Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரிபிள் ஜம்பில் அசத்தும் கோவை நந்தினி!

"பொதுவா எல்.கே.ஜி படிக்கும்போது எல்லோரும் கிண்டர் கார்டன் கேம்ஸ்தான் விளையாடிட்டு இருப்பாங்க... ஆனா, அப்பவே 'கிட்டீஸ் மீட்' என்று விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பா அனுப்பி வெச்சிடுவார்.. அப்போ ஆரம்பிச்ச ஓட்டம்!" என்றபடியே  க்ளாஸ் முடிந்து பள்ளியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக வந்தமர்கிறார் நந்தினி.

கோவை சி.ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவரும் இவர், கடந்த ஜூன் மாதம் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சர்வதேசத் தடகளப்போட்டியில், மும்முறை தாண்டுதலில் (ட்ரிபிள் ஜம்ப்) வெண்கலப் பதக்கம்  வென்றுள்ளார். மாவட்ட அளவிலான போட்டிகள் முதல் சர்வதேச அளவிலான போட்டிகள் வரை கிட்டத்தட்ட 300 பதக்கங்கள் இப்போது இவர் வசம்.

எப்போது தொடங்கியது இந்தப் பதக்க வேட்டை?

எல்.கே.ஜியிலிருந்தே பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வென்று வந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து மாவட்ட அளவில் பங்கேற்கத் தொடங்கினேன். 2011ல் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, மாநில அளவில் நடைபெற்ற குடியரசுதின விழாப் போட்டியில், 400மீ ஓட்டத்திலும் 600மீ ஓட்டத்திலும் தங்கம் வென்றேன். 400 மீட்டர் தூரத்தை 63 விநாடிகளில் கடந்து, மாநில அளவில் ரெக்கார்டு படைத்தேன். அதே ஆண்டு தேசிய அளவில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றேன். 2014ல் ட்ரிபிள் ஜம்ப்பில் தேசிய அளவில் வெள்ளி வென்றேன். இதுவரை தேசிய அளவில் 12 பதக்கங்கள் பெற்றுள்ளேன்.


சீனாவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றது குறித்து?

ஜூன் 27லிருந்து ஜூலை 2 வரை அங்கே  போட்டிகள் நடைபெற்றன. ஜூன் மாதத் தொடக்கம் முதலே போபாலில் இந்திய அணிப் பயிற்சியாளர்கள் எங்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்கள். சீன நாட்டு மைதானமும் ஓடுதளமும் வேறு மாதிரி  இருந்ததால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனாலும் நான் ட்ரிபிள் ஜம்ப்பில் 11.67மீ தூரம் குதித்து வெண்கலப் பதக்கமும், 100மீ தடை ஓட்டத்தில் (hurdles)  5-ம் இடமும் வென்றேன். மொத்தத்தில் சீனப் பயணம் எனக்கு மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்தது.

அம்மா அப்பா என்ன சொல்கிறார்கள்?

அப்பா சத்தியநாராயணன் டெம்போ டிரைவர். நான் முன்பே  சொன்னபடி அவர்தான் சிறு வயது முதலே போட்டிகளில் பங்கேற்கப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். தினமும்  பயிற்சிக்கு என்னை அழைத்துச் செல்வதும் அவர்தான். அம்மா தனலட்சுமியும் தங்கை சாந்தினியும் எனக்கு உறுதுணையாக உள்ளார்கள்.

ப்ளஸ் டூ படிக்கும்போது போட்டிகளில் பங்கேற்பது சிரமமாக இல்லையா?

நான் காமர்ஸ் குரூப் எடுத்துப் படித்து வருகிறேன். தினமும்  பள்ளியிலிருந்து திரும்பியதும் 5 மணி முதல் 7 மணி வரை நேரு விளையாட்டரங்கிற்குச் (கோவை) சென்று பயிற்சி  மேற்கொள்வேன். விடுமுறை நாட்களில் காலை மாலை இரு வேளையும் பயிற்சி இருக்கும். மற்ற நேரங்களில் படிப்பைக் கவனித்துக் கொள்வேன்.அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

பள்ளியில் எந்த அளவிற்கு ஊக்குவிக்கிறார்கள்?

4-ம் வகுப்பு  முதல்  6-ம் வகுப்பு வரை பள்ளியிலேயே பயிற்சி பெற்று வந்தேன். அதன் பிறகு உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமாரும் சண்முகப்ரியனும் பயிற்சியாளர் நந்தகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது முதல் அவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். மேலும் நான் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் பள்ளியில் ஸ்காலர்ஷிப் அளித்து ஊக்குவிக்கின்றனர்.

போட்டிக்குச் செல்வதற்குமுன் எவ்வாறு  தயாராகிறீர்கள்?

போட்டிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் பயிற்சி உண்டு. போட்டி நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தீவிரமாகத் தயாராகத் தொடங்குவேன். இரண்டு நாட்களுக்கு முன் முழு ஓய்வு விட்டுவிடுவேன். ஸ்ட்ரென்தனிங் எக்சர்சைஸ், வார்ம் அப் , வார்ம் டவுனுக்கு ஒரு மணி நேரமும், வொர்க் அவுட்களுக்கு ஒரு மணி நேரமும் காலையும், மாலையும் 2 மணி நேரம் செலவழிப்பேன். ஆனால் அந்த சமயத்தில் பள்ளி வகுப்புகள் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வேன். எனது பயிற்சியாளர் நந்தகுமாரும் 400மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பதக்கம் வென்றவர். அவரின் வழிகாட்டுதலால்தான் இந்த அளவு என்னால் வர முடிந்தது.

ட்ரிபிள் ஜம்ப்பிற்கென ஸ்பெஷல் பயிற்சிகள் ஏதும்  உண்டா?

இதற்குப் பதிலளித்த அவரது பயிற்சியாளர் நந்தகுமார், "ட்ரிபிள் ஜம்ப்பைப் பொறுத்தவரை முதலில் ஒரு ஹாப்... அடுத்து ஒரு ஸ்டெப்.. கடைசியாக ஒரு ஜம்ப். இதற்கு வேகமும் அவசியம், பலமும் அவசியம்.  அதற்கென நிறைய ஸ்ட்ரென்தனிங், ஹாப்பிங், ஸ்கிப்பிங், பௌன்சிங், நம் எடையைக் கொண்டே ஜம்ப் செய்வது, வெயிட் ட்ரெயினிங் போன்ற பல பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

வேறு துறைகளில் ஆர்வம் உண்டா?

ஏழாம் வகுப்பு வரை கோ-கோ விளையாட்டில் பங்கேற்று வந்தேன். மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ளேன். பின்னர் தடகளப் போட்டிகளில் முழு மூச்சாக இறங்கியதால் கோ-கோ விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை.

நந்தினி சமீபத்தில் செப்டம்பர் 23 முதல் 25 வரை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் ட்ரிபிள் ஜம்ப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வெல்வதே இவரது லட்சியம். வெற்றி வாகை சூட வாழ்த்துகள் நந்தினி!

தொகுப்பு: யாழினி அன்புமணி
படங்கள்- பா.பிரபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ