Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்டா விகோ துவம்சம் செய்தது : பார்சிலோனா படுதோல்வி!

ஸ்பானீஷ் லீக்கில் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக பார்சிலோனா அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியை செல்டா விகோ அணி 4 கோல்கள் அடித்து வீழ்த்தியது. மெஸ்சி , நெய்மர், சுவாரஸ் என நட்சத்திரங்கள் அணிவகுத்திருந்த போதும் இப்போட்டியில் பார்சிலோனா தோற்றது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்டா அணியின் பலாய்டோஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி தடுமாறியது.

முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள்

பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக் பதவியேற்ற பிறகு,எந்தவொரு போட்டியிலும் முதல் பாதியில் எதிரணியை இரு கோல்கள் அடிக்க விட்டதில்லை. ஆனால் முதன்முறையாக இந்த போட்டியில் செல்டா விகோ அதனையும் செய்து காட்டியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் செல்டா அணியின் ஹுகோ மல்லோ செய்த கிராஸை அவ்வணியின் நொலிடோ கோலாக மாற்றினார்.

இந்த அதிர்ச்சிலிருந்து பார்சிலோனா அணி மீள்வதற்குள்ளாகவே அடுத்த நான்காவது நிமிடத்தில் செல்டோ அணியின் இயாகோ ஆஸ்பாஸ் கோலடித்து முன்னிலையை பலப்படுத்தினார். முதல் கோல் அடித்த நொலிடோ, இந்த கோலுக்கு பாஸ் செய்து உதவினார். அதே உத்வேகத்துடன் விளையாடிய செல்டா அணி முதல் பாதியில் பார்சிலோனவிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது.


போராடிய நெய்மர்

இராண்டாம் பாதி தொடங்கியது முதலே பார்சிலோனா அணியின் பிரேசில் நட்சத்திரம் நெய்மார் கோல் அடிக்க பலமுறை முயன்றார். ஆனால் அவையனைத்தும் செல்டா வீரர்களால் தடுக்கப்பட்டன. இந்நிலையில் எறிகிற நெருப்புல் எண்ணெய் ஊற்றுவது போல் ஆட்டத்தின் மூன்றாவது கோலை அடித்தார் ஆஸ்பாஸ். இரண்டாவது கோல் போலவெ இந்த கோலிற்கும் நொலிடோவே உதவினார். பின்னர் சில வீர்ர்களையும் யுக்திகளையும் மாற்றிப்பார்த்தார் பார்சிலோனா பயிற்சியாளர் என்ரிக். இறுதியில் ஆறுதலாக 80வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பாஸை கோலாக்கினார் நெய்மர். ஆனாலும் ஓயாத செல்டா அணி 83வது நிமிடத்தில் ஜான் கடிட்டோ மூலம் நான்காவது கோலை அடித்தது.

7 ஆண்டுகளில் மிகமோசமான தோல்வி

பார்சிலோனா அணியின் இந்த தோல்வி லா லிகா தொடரில், கடந்த 7 ஆண்டுகளில்  சந்தித்த மிகமோசமான தோல்வியாகும். 2008ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட்டிடம் தோற்ற பிறகு கடந்த 273 லா லிகா போட்டிகளில் இப்படியொரு தொல்வியைச் சந்தித்ததில்லை. இப்போட்டியில் ஒரு கோல் அடித்து,இரண்டு கோல்கள் அடிக்க வழிவகுத்த நொலிடோ முன்னாள் பார்சிலோனா வீரர் என்பது இன்னும் சிறப்பாகும்!

 


முன்னேறிய ரியல் மாட்ரிட்

அதேசமயம் இரண்டாம் இடத்திலிருந்த ரியல் மாற்றிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப் அணியை வென்றது. அவ்வணியின் கரீம் பென்சீமா வெற்றிக்கான இரு கோல்களையும் அடித்தார். இவ்வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. செல்டா டி விகோ அணியும் 13 புள்ளிகள் பெற்றிருந்தாலும் கோல் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இத்தொடரில் இதற்கு முன்பு வரை நடந்த 4 போட்டிகளிலும் வென்றிருந்த பார்சிலோனா அணி இத்தோல்வியின் மூலம் 12 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தொடரில் ரியல் மாட்ரிட், செல்டா டி விகோ மற்றும்  வில்லாரியல்  அணிகள் இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை .

மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close