Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிமியர் லீக் கால்பந்து போட்டி: மீண்டெழுந்த சாம்பியன்கள்:

சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றாலும், இம்முறை தொடர்ந்து சொதப்பி வந்த செல்சி, ஜுவன்டஸ் அணிகள், சென்ற ஆண்டு சொதப்பினாலும் இந்த முறை முன்னணியில் இருக்கும் இன்டர் மிலன்,டார்ட்மண்ட் அணிகள், இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்று தோல்வியைத் தழுவிய அர்சனல் என இந்த வார பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் எப்பொழுதும் போல் அமர்க்களமாகவே அமைந்தன


அட்டைகளால் ஆட்டம் கண்ட அர்சனல்

பிரிமியர் லீக்கின் இருபெரும் அணிகளான அர்சனலும், செல்சியும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. செல்சி அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அர்சனல் அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஹெக்டர் பெல்லரின், சான்டி கசோர்லா என இரு அர்சனல் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டனர். இதனால் 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான அர்சனல் அணியால், செல்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஜௌமா மற்றும் ஈடன் ஹசார்ட் ஆகியோர் கோலடிக்க, 2-0 என்ற கணக்கில் வென்று, நீண்ட நாள் தோல்வி பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது செல்சி.

ஆனால் இதுவரை அனைத்து போட்டியிலும் வென்று முதலிடத்திலிருந்த மான்செஸ்டர் சிட்டி அணி,  வெஸ்ட் ஹாம் அணியிடம் 2-1 என தோற்றது. இதற்கு முன்பு அர்சனல், லிவர்பூல் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தியிருந்த அவ்வணி இம்முறை சிட்டியையும் வென்று அசத்தியுள்ளது. வெஸ்ட் ஹாம் சார்பாக விக்டர் மோசஸ்  மற்றும் சகோவும், சிட்டி அணிக்காக டி புருய்னும் கோலடித்தனர்.இப்போட்டியில் தோற்றாலும் 15 புள்ளிகளுடன் சிட்டி அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

மேலும் மான்சஸ்டர் யுனைடட் அணி சௌதாம்ப்டன் அணியையும், டாட்டன்ஹாம் அணி கிரிஸ்டல் பேலஸ் அனியையும் வீழ்த்தின. அதேசமயம் நார்விச் அணி லிவர்பூல் அணியோடு டிரா செய்து அதிர்ச்சியளித்தது.



ஹாட்-ட்ரிக்கை தவறவிட்ட மெஸ்ஸி-லா லிகா

ஸ்பெயினின் கால்பந்து தொடரான லா லிகாவில், பார்சிலோனா அணி லெவன்டே அணியை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 61வது மற்றும் 90வது நிமிடங்களில் கோல் அடித்த அவ்வணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி,  ஒரு பெனால்டி வாய்ப்பை வீனாக்கினார். இதன் மூலம் ஹாட்-ட்ரிக் கோல்கள் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.மேலும் நெய்மர் மற்றும் பார்ட்ரா ஆகியோரும் கோல் அடிக்க, 4-1 என்று வென்றது. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்காத நிலையில்,  இரண்டாம் பாதியில் பார்சிலோனா ஆடிய ருத்ரதாண்டவத்தில் லெவன்டே அணி திக்குமுக்காடிப் போனது.

கிரானடா அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் பிரெஞ்சு வீரர் கரீம் பென்சீமா கோல் அடித்தார். கடைசி இரண்டு போட்டிகளிலும் சேர்ந்து 8 கோல் அடித்த கிரிஸ்டியானோ ரொனால்டோவால் கோல் அடிக்க முடியாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது.

அத்லெடிக்கோ மாட்ரிட், எய்பார் அணிகள் மோதிய போட்டியில் அத்லெடிக்கோ அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அவ்வணியின் டாரஸ் மற்றும் காரியா ஆகியோர் கோலடித்தனர். இவ்வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் அத்லெடிக்கோ அணி 9 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.

ஆனால் வெலன்சியா அணி, ரியல் பெடிசுடன் டிரா செய்ததும், செவில்லா அணி செல்டா விகாவிடம் தோற்றதும் அவ்வணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது.



தொடரும் டார்ட்மன்ட் அணியின் வெற்றிப் பயணம்-பண்டஸ்லிகா

கடந்த ஆண்டு சொதப்பினாலும், புதிய பயிற்சியாளர் டக்கலின் கீழ் இந்த ஆண்டு சிறப்பாய் விளையாடி வரும் பொருசியா டார்ட்மன்ட் அணியின் வெற்றிப் பயணம் இந்த வாரமும் தொடர்ந்தது. ஹாப்மேன், ககாவா, அபாமயாங் ஆகியோர் கோல் அடிக்க, இவ்வணி 3-0 என்ற கணக்கில் பேயர்ன் லெவர்குசன் அணியை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

நடப்பு சாம்பியனான பேயர்ன் மூனிச் அணியும் டார்ம்ஸ்டாட் அணிகள் மோதிய போட்டியில் பேயர்ன் அணி 3-0 என் வென்றது. விடால் ,கோமன், செபாஸ்டியன் ரோட் ஆகியோர் பேயர்ன் அணிக்காக கோலடித்தனர். விளையாடிய 5 போட்டிகளிலும் வென்றாலும் கோல் அடிப்படையில் இவ்வணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

ஜெர்மன் சூப்பர் கோப்பை சாம்பியனான வோல்ஸ்பர்க் அணி  2-0 என்று ஹெர்தா அணியை வீழ்த்தியது. அவ்வணியின் பாஸ் டோஸ்ட் வெற்றிக்கான இரு கோல்களையும் அடித்தார்.



நெப்போலி அணியின் விஸ்வரூபம் - சீரி ஏ

லேசியோ அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என்று வென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தது நெப்போலி அணி. அவ்வணியின் அர்ஜென்டின வீரர் ஹிகுவெய்ன் ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

சென்ற வாரம் வரை திணறி வந்த நடப்பு சாம்பியனான ஜுவன்டஸ் அணி,  இந்த வாரம் 2-0 என்று ஜெனோவா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 13ஆம் இடத்திற்கு முன்னேறியது. இதற்கு ஜெனோவா வீரர்களின் மோசமான ஆட்டமும் கைகொடுத்தது. அவ்வணியின் லமானா 'சேம் சைடு கோல்' அடிக்க,  மறுமுனையில் இஸ்ஸோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறினார். அணியின் மையத் தூணான போக்பா 60வது நிமிடத்தில் கோல் அடிக்க வெற்றி வசமானது.
   
மேலும் இன்டர் மிலன், ஏ.சி.மிலன், ஃபியோரன்டினா அணிகளும் வெற்றி பெற்றன. இதில் இன்டர் மிலன் அணி 12 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது.

மு.பிரதீப் கிருஷ்ணா

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ