Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோகித்சர்மாவின் சதம் வீண்: தென் ஆப்பிரிக்க அணி ‘திரில்’ வெற்றி!

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை அடைந்துள்ளது. இதனால், இந்திய வீரர் ரோகித் சர்மா அடித்த சதம் வீணானது.

தரம்சாலாவில்  டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி இந்திய அணியை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் களமிறங்கினார். தவான் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இணைந்தார்.

இந்த ஜோடி தென்ஆப்ரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ரோகித் சர்மா 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் கடந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விராட்கோலி 43 ரன்களில் வெளியேறினார்.  டி20 போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். சர்வதேச அளவில்மிக விரைவாக அதாவது 27 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் விராட்டுக்கு கிடைத்தது.

ரோகித் 66 பந்துகளை சந்தித்து 106 ரன்களை அடித்து அவுட் ஆனார்.  பின்னர் வந்தவர்களில் சுரேஷ் ரெய்னா 14 ரன்களையும் தோனி 20 ரன்களையும் அடித்தனர். இந்திய இன்னிங்சின் கடைசி பந்தை கேப்டன் தோனி சிக்சருக்கு அனுப்பியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி 20 ஓவர்களில் 199 ரன்களை எட்டியது.

அதன் பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி காட்டி நல்ல அடித்தளம் அமைத்தது. அம்லா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 36 ரன்னும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 95 ரன்களாக இருந்தது.

4வது விக்கெட்டுக்கு பெஹர்டைன், டுமினியுடன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். டுமினி ஆட்டம் அதிரடியாக இருந்தது. கடைசி ஓவரில் தென் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அரவிந்த் வீசிய அந்த ஓவரில் டுமினி ஒரு சிக்சர் உள்பட 9 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி கண்டது. டுமினி 34 பந்துகளில் ஒரு பவுண்டரி, 7 சிக்சருடன் 51 ரன்னும், பெஹர்டைன் 23 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின், அரவிந்த் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ