Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேரின் குடை சாய்ந்தது ஆட்சியாளர்களுக்கு ஆபத்தா?   மருதமலை பகீர் 

 


கோவை மருதமலை முருகன் கோயிலின் தங்கத்தேரின்  குடை சரிந்து இரண்டு ஆண்டுகளாகியும் அதை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், ஆட்சியாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும் என்று ஆன்மீக பெரியவர்கள் முணுமுணுக்கிறார்கள். 

 

கோவை, மருதமலைமுருகன் கோயிலில் கடந்த 2003ல் 19 கிலோ எடையுள்ள தங்கத்தேர் தயாரானது. பூம்புகார் மூலம் தேரில் தங்கமுலாம் பூசப்பட்டது. இதன்பிறகு தங்கத்தேரை பக்தர்கள் இழுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர். இதற்கு கட்டணமாக 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


 இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தங்கத்தேரை அதற்குரிய இடத்தில் நிறுத்தியபோது தேரின் மேல்பகுதியில் அமைந்துள்ள குடை சேதமடைந்ததோடு சாய்ந்தது. இதுகுறித்து உடனடியாக கோயில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தங்கத்தேரை யாருக்கும் சரிசெய்ய முயற்சிக்கவில்லை.  இதையடுத்து தங்கத்தேரை பக்தர்கள், குடை சாய்ந்த நிலையிலேயே தற்போதுவரை நேர்த்திக்கடனை  செலுத்திவருகின்றனர். தங்கத்தேரில் குடை சாய்ந்திருப்பது குறித்து சென்னையில் உள்ள அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கும், கோயில் நிர்வாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரியும். இருப்பினும் ஏனோ தங்கத்தேரில் சாய்ந்த குடையை சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்யவில்லை.


 இதுகுறித்து சிவபக்தர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பேரூர் பி.ராஜேந்திரன் கூறுகையில், "மருதமலை முருகன் கோயிலின் தங்கத்தேர் குடைசாய்ந்திருப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல. குறிப்பாக, ஆட்சியளார்களின் உடல் நலம் பாதிக்கப்பட தெய்வக்கோபமும் ஒரு காரணம்.  கோயிலின் தங்கத்தேரின் குடை சாய்ந்தவுடன் அதை உடனடியாக சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், அதை சரிசெய்யாமல் இருந்துவிட்டார்கள். சென்னையில் உள்ள  அறநிலையத்துறை கமிஷனர் மருதமலைக்கு வந்து தங்கத்தேரை ஆய்வு செய்தபிறகே குடையை சரிசெய்ய முடியும் என்று கோயில் நிர்வாகத்தினர் சொல்கின்றனர். இரண்டு ஆண்டுகளாகியும் கமிஷனர் ஏன் வரவில்லை. மேலும் கோயிலில் அன்னதான திட்டம், கேமராக்கள் பழுது, போலி சீட்டுக்கள் அச்சடிப்பு... என்கிற பல்வேறு வகையில் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. இவை உண்மைதானா? என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஏனோ  மௌனம் சாதிக்கிறார்கள். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம்"என்றார்.

 இதுகுறித்து மருதமலை கோயில் உதவி ஆணையர் பழனிகுமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தங்கத்தேரின் குடை சாய்ந்ததாக உங்களுக்கு யார் தகவல் தெரிவித்தது என்று சொல்லுங்கள். அதன்பிறகு உங்களிடம் தகவலைச் சொல்கிறேன்'' என்றார். அடுத்து 'தங்கத்தேரின் குடை சாய்ந்துள்ளதா' என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்த போது அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக உங்கள் விருப்பம் போல எழுதுங்கள் என்றார். குடை 
சாய்ந்திருப்பதை போல படமும் உள்ளதே என்று மீண்டும் கேட்டதற்கு அதற்கும் அவர் பதிலளிக்காமல் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். 
    
 

எஸ்.மகேஷ் 

 

 
 

எடிட்டர் சாய்ஸ்