Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரம்சாலாவில் இன்று யுத்தம் ஆரம்பம் : கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் யார் யார்?

தென்னாப்பிரிக்கா 72 நாள்  மிக நீண்ட இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இன்று முதல் 20 ஓவர் போட்டிகள் ஆரம்பமாகின்றன. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இந்த தொடரில் முக்கியமாக சில வீரர்களை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்களை பற்றிய மினி டிட்பிட்ஸ் இங்கே !

இந்திய அணி

1.  ஷிகர் தவான்

ஷிகர் தவானும் , ஸ்டெயினும் ஐ.பி.எல்லில் ஒரே அணிக்காக விளையாடுபவர்கள். 'லிமிட்டட் ஓவர்' கிரிக்கெட்டில் ஸ்டெயினின் வியூகங்கள், அவரின் மனநிலை  தவானுக்கு நன்றாகவே தெரியும். தென்னாப்பிரிக்காவுடன் இதுவரை விளையாடிய நான்கு ஒருதின இன்னிங்ஸில் இரண்டு சதம், ஒரு சதம் விளாசியிருக்கிறார் தவான்.கடந்த உலககோப்பையிலும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதிரடி சதம் எடுத்தார். தவான் புல்பார்மில் இருப்பதோடு, இந்திய மண்ணில்  போட்டிகள் நடைபெறுகிறது என்பதால் தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்.


2. அஜின்க்யா ரஹானே

அணிக்கு எப்போது, என்ன தேவையென்றாலும் எந்த கேப்டனாக இருந்தாலும் முதலில் வந்து  நிற்பது ரஹானே தான். எந்த ஆர்டரிலும் , எந்த பிட்சிலும் நன்றாக விளையாடுவார் என்பதால் ரஹானேவின் கன்சிஸ்டன்சி  இந்தியாவுக்கு பெரிய பிளஸ்.  டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள் இரண்டிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறந்த ஆவரேஜ் வைத்திருக்கும்  ஒரே வீரர்  ரஹானே மட்டுமே. பீல்டிங்கில் மிகவும் துடிப்போடு செயல்படுபவர் என்பதால் ரஹானேவை சமாளிக்கவே தனி யுக்தியை வகுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

3. ரவிச்சந்திர அஷ்வின் :-

டெஸ்ட், ஒருநாள் , டி20 என அனைத்து போட்டிகளிலும் டாப் 10 பவுலர் வரிசையில் இருக்கும் உலகின் ஒரே வீரர் சென்னைப்பையன் அஷ்வின்.. இந்திய மண்ணில் அஷ்வினின் பந்துகளை எந்தவொரு பேட்ஸ்மேனும் அடித்து நொறுக்குவது அரிதிலும் அரிதான காட்சி. ரன் வேகத்தை மட்டுப்படுத்தி,  போட்டியை இந்தியாவின் கட்டுக்குள் வைக்க கேப்டன் கூல், கோலி என இருவரும் முதலில் அழைப்பது அஷ்வினைத்தான். அம்லா, டிவில்லியர்ஸ் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக அஷ்வின் திகழுவார் என எதிர்ப்பார்க்கலாம்.4. மகேந்திர சிங் தோனி

தனது கேரியரில் கத்தி முனையில் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் கூலாக இருப்பது தோனியின் ஸ்பெஷல். பொதுவாக இந்திய அணி எப்போதுமே கடைசி பத்து ஓவர்களில் தான் வெற்றியை கோட்டை விடும்.பினிஷிங் டச் கொடுக்க சரியான ஆள் இல்லாமல் இந்தியா தடுமாறிய போது , வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருந்த தோனி தனிப்பட்ட சாதனைகளை கருத்தில் கொள்ளாமல் ஐந்து,ஆறு,ஏழு என வெவ்வேறு நிலைகளில் அணிக்கு  தேவையான் போது களமிறங்கி வெற்றியை தேடித்தந்தவர்.  தொடக்கவீரர்கள் மற்றும் வீராட்கோலி தடுமாறிய சமயங்களில் மிடில் ஆர்டரை பலப்படுத்த நான்காவதாக கூட களமிறங்கி சிறப்பாக விளையாடுபவர் தோனி என்பதால்,  இந்த முறை தோனி  தேவைகேற்ப முன்கூட்டி களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

18 பந்தில் 60 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது, அணியின் ஒரே பேட்ஸ்மேன் தோனி மட்டுமே களத்தில் இருக்கிறார் என்றால் கூட எதிரணியினர் செம டென்ஷனாக இருப்பார்கள். அதான் தோனி.

5. குர்கீரத் சிங் :-

பஞ்சாபில் இருந்து கிளம்பியிருக்கும்  புது சிங்கம் இவர். ஐ.பிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவர் தற்போது ஆஸ்திரேலிய ஏ, வங்கதேச ஏ அணிகளுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்ட் பெர்மாமான்ஸ் காட்டியது மட்டுமின்றி மேட்ச்வின்னராகவும் திகழ்ந்ததால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகத்தை திரும்பிபார்க்க வைத்திருக்கிறார்.தோனி ஆல்ரவுண்டர்களை மிகவும் விரும்புவார் என்பதால் குர்கீரத் சிங்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு பிரகாசம்.

தென்னாபிரிக்க

1. அம்லா : -

தென்அப்பிரிக்காவின் சுவர் ஹாஷிம் அம்லா. குஜராத்தின் சூரத் நகரில் இருந்த குடும்பத்தின் வம்சாவளி தான் அம்லா. சுமார் ஆறடி உயரம் கொண்ட அம்லா தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அம்லா சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் சதமடித்து மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார். அம்லாவுக்கும் இந்தியாவுக்கு நிறைய தொடர்பு இருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டே இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் அம்லா ஆனால் அப்போது சோபிக்கவில்லை என்பதால் அணியில் இருந்து நீக்கபட்டார் பிறகு 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது முதல் டெஸ்டில் மூன்றாம் நிலையில் இறங்கி 253 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார் .அப்போது தான் கிரிக்கெட்உலகின் ஒட்டு மொத்த கவனமும் அம்லாவின் மீது திரும்பியது. கடந்த ஐந்து வருடமாக அம்லாவின்  தான் நம்பர் ஒன் தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் . சுழற்பந்து வீச்சையும் அம்லா சிதறடிப்பார் என்பதால் தென்னாப்பிரிக்கா அம்லாவை மலை போல நம்பியிருக்கிறது.

2. ஏ பி டிவிலியர்ஸ் : -

ஆச்சர்யம்! சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உலகளவில் எக்கச்சக்க ரசிகர்கள் இப்போது ஏ.பி.டிவில்லியர்ஸ்க்கு  தான். எப்பேர்பட்ட பந்துவீச்சாளராக இருந்தாலும் மைதானத்தின் எந்தவொரு மூளைக்கும் பர்பெக்டாக தனது பேட் மூலம் பந்தை அனுப்பும் வீரர்  டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸ் கடந்த இரண்டு வருடமாக கேரியரின் உச்சத்தில் இருக்கிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் டிவில்லியர்ஸ் படைத்த சாதனைகளை கண்டு அனைத்து பவுலர்களுக்குமே உள்ளூர கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது.


தற்போதைய நிலவரப்படி டெஸ்ட் மற்றும் ஒரு தினபோட்டிகள் இரண்டிலும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். " என்னை சூப்பர்மேன் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள் ஆனால் அதற்கு நான் தகுதியானவனா என தெரியாது, பவுலர்கள் என்னை சூப்பர்மேனாக எல்லாம் பார்க்கமாட்டார்கள். ஒவ்வொரு போட்டியிலும் இறங்கும்போது எனக்கு நடுக்கம் இருக்கிறது. தனிநபரின் சாதனைகள் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை அணியின் வெற்றியே முக்கியம், நான் ஓய்வு பெற்ற பின்னர் வேண்டுமானால் எனது சிறந்த இன்னிங்க்ஸ் பார்த்து நான் பெருமிதம் கொள்ளலாம்"  என சமீபத்திய பேட்டி ஒன்றில் அடக்கிவாசித்திருக்கிறார் இந்த டெவில் மேன்.

3. டுமினி : -

டுமினிக்கு சமீபத்தில் தான் பெண்குழந்தை பிறந்திருக்கிறது அந்த உற்சாகத்தில் வரிசையாக  தனது குழந்தையோடு செல்பி எடுத்து  சோஷியல் நெட்வொர்க்கில் அப்லோடிக்கொண்டே இருக்கிறார். 'டாடி'  அந்தஸ்து பெற்ற பின்னர் டுமினி விளையாடுவது இந்தியாவுடன் தான். இந்திய மண் சுழலுக்கு சாதகமானது என்பதால் டுமினி பார்ட்டைம் பந்துவீச்சாளர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் டெஸ்ட், ஒன் டே, டி-20 மூன்று பார்மெட்டிலும் அணியில் இடம் கொடுத்திருக்கிறது புரோட்டீயஸ் கிரிக்கெட் வாரியம் .


4. ஸ்டெயின் : -

சந்தேகமே இல்லை ஆசிய மண்ணில் அபராமாக பந்துவீச கூடிய  உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தான். லைன் அண்ட் லென்த்தில் துல்லியமா க பந்துவீசும் ஸ்டெயின் பந்துவீச்சை சமாளிப்பது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கடினம். தற்போதைய தென்னாப்பிரிக்க அணியில் இருக்ககூடிய,  இந்திய மண்ணை முழுமையாக அறிந்த வேகபந்துவீச்சாளர் ஸ்டெயின் தான். 2008 ஆம் ஆண்டு  இந்திய மண்ணிலேயே ஸ்டெயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெஸ்ட் போட்டியில் முதல்
இன்னிங்ஸில் வெறும் 20 ஓவரில் 76 ரன்னுக்கு  இந்தியா ஆல் அவுட்டானதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. டெஸ்ட் போட்டிகளின் உலகின்  நம்பர் ஒன் பவுலர் ஸ்டெயின் அந்த அணியில் பவுலிங் டிபார்ட்மெண்ட் கேப்டன்.5. ககிசோ ரபாடா :-

வங்கதேசத்துக்கு எதிராக  அறிமுகமான முதல் ஒருதினப்  போட்டியிலேயே  ஹாட்ரிக் சாதனை படைத்து ஆறு விக்கெட்டுகளை சாய்த்தவர் ககிசோ ரபாடா.  இந்திய சுற்றுபயணத்தில் மூன்று பார்மேட்டில் இருக்கும் ஒரே வேகபந்து வீச்சாளர் இவர் மட்டுமே. ஸ்டெயினுக்கு கூட இடமில்லை, வலது கை பந்துவீச்சாளரான ரபடாவுக்கு வயது 20 மட்டுமே. ரபாடா பந்துவீச்சை இதுவரை  இந்திய வீரர்கள் எதிர்கொண்டதில்லை என்பதால், இந்திய பேட்டிங்கை குலைக்கும் துருப்புசீட்டாக ரபாடாவை வைத்திருக்கிறது தென்னாபிரிக்கா.

 நம்பர்ஸ்  சீக்ரெட்ஸ்  (பாக்ஸ் மேட்டர் )


தரவரிசை  அட்டவனை :-

டெஸ்ட் :-

இந்தியா - 5 வது இடம்
தென்னாபிரிக்கா - முதல் இடம்

ஒருதின போட்டிகள்

இந்தியா - 2 வது இடம்
தென்னாபிரிக்கா - 3 வது  இடம்

டி-20

இந்தியா -  4 வது இடம்
தென்னாபிரிக்கா -  6 வது  இடம்

- பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close