Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்சிலோனாவுக்கு ஏமாற்றம் : மான்செஸ்டர் யுனைடெட் பரிதாப தோல்வி ; லூக் ஷா கால் உடைந்தது!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் அணிகள் தோல்வி கண்டன. நடப்பு சாம்பியன் பார்சிலோனா ரோமாவுடன் சமன் கண்டது.
 

ஹாட்ரிக் அடித்த ரொனால்டோ

'ஏ' பிரிவில் நடந்த ஒரு போட்டியில் உக்ரெயினைச் சார்ந்த சக்தார் டொனெட்ஸ்க் அணியை ரியல் மாட்ரிட் அணி பந்தாடியது. அந்த அணியின் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஹாட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். பென்ஜீமாவும் தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  இந்த 3  கோல்கள் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மொத்தம் 80 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் ரொனால்டோ.

இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, சுவீடனின் மால்மோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பாரீஸ் அணியின்ஏஞ்சல்  டி மரியா 4வது  நிமிடத்திலும், எடிசன் கவானி 61ஆம் நிமிடத்திலும் கோல் போட்டனர். கடந்த சீசனில் சரியாக விளையாடததால் மான்செஸ்டர் யுனைடட் அணியால் விற்கப்பட்ட ஏஞ்சல் டி மரியா பாரீஸ் அணிக்காக தான் விளையாடிய முதல் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலேயே கோல் அடித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
 


உடைந்தது லூக் ஷாவின் முழங்கால்


'பி 'பிரிவில் இடம்பெற்றுள்ள பி.எஸ்.வி.என்டோவன்  மற்றும்  மான்செஸ்டர் யுனைடட் அணிகள் மோதிய போட்டியில் 2-1 என்று பி.எஸ்.வி அணி வெற்றி பெற்றது. இரண்டு மாதங்கள் முன்பு பி.எஸ்.வி அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு மாறிய டீபே, தனது பழைய அணிக்கு எதிராக 41வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். பின்னர் பி.எஸ்.வி அணியின் மொரேனோ, நர்ஸிங் ஆகியோர் முறையே 47வது மற்றும் 57வது நிமிடங்களில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிபெற வைத்தனர்.
    
இப்போட்டியின்போது மான்செஸ்டர் யுனைடட் அணியின் லூக் ஷா பந்தை கடத்திக் கொண்டு போக அவரிடமிருந்து பந்தை பறிக்க முயன்ற மொரேனோ ஆக்ரோஷமாகப் பாய்ந்ததில் ஷாவின் முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தின் பாதியிலேயே விலகிக் கொண்டார். காயம் சற்று பலமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் சில மாதங்கள் ஷா ஓய்வெடுக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கால்பந்தில் இது போன்ற காயங்கள் ஏற்படுவது சகஜம் என்றாலும் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து ஷாவிடம் மொரானோ மன்னிப்பு கேட்டுள்ளார். 


தொடரும் மான்செஸ்டர்  சிட்டியின் பரிதாபம்

டி பிரிவின் மிக முக்கியமான போட்டி ஒன்றில், கடந்த ஆண்டு இறுதி ஆட்டம் வரை முன்னேறிய ஜூவன்டஸ் அணியும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. டெவெஸ்,விடால்,பிர்லோ என நட்சத்திர வீரர்கள் வேறு அணிகளில் இணைந்தாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜூவன்டஸ் 2-1 என்று வென்றது. இந்த ணியின் மான்ட்சுகிக் மற்றும் அல்வாரோ மாரட்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பிரிமியர் லீக் தொடரில் கலக்கி வரும் மான்செஸ்டர் சிட்டி அணி இதுவரை சாம்பியன்ஸ் லீக் தொடரில் பெரிதாய் சோபித்ததில்லை. இந்த முறை பல புதிய திறமையான வீரர்களை வாங்கியும் மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தோற்றது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனா, ஆர்சனல் ஏமாற்றம்

   
நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி ரோமாவை எதிர்கொண்டது. பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சியின் 100வது சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் இதுவாகும். இந்த போட்டியில்  சுவாரஸ்,பார்சிலோனா அணிக்கான முதல் கோல் அடித்தார். எனினும் 31வது நிமிடத்தில் புளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த அற்புதமான கோலால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனடைந்தது.மற்றொரு ஆட்டத்தில் டைனமோ சக்ரப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை தோற்கடித்தது.

 - மு.பிரதீப் கிருஷ்ணா
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ