Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கள்ளழகர்... வைகை ஆற்றில் இறங்கிய முதல் இடம் எது?

மதுரையின் மேற்குப் பகுதியில் சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் கிராமம்.தேனூர் கிராமத்துக்கும், பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவிற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இன்றளவும் சித்திரைத் திருவிழாவின்போது தேனூர் மண்டபத்தில் தான் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.

கள்ளழகர்

அந்தப் புராண வரலாறு...

முற்காலத்தில் சுதபஸ் என்னும் தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் சிற்றாற்றின் கரையில் அமர்ந்து விஷ்ணுவை நினைத்துத் தவமிருந்தார். அப்போது சுதபஸ் முனிவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுதபஸ் முனிவர் அவரைக் கவனிக்கவில்லை.கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற துர்வாசர் "மண்டூகம் (தவளை) போல் கிடக்கும் நீ அதுவாகவே மாறிப் போ'' என்று சாபமிட்டார். உடனே தவளையாக மாறிவிட்டார் சுதபஸ்.

பின்னர் தன் பிழையைப் பொறுத்து மன்னிக்கும்படி துர்வாச முனிவரிடம் வேண்டிக்கொண்டார் சுதபஸ் முனிவர்.

மனம் இரங்கிய துர்வாசர் "தேனூர் வைகை ஆற்றில் தவம் செய்! சித்ரா பவுர்ணமி அன்று பெருமாள் ஆற்றுக்கு வரும்போது உனக்கு விமோசனம் தந்தருள்வார்" என்று சாபவிமோசனம் அருளினார்.

துர்வாசர் கூறியபடி தேனூர் வைகை ஆற்றின் கரைக்கு தவளை வடிவில் வந்த சுதபஸ் முனிவர் பெருமாளை நினைத்து கடும் தவம் இயற்றினார்.

சித்திரைத் திருவிழா

தன்னுடைய பக்தரான முனிவரின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், ஒரு சித்ரா பௌர்ணமி நாளில் தேனூர் வைகை ஆற்றில் தவம் இயற்றிக்கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தந்து மோட்சமும் அளித்தார். இதன் காரணமாகவே சித்ரா பௌர்ணமி அன்று தேனூரில் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வந்தது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தேனூரில்தான் நடைபெற்று வந்தது.

ஆனால், சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடைபெறத் தொடங்கியது.ராமசாமி

அதற்கான காரணம் பற்றி தேனூரைச் சேர்ந்த பெரியவர் மு.ராமசாமி என்பவரிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது... ''400 வருடங்களுக்கு முன்பு வரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தேனூரில்தான் நடைபெற்று வந்தது. அப்போது மதுரையின் மன்னராக இருந்த திருமலை நாயக்கர் ஒருமுறை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசிக்க தேனூருக்கு வருகை தந்தார். இங்கு கூடியிருந்த பக்தர்களின் கூட்டத்தைப் பார்த்ததும், இந்த வைபவத்தை மதுரையில் நடத்தினால் என்ன என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. அதற்குக் காரணமும் இருந்தது. அப்போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா மாசி மாதம்தான் நடைபெற்று வந்தது. அறுவடைக் காலம் முடிந்து, திரும்பவும் பயிர்த் தொழில் செய்யும் காலம் என்பதால், திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

மக்கள் வெள்ளம்

எனவே, பெருமளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை சித்திரை மாதத்துக்கு மாற்றியதுடன், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் மதுரையில் நடைபெறும்படி மாற்றினார். அதற்கு தேனூர் கிராம மக்களும் சம்மதித்தனர். அதற்கு மரியாதை செய்யும் விதமாக திருமலை நாயக்கர், அழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அருளும் நிகழ்ச்சி சேதுமாதவன்நடைபெற மண்டபம் கட்டித் தருவதாகவும், வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவுக்கு 200 பொற்காசுகள் தருவதாகவும் கூறி, அப்படியே செய்யவும் செய்தார்.இதன் காரணமாக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள முடிந்ததுடன், சைவ - வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் திகழ்கிறது'' என்றார்.

தேனூரைச் சேர்ந்த இளைஞர் சேதுமாதவன் கூறும்போது, ''பாண்டிய மன்னர்களாலும், பிற்காலத்தில் மாவலி வானாதிராயன் மன்னனாலும் கட்டப்பட்டதே அழகர் கோயில். அழகர் இங்கிருந்து அலங்காநல்லூர் வழியாகச் சென்று தேனூர் ஆற்றில் இறங்குவார். அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது. அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு, தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது'' என்றார்.

ஒரு வைபவத்தின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான புராண, வரலாற்றுச் சம்பவங்கள்?!நினைக்க நினைக்க பரவசப்படுத்தும் இதுபோன்ற வைபவங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தரிசிக்கலாமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close