Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்?

மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்து, என்னையும் கொஞ்சம் கவனி என்று நம் உடல் கதறிய பிறகே, அதை பாதுகாக்கும் முயற்சியை எடுக்கின்றோம். அப்படி உடலை பாதுகாக்க முனையும் பலரின் யுக்தி,யோகா அல்லது ஜிம்.

யோகா உடலுக்கும், மனதிற்கும் அமைதி அளித்தாலும் இளைஞர்களை கவர்வது என்னவோ ஜிம்தான். இவர்களின் நாடித்துடிப்பை கச்சிதமாக உணர்ந்த கோயம்புத்தூர் குமரகுரு பொறியியல் கல்லூரி நிர்வாகம்,  மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஜிம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து ஏக குஷியில் மாணவர்கள் கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பு கனவுகளுடன் வலம் வர,  அவர்களை இன்னும் மகிழ்ச்சி படுத்த வந்தார் ஏழு முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற காமராஜ். அட வேறயாரும் இல்லீங்க நம்ம பட வில்லன் பட்டினப்பாக்கம் ரவிதான்.


இவரா படத்தில் விக்ரமை அடித்து துவைத்து மிரட்டியவர் என ஆச்சரியப்படுமளவிற்கு அத்தனை அடக்கத்துடன், ஏதோ பத்து வருடம் பழகிய பக்கத்துவீட்டுக்காரர் போல  கலகலப்பாக பேசி மாணவர்களை வசீகரித்தார்.

மாணவர்களிடம், "நான் பாடிபில்ட் பண்ணத் தொடங்கினது என்னோட அப்பா, அம்மாவுக்கு பெருமை சேர்க்கத்தான்.என்னை கஷ்டபட்டு வளத்த அவுங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணிட்டே இருந்துச்சு. படிக்கிற காலத்துல காசு சம்பாரிச்சு குடுக்க முடியாது. அப்போ செய்ய முடிஞ்ச ஒரே விஷயம் அவுங்களுக்கு பேர் வாங்கி குடுக்கிறது. அததான் செய்யணும்னு நெனச்சேன்... செஞ்சிட்டேன்.

நாம படிக்கிற காலத்துல நமக்கு படிக்க நேரம் கிடைக்கும்,ஸ்போர்ட்ஸ்க்கு நேரம் கிடைக்கும், அப்புறம் வீணாக்க நேரம் கிடைக்கும். அதுல நாம ஏதாவது ரெண்ட மட்டும்தான் தேர்ந்தெடுக்கணும். நான் படிப்பையும், ஸ்போர்ட்ஸையும் தேர்ந்தெடுத்தேன். ஸ்போர்ட்ஸ்ல பாடிபில்டர் ஆகணும்னு முடிவு பண்ணி கடினமா உழைச்சேன்,குடும்பம் உதவுச்சு. ரொம்ப கஷ்டபட்டுதான் உதவுனாங்க. அது கூட நானும்  செய்த கொஞ்ச உழைப்புதான் இன்னிக்கு உங்க முன்னாடி பட்டினப்பாக்கம் ரவியா நிக்கிறேன்.

 ஊர்ல சுள்ளானா கபடி விளையாடிட்டு இருந்தேன்.  எங்க அண்ணன், 'நீ கொஞ்சம் சத போடு அப்பதான் நல்ல விளையாட முடியும்'னு சொன்னாரு. அதுனால ஜிம்முக்கு போனேன். எங்க ஊர்ல இப்போ மாதிரி இவ்ளோ அட்வான்ஸ்டு ஜிம்மெல்லாம் கிடையாது. வாரா வாரம் சனிக்கிழமை பக்கத்து ஊருக்குப் போய் பிராக்டிஸ் பண்ணுவேன்.கொஞ்சமா சத போட்டேன். கையில எலிக் குட்டி போல கொஞ்சம் மசில்ஸ் வந்துச்சு. அத பாத்தப்போ பயங்கர சந்தோஷம். அப்புறம்தான் மிஸ்டர் இண்டியா, ராணுவத்தில் பணி, ஷங்கர் சார் படம் வரை வளர்ந்தேன்" என்று  சொன்னவர்.

”நீங்க படிக்கிறவங்க. அப்பப்போ ஸ்ட்ரஸ் ஆகும். தினம் ஜிம் போங்க... உங்களுக்கு நல்ல ரிலாக்சேஷனா இருக்கும். தினம் காலையோ, மாலையோ ஒரு 40 நிமிஷம் போங்க... உங்கள நீங்க பிட்டா வெச்சுக்க  உதவும்” என்றார். 

மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் காமராஜ் கலகலப்பாக பதிலளிக்க தவறவில்லை,

 எப்போ ஒலிம்பிக் போறிங்க?

"இப்போ வரைக்கும் நான் வந்தது அப்பா, அம்மா, அண்ணன் தம்பிங்க பண்ண ஸ்பான்ஸராலதான். இன்னும் சரியான ஸ்பான்ஸர் அமையல. கிடைச்சா கண்டிப்பா பண்ணலாம்.வேணும்னா நீங்க ஸ்பான்ஸர் பண்ணுங்களேன்” என்று கூறி கேள்வி கேட்ட மாணவரை மிரளவத்தார்.

யோகா, ஜிம் எது நல்லது?

இது சூப்பர் கேள்வி.ரெண்டுமே ரொம்ப நல்லது. யோகா உங்க மனசையும் உடம்பையும் ரிலாக்‌ஸ்டா வைக்கும். ஜிம் உங்கள பிட்டா வைக்கும். ரெண்டுமே பண்ணுங்க... சூப்பர் ஸ்டாராகலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்?

இது மாணவர்கள்கிட்ட ஒரு ஒழுக்கத்த உருவாக்கும், தங்கள கட்டுப்பாடா வெச்சுப்பாங்க. காலை சீக்கிரம் எந்திரிக்கிறது தொடங்கி, நல்ல உணவு சாப்பிடுறதுனு அவுங்கள கண்டிப்பா நல்வழிபடுத்தும்.

மாணவர்கள் கண்டிப்பா ஸ்போர்ட்ஸ்ல இருங்க. அதுக்கு அடிப்படை நல்ல உடல் கட்டமைப்பு, அத சரியா பண்ணுங்க. மத்தவுங்களுக்கு உதவுற குணத்த ஏற்படுத்திக்கோங்க, மனிதாபிமானத்தோட இருங்க. அப்பா அம்மாவ பெருமைப்படுத்துற மாதிரி வாழுங்க”  என்று டச்சிங்காக பதிலளித்து மாணவர்களை மெர்சலாக்கி விடைகொடுத்தார் பட்டினப்பாக்கம் ரவி.

கு.அனுஷ்யா 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ