Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காமன்வெல்த் கராத்தே போட்டி; தங்கம் வென்று கோவை மாணவி சாதனை!

கோவை : காமன்வெல்த் கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி நிவேதிதா.

காமன்வெல்த் கராத்தே சம்மேளனம் மற்றும் இந்திய கராத்தே சங்கம் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் கோவையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி நிவேதிதா பங்கேற்றார். தேசிய அளவில் நடந்த போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் இந்த வாய்ப்பை மாணவி நிவேதிதா பெற்றார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, கானா, இலங்கை, வங்காளதேசம் உள்பட 21 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த கராத்தே போட்டிகளில் பங்கேற்றனர். இதில் அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிவேதிதா, இறுதிப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாணவியை எதிர்கொண்டார்.

இறுதிப்போட்டியிலும் வென்றதன் மூலம் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தங்கப்பதக்கத்தை வென்ற மாணவி நிவேதிதா, இன்று டெல்லியில் இருந்து ரயில் மூலம் கோவை திரும்பினார். இன்று கோவை ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன.

இந்த விழாக்களில் காவல்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், கராத்தே வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவி நிவேதிதாவை பாராட்டினர்.

இது தொடர்பாக மாணவி நிவேதிதா கூறுகையில், " சின்ன வயசில் இருந்தே  கராத்தே மேல் எனக்கு விருப்பம். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். இப்போ எனக்கு காமன்வெல்த் கராத்தே போட்டியில் தங்கம் கிடைச்சிருக்கு. 2020ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகிட்டு இந்தியா சார்பில் தங்கம் வெல்வது தான் என் லட்சியம். அதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்துட்டு வர்றேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன்," என்றார்.

நிவேதிதாவின் சகோதரி விஷ்ணுபிரியாவும் கராத்தே வீராங்கனை. நிவேதிதாவுக்கு பயிற்சி அளித்து வரும் இவர், இடைவிடாத பயிற்சியே நிவேதிதாவின் சாதனைக்கு காரணம் என்றார். "வழக்கமாக காலை ஒரு மணி நேரம், மாலை 2 மணி நேரம் என பயிற்சி எடுத்து வந்த நிவேதிதா, காமன்வெல்த் போட்டிகளுக்காக கூடுதலாக 2 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டார். இதன் மூலம் தினமும் 5 மணி நேரம் வரை பயிற்சி செய்தார். இந்த இடைவிடாத முயற்சியும், பயிற்சியுமே தங்கம் வென்ற சாதனைக்கு காரணம்," என்றார் விஷ்ணு பிரியா.

சபாஷ் நிவேதிதா!

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ