Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சித்திரை-1 தமிழ் புத்தாண்டே அல்ல!'- தமிழறிஞர் சுப.வீ Vs ஜோதிடர் ராமகிருஷ்ணன்

சித்திரை -1 தமிழ்ப்புத்தாண்டே அல்ல!  சித்திரை - 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என ஒருசாரார் கொண்டாடுவதைப் போல ஒருசாரார் தை-1- ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என வாதிடவும் செய்கிறார்கள். இதோ இங்கே தமிழறிஞரும் பேராசிரியருமான சுப.வீரபாண்டியனும், ஜோதிட நிபுணர் பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணனும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர். 

சித்திரை

தமிழறிஞரும் பேராசிரியருமான சுப.வீரபாண்டியன்:

தமிழர்களின் புத்தாண்டு எது என்பதில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் இருந்து, ஆவணி மாதம்தான் புத்தாண்டின் தொடக்கம் என்ற நடைமுறை இருந்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், 15 -ம் நூற்றாண்டில் இருந்து, அதாவது 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்த,விஜய நகரப் பேரரசை ஆட்சி செய்த  நாயக்கர்களின்  காலத்தில்தான் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக  ஏற்றுக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.

சுப.வீஆனால், தமிழறிஞர்கள் எல்லாம் 1921-ம் ஆண்டில் சென்னையிலும், 1935 -ம் ஆண்டில் திருச்சியிலும் கூடியபோது, திருவள்ளுவர் ஆண்டே தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை மாதத்தையே ஆண்டின் தொடக்கமாகவும் அறிவித்தனர். அதை அப்போதே பலரும் ஏற்றுக்கொண்டனர். இயேசுநாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக்  கணக்கிடப்படுகிறது. இவற்றுள் எதுசரி என்ற ஆராய்ச்சியும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் ஒன்றை கவனிக்கலாம்.  

சித்திரை-1 புத்தாண்டுக்குப் பின்னால், புராணக்கதை ஒன்றும் புனையப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுகள் யாவும் கண்ணனின் குழந்தைகள் என்றும் கூறுகிறார்கள். இப்போது வழங்கப்படும் 60 ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள். தமிழ்ப் பெயர்கள் என்றால் ஒரு பாமரருக்கும் புரியும் அல்லவா?  

தமிழ் ஆண்டுகள் அறுபதும் தொடர் வரிசை ஆண்டுகள் அல்ல. சுழற்சிமுறை ஆண்டுகள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும். ஆனால், ஆங்கில ஆண்டு, திருவள்ளுவராண்டு, ஹிஜ்ரி ஆண்டு போல தொடர் வரிசை ஆண்டு அல்ல. இதனால், அறிவியல் அடிப்படையில் ஆண்டுகளைக் கணக்கிடுவது கடினம்.வானியல் அடிப்படையில் பூமியில் தை மாதம்தான் உத்தராயண காலம் தொடங்குகிறது. சித்திரை -1 க்கு இருக்கும் சிறப்பு என்று சொல்வோமானால் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதுதான்.

ஜோதிட நிபுணர் பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன்:

உலகத்தில் யாருக்கும் இல்லாத சில மரபுகள் தமிழர் மரபில் இருக்கின்றன. தமிழரின் மரபில் அனைத்து வகையான வழக்கங்களும் வானியல் சார்ந்தே இருந்திருக்கிறது. தமிழர் தம் வாழ்வியலில் சூரியனின் பயணத்தை வைத்தே பன்னிரண்டு தமிழ் மாதங்களை ஏற்படுத்தினர். சூரியன் பன்னிரண்டு வீடுகளைச் சுற்றி அதே இடத்துக்கு வருகின்றது. ராமகிருஷ்ணன்

வடமொழி சொற்களைக் கொண்ட 60 வருடங்கள் என்பவை பின்னால் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டது எனலாம். சூரியனின் பயணத்தை தமிழர்கள் இரண்டாகப் பிரித்தனர். கிழக்கிலிருந்து உதயமாகும் சூரியன் மேற்கு திசைக்கு வடமுகமாக செல்லக்கூடியதை வடபாதை (உத்தராயணம்) என்றும் தெற்கு முகமாக செல்லக்கூடியதை தென்பாதை (தக்ஷிணாயனம்) என்றும் வழங்கினர். 

இதில் உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலகட்டமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலகட்டம் என்பது தக்ஷிணாயனம் என்று வழங்கப்படுகிறது. 
நம் எல்லோருக்குமே தெரியும் தைத் திருநாள் என்பது உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. புது நெல்லை அறுவடை செய்து அதை உழவுக்கு உறுதுணையாக இருந்த கதிரவனுக்கும்,  நிலத்துக்கும், நீருக்கும் வந்தனை செய்யும் திருநாள் பொங்கலாம் தை முதல் நாள். இதை நமது முன்னோர்கள் அறுவடைப் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். எனவே, தைத்திருநாள் என்பதும் தமிழரின் புத்தாண்டுதான். 

தை மாதம் புத்தாண்டு கொண்டாடிய பிறகு அறுவடை செய்த நெல்லில் புதிய விதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். முறைப்படி பார்த்தால், வயலில் இருக்கும் மண்ணைக் கொண்டுதான் அடுப்புக் கட்டி,  அதில் மண்பானையில் பொங்கல் வைப்பார்கள். சூரியன் - மண் - நீர் - மாடு ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அறுவடைப் புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அடுத்ததாக, சித்திரை மாதம் என்பது வானியல் ரீதியாக சூரியன் காலபுருஷனின் முதல் ராசியாகிய மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மாதமாகும். சித்திரை மாதம்தான் சூரியன் ஜோதிட ரீதியாக உச்சம் பெறும் மாதமாகும். இந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்டு நமது முன்னோர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களை தமிழர்கள் ஒரு வருடமாக கணக்கிட்டுக் கொண்டார்கள். 

கிரகங்கள்

சித்திரை மாதம் - இந்திரனுக்கு மிக மிக உகந்த மாதமாகும். இந்திரன் தொல் தமிழரின் முதன்மையான கடவுள். எந்த தேவதையை வணங்கினாலும், முதலில் இந்திரனுக்கு எதுவும் செய்யாமல் அது முழுமை ஆகாது. இந்திரனின் திசை கிழக்காகும். பொதுவாக அனைத்து கோயில்களும் கிழக்கு முகமாக இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதத்தில் இந்திர விழா கொண்டாடிய குறிப்பு இருக்கிறது. இந்திர விழா என்பது சித்திரை 1-ம் தேதி முதல் 10 நாட்கள் தொடர்ந்து நடந்திருக்கிறது. சித்திரை 1- ஐ வரவேற்கும் விதமாக புத்தாண்டாகக் கொண்டாடி இருக்கிறார்கள். எனவே சித்திரை மாதத்தையும் தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடி இருக்கிறார்கள் எனலாம். சித்திரையை வருடத்தின் புத்தாண்டாகவும் - தைத் திருநாளை அறுவடைப் புத்தாண்டாகவும் தமிழர்கள் கொண்டாடி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

எஸ்.கதிரேசன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close