Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாவங்கள் தீர, வளங்கள் பெருக 'பாப மோசனிகா ஏகாதசி' விரதம்..!

ல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. சித்திரை மாதம் தேய்பிறையில் வரும்  ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும். வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப்படும். அன்றைய தினத்தில் விரதம் இருந்து, இறைவனை வணங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

ஏகாதசி

‘பாப மோசனிகா ஏகாதசி’ கதை :

இந்த வருடம் , சித்திரை 9-ம் தேதியன்று வரும் ‘பாப மோசனிகா ஏகாதசி’ மிகுந்த விசேஷமான ஒன்றாகும். ஏகாதசி விரத மேன்மையை விளக்கும் அற்புதமான கதைகளை எடுத்துரைக்கிறது ஏகாதசி மகாத்மியம்.  சாபத்தினால் பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவகன்னி,  இந்த நாளில் விரதத்தைக் கடைப்பிடித்து, இறையருளால் சாபம் நீங்கப் பெற்ற கதையை பற்றிப் பார்ப்போம்.. 

ஓர்   அழகிய காட்டில் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அந்த இடத்திற்கு மஞ்சுகோஷை என்னும் அழகிய தேவகன்னி வந்தாள். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று அவளது கண்கள் மேதாவி என்னும் முனிவரின் பக்கம் சென்றது. பிறகு அவளது கண்கள் பிறரைப் பார்க்கவில்லை, அவள் மனமும் பிறவற்றை நாடவில்லை. அழகிய முகமும், திரண்ட தோள்களும், ஒளி வீசும் கண்களும் உடைய மேதாவி, மன்மதனின் மறு வடிவம் போல அவள் கண்களுக்குத் தெரிந்தார். தன் இனிமையான குரலால் மேதாவியை அழைத்தாள்.

ஏகாதசி

மஞ்சுகோஷையின் குரல் இனிமை மேதாவியை தியானத்தில் இருந்து விடுபடச் செய்தது. விழித்தவரின் கண்களில் பட்ட மஞ்சுகோஷையின் அழகு, அவரை மிகவும் மயக்கிவிட்டது. தவம் செய்து கொண்டிருந்த மேதாவி, மஞ்சுகோஷையின் அழகில் மயங்கி தன் கடமையை மறந்து அவளுடன் சென்று விட்டார். மோகத்தில் இருந்த மேதாவிக்கு, காலம் சென்றதே தெரியவில்லை.. ஒரு நாள் மஞ்சுகோஷை, "சுவாமி நான் போய் வருகிறேன், எனக்கு விடை கொடுங்கள்.." என்றாள். மேதாவியோ, "என்ன அவசரம், இன்னும் சில காலங்கள் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று கூறி அவளுடனே இருந்தார்.

திடீரென்று ஒரு நாள், காலம் கடந்ததையும், தன் கடமையை இழந்ததையும் நினைத்து மனம் நொந்தார்.  "என் தவத்தை கலைத்த மஞ்சுகோஷையே, உன் அழகை இழந்து பேயாகத் திரிவாய்" என்று சாபமிட்டார்.  "சுவாமி, நான் மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன், என் தவறை மன்னித்து அருள் புரியுங்கள் " என்று மனம் வருந்தி வேண்டினாள் மஞ்சுகோஷை. "தவத்தில் இருந்து தடுமாறி, காலம் தெரியாமல் உன்னுடன் உல்லாசமாக இருந்தது என் தவறுதான். இந்தப் பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு. உன்னை மட்டும் தண்டிப்பது நியாயம் அல்ல. எனவே நீ சித்திரை மாதத்தில் வரும் ‘பாப மோசனிகா ஏகாதசி’ அன்று விரதம் இருந்து சாப நிவர்த்தி அடைவாய்.." என்று கூறி ஆசியளித்தார்.

மேதாவி தன் தந்தையிடம் சென்று, தனது தவறால், தவ வலிமையை இழந்ததைக் கூறி வேதனை அடைந்தார். "மஞ்சுகோஷைக்கு கூறிய ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதத்தை நீயும் கடைப்பிடி உன் பாவம் தீரும் " என்று கூறி நல்வழி கட்டினார், மேதாவியின் தந்தை.
‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதத்தை மேற்கொண்டு மஞ்சுகோஷையும், மேதாவியும் பாவ விமோசனம் அடைந்தனர்.

பாப மோசனிகா ஏகாதசி

ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட வேண்டும். பூஜை அறைய சுத்தம் செய்து, அலங்காரப் பிரியனான மகா விஷ்ணு படத்திற்கு  மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ( பூஜைக்கு தேவையான துளசியை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்வது சிறப்பு) பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைத்து, பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள், ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண் விழிக்க வேண்டும். 

கோபம், கவலை, வீண்பேச்சு, சண்டை, புறம்பேசுவதைத் தவிர்த்து, இறைவனை வழிபட உங்கள் பாவங்கள் தொலைந்து நன்மை பிறக்கும்.

ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்து உணவு உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.

- கி.சிந்தூரி 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close