரோடு நான் இருக்க விரும்பவில்லை. என் தந்தையாகிய தட்சன், தங்களை மதிக்காது வேள்வி செய்தார். அவ்வேள்வியில் அனைத்து தேவர்களையும் வேறு கலந்துகொள்ளச் செய்தார். சிவ நிந்தை புரிந்த அவரின் புதல்வி என்ற அவப்பெயர் நீங்கவேண்டும். இதற்குத் தாங்கள்தான் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’’ என்றாள் தேவி.


புன்னகை புரிந்த பரமேஸ்வரன்:
‘‘இமாசல வேந்தன் நெடுநாளாக  மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறான்.  அவனது வளர்ப்பு மகளாக நீ வளர்ந்து, பார்வதி என்ற நாமம் பெற்று என்னை நோக்கி தவம் செய்க! உரிய தருணத்தில் உன் நாயகனாக நான் வந்தடைகிறேன்” என்றார்.
தாட்சாயணி பார்வதியாக மாறினாள். ஐந்து வயதிலேயே சிவனை நோக்கித் தவம் புரிந்தாள். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால், தேவர்கள் அனைவரும் சிவ நிந்தை புரிந்தவர்கள் ஆகிவிட்டனர். அந்தத் தீயச் செயலின் காரணமாகவே அவர்கள் சூரபத்மனின் அடக்குமுறையில் இடர்ப்பட்டனர்.


மனம் வருந்திய தேவர்கள் ‘மகாதேவனே! மன்னியுங்கள்’ என மன்றாடினர். ‘சூராதி சூரர்களை மாய்க்க தாங்கள்தான் தங்களை நிகர்த்த ஒரு மகனை உருவாக்கித் தர வேண்டும்’ என அகம் உருகி வேண்டினர்.
இந்திரன், பிரம்மா, திருமால் மற்றும் தேவர்களின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், ‘பார்வதியை மண முடித்த பிறகு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். சூர சம்ஹாரத்துக்காகவே சுப்ரமண்யன் தோன்றுவான்’ என்றார்.


வெற்றிவடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்! ‘சுற்றி நில்லாதே! போ பகையே, துள்ளி வருகுது வேல்!’ என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். அழகு, அறிவு, ஆற்றல் என அனைத்திலும் சிறந்தவர் ஆறுமுகன். 
இளமையும் எழிலும் கொஞ்சும் ஆறுமுகனின் அழகைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் திருமால். அம் மகிழ்ச்சியில் பெருகிய ஆனந்தக் கண்ணீர்த் துளிகளில் அவதரித்த இரண்டு பெண்கள்தான் ஆனந்தவல்லி, சுந்தரவள்ளி. அவர்கள் இருவரையும்தான் தெய்வானை, வள்ளி என மணந்துகொண்டார் முருகப் பெருமான். அதனால்தான் ‘திருமால் மருகன்’ என அவர் போற்றப்படுகிறார்.


அழகிற்சிறந்த திருமாலே வியந்து பாராட்டிய அழகு, முருகனின் அழகு! அறிவிற்சிறந்த தட்சிணாமூர்த்தியான சிவபெருமானே உபதேசம் கேட்ட பெருமைக்குரியது முருகனின் அறிவு! ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை அடியோடு அழித்தது அந்த வேலின் ஆற்றல்.


‘கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னை பாலன் என்று இருந்தேன்; பரிசிவை உணர்ந்திலேன் யான் மால் அயன் தமக்கும் ஏனைவானவர் தமக்கும் மூல காரணமாக நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ! என்று, போரின் முடிவில் திறமைமிக்க சூரபத்மனே முருகனின் ஆற்றலை வியந்து போற்றுகிறான். சிக்கலிலே வேல்வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் செய்து, வெற்றி வேந்தனாக விளங்கினார் முருகன்.


வீரத்தில் சிறந்த முருகன், கடல் போன்ற கருணை மனம் கொண்டவர். ஆதலால், சூரபத்மனையே சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு, அவனுக்கும் கௌரவம் அளித்தார்.


இச்சாசக்தியாக வள்ளியும், க்ரியா சக்தியாக தெய்வயானையும் விளங்க, ஞானவேல் தாங்கி, சேவற்கொடி ஏந்தி, மயில் வாகனத் தில் வலம் வரும் முருகப்பெருமானை நம் மனவாகனத்தில் ஏற்றி வைப்போம். பதினாறு பேறுகளையும் தன் பன்னிரண்டு கைகளாலும் பக்தர்களுக்கு வாரி வழங்குவான் வடிவேலன்!

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close