Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

85 வயதில் தடகளத்தில் பதக்கங்களை அள்ளும் பலசரக்கு வியாபாரி!

சாதிக்கத் துணிந்துவிட்டால் வயதும் உடல்நிலையும் ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு உதாரணமாய் திகழ்பவர் மதுரை பீ.பீ குளத்தைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் ,என்ற இராதாகிருஷ்ணன்.

100மீ, 200மீ, 400மீ ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளில்  மாநில அளவில் பல பதக்கங்களைக் குவித்து, தேசிய அளவிலும் தடம் பதித்து ஆசிய போட்டிகளைக் குறி வைத்து முன்னேறும் இச்சாதனை இளைஞருக்கு வயது 85.

அறுபது வயதுக்குப்பின் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு, பேரன் பேத்தி, அரசியல், செய்தித்தாள் என குறுகிய வட்டத்தில் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் மாற்றத்திற்கான முதல் படியாக தான் அமைய வேண்டும் என்ற  குறிக்கோளுடன் உச்சம் தொட்ட திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது,

ஒரு பலசரக்கு வியாபாரியாக அன்றாட வாழ்க்கை வாழும் பலரில் ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். அறுபது வயதில் பலரையும் முடக்கிப்போடும் சர்க்கரை வியாதியை சவாலாக எண்ணி அதை கட்டுக்குள் வைக்க மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மேற்க்கொண்ட நடைப்பயிற்சி என்னை தடகளத்திற்கு கொண்டு சென்றது. அங்கு ஒரு டாக்டர் நண்பர் கொடுத்த யோசனைப்படி முயற்சி மேற்கொண்டு முதியோருக்கான தடகள போட்டிகளில் சேருவதாக ஒரு ஆர்வத்தில் முடிவெடுத்தேன். அது வெறும் ஆர்வக்கோளாறாக மட்டும் நிலைத்துவிடக்கூடாது என்று பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஊரக விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களும் பாராட்டுகளும் கொடுத்த தன்னம்பிக்கையில் முன்னேறிக் கொண்டிருந்த தருணம், எதிர்பாராத சாலை விபத்தில் கால்முறிவு ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதால் தடகள வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் மாற்றுவழியை உருவாக்கித்தந்தது. நடை, ஓட்டம் என்று பங்குபெற்றுக்கொண்டிருந்த நான் விபத்துக்குப் பின்னர் ஈட்டி, வட்டு, குண்டு எறிதல் என என்னுடைய விளையாட்டு தளத்தை மாற்றிக்கொண்டு இரண்டாம் பாகத்தை துவக்கினேன். நாட்டின் பல மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று இன்னமும் எனக்கான ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இம்மாதிரி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு குடும்பத்தினர் முழு சம்மதம் தராவிட்டாலும் மறுப்பு சொல்லியதில்லை. இந்த போட்டிதான் நான் கலந்துகொள்ளும் கடைசி போட்டி என ஒவ்வொரு வருடமும் கூறிக்கொண்டே இருபத்தைந்து வருடங்களை கடந்துவிட்டேன். இன்னும் அதிகமான போட்டிகளில் பங்குபெற்று ஆசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்  என் பயணம் தொடரும், என்று கூறும் திரு.இராதாகிருஷ்ணன் சர்க்கரை வியாதியை தகுந்த நடை , உடற்பயிற்சியால் கட்டுக்குள் வைக்கமுடியும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இச்சாதனை என்கிறார்.

கிருஷ்ணன் தன் மனைவி பெயரையும் இணைத்து தன்னை திரு. இராதாகிருஷ்ணனாகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார். மேலும் கண் தானமும், மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமும் செய்துள்ளார்.
  
ராகினி ஆத்ம வெண்டி.
படங்கள்: நா. மரகதமணி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ