Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய பயிற்சியாளராக கிளாப் : சிலிர்த்தெழுமா லிவர்பூல்?

உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில்  5 முறை கோப்பையை வென்ற ஒரே  இங்கிலாந்து அணி லிவர்பூல் தான். கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு லிவர்பூல் அணி  தொடர்ந்து சரிவினைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பரம வைரியான எவர்ட்டன் அணியுடன் டிரா செய்ததும், அணியின் பயிற்சியாளர் பிரண்டன் ரோஜர்ஸ் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிளாப்?


கால்பந்து அணியின் மேனேஜர் பதவியென்பது சாதாரமானது அல்ல. ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன், தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளர் ஆகிய மூவரும் செய்ய வேண்டிய வேலையை ஒரு மேனேஜர் செய்ய வேண்டும். அதனால் தான் கால்பந்து உலகில் மேனேஜர்களுக்கு என்று தனி மதிப்புண்டு. அத்தகைய தகுதி வாய்ந்த ஒரு பயிற்சியாளரைத்தான் தற்போது  லிவர்பூல் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு முன்,  ஜெர்மனியின்  போர்சியா டோர்ட்மன்ட் அணியின் மேனேஜராக இருந்த கிளாப். திறமை வாய்ந்த இளைஞர்களைக் கண்டெடுத்து வாய்பளித்தார். உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளடங்கிய பேயர்ன் மியூனிச் அணிக்கு தனது இளம் படையால் சவால் விட்டார். இதனால் போர்சியா டோர்ட்மன்ட் அணி ஜெர்மனியின் பந்தஸ்லிகா தொடரில் இரு முறை கோப்பையை வென்றது.

கடந்த  2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில், டோர்ட்மன்ட் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று  கிளாப் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் அடைந்த வெற்றிகளைவிட பெரிதும் பேசப்பட்டது, கிளாப்பின் அணியை ஒருங்கிணைக்கும் திறன்தான். லெவண்டோஸ்கி, கோட்சே, ஹம்மல்ஸ், ரியூஸ் என இவர் செதுக்கிய வீரர்கள் ஏராளம். இவர்களை பணபலம் கொண்ட பெரிய கிளப்புகள் வாங்கும்போது, எங்கிருந்தோ ஒரு இளம் திறமையாளரை அந்த இடத்தில் நிரப்பிவிடுவார். திறமைசாலிகளைக் கண்டறிவதில் கிளாப்புக்கு நிகர் கிளாப் தான்.

மீண்டெழுமா லிவர்பூல்


பிரீமியர் லீக்கில் 2013-2014 சீசனில் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் அணி நட்சத்திர வீரர் சுவாரசை பார்சிலோனாவிற்கு விற்ற பிறகு பெரும் சரிவை சந்தித்தது. பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து பல வீரர்களை வாங்கிய பிறகும், திணறியதே பிரண்டன் ரோஜர்ஸ் வெளியேற்றப்படக் காரணமாய் அமைந்தது. ஆனால் கிளாப்பின் வருகை அதை சரிசெய்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனது புதிய சவால் பற்றி கிளாப் கூறுகையில்,”லிவர்பூல் அணி நிர்வாகம் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. எனக்கென்று ஒரு ஒரு வியூகம்  இருக்கிறது. வெற்றி  முக்கியம்தான். ஆனால் எப்படி வெற்றி பெருகிறோம் என்பதும் முக்கியம். எனது அணி எப்பொழுதும் மனம் முழுதையும் ஆட்டத்தில் செலுத்தியிருக்கும். வீரர்கள் தங்கள் விளையாட்டின் மீதான காதலை ஆட்டத்தில் காட்டுவார்கள்'' என்றார்.

புதிய பயிற்சியாளர் மாற்றம், தொலைந்துபோன லிவர்பூல் அணியின் வெற்றி சரித்திரத்தை மீட்டெடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மோடின்ஹோ, லலானா, பென்டகி, க்ளைன், ஹெண்டர்சன் என திறமை வாய்ந்த இளம் வீரர்களை கிளாப் மேலும் மெருகேற்றி லிவர்பூலை தலைநிமிரச் செய்வார் என்கின்றனர் கால்பந்து  நிபுணர்கள். இந்நேரம் மான்செஸ்டர் யுனைடட், ஆர்சனல், செல்சி போன்ற அணிகள் லிவர்பூலைக் கையாள புதிய வியூகங்கள் வகுக்கத் தொடங்கியிருப்பார்கள்!

மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close