Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தம் அளிக்கிறது''! - சச்சின் தெண்டுல்கர்

கோவை: சர்க்கரை நோயின் தலைமை இடமாக இந்தியா இருக்கிறது என கோவையில் நடந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசினார்.

கிராமப்புற மக்களை அனைத்து வகையிலும் மேம்படுத்துவது மற்றும் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது 'ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்'. கடந்த 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இயக்கத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான 'கிராமோத்சவ' விளையாட்டு போட்டிகள், கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. கைப்பந்து போட்டிகள், கபடி, சூப்பர் 8 கிரிக்கெட் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிப்போட்டி, கோவை கொடீசியா மைதானத்தில் இன்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு விழா போன்றவை நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடந்த இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக ஆண்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியை  சச்சின் டெண்டுல்கரும், பெண்களுக்கான எறி பந்து விளையாட்டை ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும்  துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து கபடிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற காருண்யா கபடி அணி, இரண்டாமிடம் பிடித்த பேரூர் கபடி அணி, சூப்பர் 8 கிரிக்கெட் போட்டியில் வென்ற போத்தனூர் மென் இன் ப்ளூ அணியினருக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசு வழங்கி பாராட்டினார். 

தொடர் நாயகன் விருதை மென் இன் ப்ளூ அணியைச் சேர்ந்த அபிலாஷ் பெற்றார்.

மகளிர் எறிபந்து போட்டியில் வென்ற தேவராயபுரம் கிராம அணியும், ஆண்கள் வாலிபால் போட்டியில் திருச்சி அணியும் வென்று சச்சின் டெண்டுல்கர் கையால் பரிசுகளை பெற்றது.

விழாவில் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், "நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என எனது பாட்டி எப்போதும் என்னிடம் சொல்வார். நோயற்ற வாழ்வு தான் நமக்கு மகிழ்ச்சியை தரும். அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமெனில் நீங்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டியது என்பது மிக அவசியம்.

விளையாட்டு உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. விளையாட்டுதான் எப்போதும் தோல்வியடையாத கூட்டு முயற்சியை நமக்கு கற்றுத்தரும். நம் சகிப்புத்தனமையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்க்க வல்லதும் விளையாட்டுதான்.

என் வாழ்க்கையை மாற்றியமைத்து, நான் மகிழ்வுடன் இருக்க காரணம் விளையாட்டுதான். சக்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நம் வாழ்க்கை முறைதான். இதை மாற்ற எல்லோரும் ஏதாவது விளையாட்டில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். இது போன்ற விளையாட்டு போட்டிகளை ஈஷா மையம் நான் ஆந்திரா மாநிலத்தில் தத்தெடுத்துள்ள கிராமத்திலும் நடத்த முன்வர வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், “இதுபோன்ற போட்டிகளை சச்சின் ஒரு கிராமத்தில் நடத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு கிராமத்தில் இல்லை 100 கிராமத்தில் அடுத்த சில ஆண்டுகளில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஆந்திரா அரசு ஏற்கனவே இதற்கு அழைப்பு விடுத்துள்ளது. சச்சின் சொன்ன மாதிரி எல்லோரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எல்லோரோடும் விளையாடுங்கள். ஏதாவது விளையாடுங்கள். விளையாட்டு தான் உங்களை ஆரோக்கியமானதாய் மாற்றும். உடல் மட்டும் இல்லாமல் மனதளவிலும் உங்களை வலுப்படுத்த விளையாட்டு அவசியம்,” என்றார்.

-ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ