Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோழியை தாக்கிய வழக்கு: கைதான கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுதலை!

பெங்களூரு: தோழியை தாக்கிய வழக்கில்  இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, பெங்களூரு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த செப்டம்பர் 25-ம் தேதி,  பெங்களூரு எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், தனது பெண் தோழி வந்தனாவைச் சந்தித்துள்ளார். அப்போது அமித் மிஸ்ரா, பெண் தோழியை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் அசோக்நகர் காவல் நிலையத்தில், அமித் மிஸ்ரா பாலியல் ரீதியாக தன்னைத் தாக்கியதாக கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது பெண்ணைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்னும் 7 நாட்களுக்குள் அசோக்நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் நகல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அனுப்பப்பட்டது.

இதனிடையே, குறிப்பிட்ட தேதிக்குள் அமித் மிஸ்ரா ஆஜராகாவிட்டால், அவரை கைதுசெய்து விசாரிப்போம் என்றும், சட்டப்படி அமித் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மிஸ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் கிடையாது என்றும், அவருக்கு அதிகமாக தொல்லை தர விரும்பவில்லை என்றும் அவரது தோழி வந்தனா கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அமித் மிஸ்ரா விளையாடினார். இந்நிலையில், அமித் மிஸ்ராவிடம் பெங்களூரு காவல்துறையினர் இன்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜாமீனில் விடுதலை

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 325 மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவு என்பதால்,  அவர் பின்னர் ஜாமீனில் விடப்பட்டார். எப்பொழுது தேவையோ அப்பொழுது அவர் காவல்துறை முன்போ அல்லது நீதிமன்றம் முன்போ ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்படும் என்று பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

தோழியை தாக்கிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைதானது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ