Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு: பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி!

ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது.  பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது.

இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ், சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர்  மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.  இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ்,  லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்டஈடாக பெற்றார். 

ஆனால் லலித் மோடி கூற்றில் உண்மையிருப்பதும், கிறிஸ் கெயின்ஸ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதும் உண்மையென பின்னர் தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கில், கிறிஸ்கெயிர்ன்சுடன் இணைந்து விளையாடிய மற்றொரு வீரர் லோ வின்சென்டும், கிறிஸ் கெயிர்ன்சுக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார். மேலும் சண்டிகார் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் தினேஷ் மோங்கியாவும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, லோ வின்சென்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் நியூசிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோரும்  சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று லண்டன் சவுத் வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான பிரன்டென் மெக்கல்லம், கிறிஸ் கெயிர்ன்சுக்கு எதிராக சாட்சியளித்துளார்.

அதில, '' கடந்த 2008-ம் ஆண்டு கொல்கத்தாவில் நான் இருந்த போது கிறிஸ் கெயிர்ன்சிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய அவர், உங்களிடம் பிசினஸ் பேச வேண்டுமென்றார். அதோடு என்னை தனது ஹோட்டல் அறையில் சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார்.

அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்கெயிர்ன்சை சந்தித்தேன். என்னிடம் தனது ஐடியாவை கூறினார். 'நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளவே உங்களை அழைத்தேன்' என்றார். பின்னர்  என்னிடம் கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் பற்றி தெரியுமா என்றார். மேலும், 'எல்லா மூத்த வீரர்களும் செய்கிறார்கள். நீயும் செய்' என்றார். இதனைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் நான் திரும்பி விட்டேன்.

தொடர்ந்து எனக்கு போன் செய்து, 'என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?' என்று கேட்டார். அப்போது, 'நீங்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்துகிறீர்கள்' என்று கூறி மறுப்பு தெரிவித்து விட்டேன்.

மேலும் கிறிஸ் கெயிர்ன்சை நான் எனது நண்பராக கருதினேன். அதோடு கிறிஸ் கெயிர்ன்ஸ் சூதாட்டத்தில் தொடர்பு கொண்டவராக இருப்பாரா என்பதையும் என்னால் நம்பமுடியவில்லை. அதனால்தான் உடனடியாக இது குறித்து ஐ.சி.சி.க்கு தகவல் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ