Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் 'பெர்முடா 'ஆனது இந்திய அணி: தென்ஆப்ரிக்க அணி 438 ரன் குவிப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. குயின்டன் டி காக், ஆம்லா களமிறங்கினர். ஆம்லா 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டுப்லெசி களமிறங்கினார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தது. 78  பந்துகளை சந்தித்த குயின்டன் டி காக் 16 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உதவியுடன் சதமடித்தார்.குயின்டக் டி காக் அடித்துள்ள 9 சதங்களில் 5 சதங்கள் இந்தியாவுக்கு எதிரானது.

அதே வேளையில் டுப்லெசியும் 111 பந்துகளில் 133 ரன்கள் குவித்து தசை பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். குயின்டன் டி காக் 109 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களதிறங்கிய டி வில்லியர்சும் தன் பங்குக்கு வெளுத்து வாங்கினார்.

இதனால் தென்ஆப்ரிக்க அணியின் ரன்வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. டி வில்லியர்ஸ் 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் 11 சிக்சர்களை விளாசினார். டி வில்லியர்ஸ் 119 ரன்களில் அவுட் ஆனார். தென்ஆப்ரிக்க அணி 47.3 ஓவரில் 400 ரன்களை கடந்தது. கடைசிகட்டத்தில் மில்லர் 22 ரன்களும் பெகார்தீன் 16 ரன்களும் எல்கர் 5 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 438 ரன்களை குவித்தது.

இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 443 ரன்கள் எடுத்ததுதான் ஒருநாள் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.  அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தென்ஆப்ரிக்க அணி கோட்டை விட்டது. ஒருவேளை டி வில்லியர்ஸ் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் தென்ஆப்ரிக்க அணி புதிய உலக சாதனை படைத்திருக்கும்.

தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி வீரர்கள் தவான் 60 ரன்களும் ரஹானே 87 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 36 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்ரிக்க அணி 214 ரன்களில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு தொடரையும் 3-2 என்று கைப்பற்றியது. இந்திய மண்ணில் தென்ஆப்ரிக்க அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறை.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ