Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலியின் வெற்றிப்பயணம் தொடருமா ?

டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இழந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து தென்னாபிரிக்காவை மொகாலி டெஸ்ட்டில் துவைத்தெடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி. இந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் ஆரம்பமாகிறது. இந்தியாவில் முதன்முதலாக வீராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது இந்திய அணி. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும், கடைசி ஒன்பது ஆண்டுகளாக அயல் மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத தென்னாப்பிரிக்காவும், எவ்வாறு விளையாடவுள்ளன என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு  உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை கீழ்க்காணும் ஏழு விஷயங்கள் தீர்மானிக்கும்.

 

1. காயம்... காயம்... காயம் 

தென்னாபிரிக்க அணி வீரர்கள் காயம் காரணமாக கடுமையாக அவதிப்பட்டு இருக்கின்றனர். தென்னாபிரிக்காவின் துருப்புச்சீட்டு வீரர்களான டுமினியும், மோர்னே மோர்களும் ஏற்கனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டெயினும் காயம் அடைந்துள்ளார். இதனால் தென்னாபிரிக்க அணி நிர்வாகம் கலக்கத்தில் உள்ள சூழ்நிலையில் சமீபத்தில், பயிற்சியின் போது தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் பிலாந்தரும் தசைநார் கிழிவு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய பலமான வேகபந்து வீச்சு ஆட்டம் கண்டுள்ளது.

எனினும் மோர்கல், ஸ்டெயின் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரண்டாம் டெஸ்ட்டில் களமிறங்ககூடும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டுமினி தனது உடற்தகுதியை  நிருபித்துவிட்டதால் இரண்டாவது டெஸ்டில் டுமினிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. டுமினி  சுழற்பந்து வீச்சை சமாளித்து, திடீர் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி நன்றாக விளையாடக்கூடிய திறன் உள்ளவர் என்பதால் , டுமினி வருகை தென்னாபிரிக்காவுக்கு பெரிய பலம். அதே சமயம்,   ஏற்கனவே கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட்டில்  பந்து வீசுவாரா என்பது சந்தேகமே!

2. டி வில்லியர்சின் 100-வது டெஸ்ட்

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற பெருமையோடு தனது நூறாவது டெஸ்டில் விளையாடுகிறார் டி வில்லியர்ஸ். சச்சின், லாரா போன்ற வெகு சிலரே நூறாவது டெஸ்ட் விளையாடும்போது தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்துள்ளனர். இத்தகைய வியத்தகு பெருமையுடன் களமிறங்கும் டிவில்லியர்ஸ், "நான் புள்ளிவிவரங்களுக்காக விளையாடுபவன் கிடையாது. ஒவ்வொரு போட்டியிலும், என்னுடைய சிறந்த  பங்களிப்பை அணிக்கு அளிக்க வேண்டும் என்பதை மட்டும் தான் நினைவில் கொண்டுள்ளேன். தற்போது அணி 0-1 என பின்தங்கியுள்ளது என்பது தான் எனக்கு கடும் அழுத்தத்தை தருகிறது. மற்றபடி 100-வது டெஸ்ட் போட்டி விளையாடுவதில் பெருமையாக இருக்கிறதே தவிர்த்து, அதன் காரணமாக மன அழுத்தம் ஏதும் இல்லை" என தெரிவித்து இருக்கிறார். பெங்களூரு மைதானத்தை இரண்டாவது தாய் வீடாகவே கருதுவது மட்டுமின்றி இந்த மைதானத்தில் ஏராளமான ஐ.பி.எல் போட்டிகள் விளையாடியுள்ளதால், மைதானத்தின் தன்மைகேற்ப பேட்டிங் ஸ்டையிலை மாற்றி விளையாடும் திறன் கொண்டவர் டிவில்லியர்ஸ்.  இவரது விக்கெட் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்.

3. மீண்டும் இஷாந்த்

இலங்கையில் இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்தவர் இஷாந்த் ஷர்மா. ஸ்லெட்ஜிங் காரணமாக, ஒரு டெஸ்ட் போட்டி விளையாட ஐ.சி.சி தடை விதித்ததால் மொகாலி டெஸ்டில் இஷாந்தால் பங்கேற்கமுடியவில்லை. இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் வல்லவரான இஷாந்த் நாளை நடைபெறவுள்ள போட்டியில் அணியில் இடம்பெறவுள்ளதால், உமேஷ் யாதவ் நீக்கப்படலாம். இஷாந்த் ஷர்மா தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

4.  பிட்ச் சர்ச்சை

மொகாலி டெஸ்டில் பந்துகள் மேலே எழும்பாமல் மந்தமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க சிரமப்பட்டனர். இதனால் பிட்ச் குறித்த சர்ச்சை எழுந்தது. பெங்களூருவை பொறுத்தவரையில் முதல் இன்னிங்க்சில் நன்றாக ரன் குவிக்க ஏற்ற பிட்ச், மூன்றாவது நாளில் இருந்து சுழலுக்கு சாதகமாக மாறும் என்பதால் டாஸ் மிகமுக்கிய பங்கு வகிக்கும். ஆனால், கடந்த வாரம் முழுவதும் மழை கொட்டிதீர்த்திருக்கிறது. இதனால் மொகாலி பிட்ச்  போன்ற நிலைமை பெங்களூருவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. டிவில்லியர்ஸ் போன்ற 'அட்டாக்கிங்' ஆட்டபாணியை கடைபிடிப்பவர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றது என நம்பலாம். மழை  மைதானத்தை சேதப்படுத்தாவிட்டால் அட்டகாசமான போட்டி நிச்சயம்.

5. வரலாறு முக்கியம் அமைச்சரே!

பொதுவாக அயல்மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு பிறகு தென்னாப்ரிக்கா மீண்டெழுந்து டெஸ்ட் தொடரை வெல்வது அரிது. அதே சமயம் இந்திய அணி தொடரின் முதல் டெஸ்ட்டை  வென்ற பின்னர், வெற்றியை தக்கவைத்து, தொடரை வெல்வதும் அரிதான ஒன்றே.

இந்த சுவாரஸ்யமான வரலாறு இரண்டு அணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வீராட் கோலி தலைமையில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்த சாதனை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

6. 'சொடுக்கு பால் 'அஷ்வின்'

இந்திய சுற்றுப்பயணத்தில் இதுவரை அஷ்வினின் கேரம் பந்துகளை, தென்னாபிரிக்க வீரர்களால் சமாளிக்கவே முடியவில்லை. ஆடுகளம் சுழற்பந்து சாதகமானால் அஷ்வின் பந்தை எதிர்கொள்ள தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறுவர். ஆரம்பத்தில் டி வில்லியர்ஸ் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து அட்டாக்கிங் உத்தியை கடைப்பிடித்து அஷ்வினை நோகடிகிறார். அதே சமயம் அஷ்வினோ சளைக்காமல் மன உறுதியுடன், சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசுவதால் டிவில்லியர்ஸ், அஷ்வின் இடையேயான போட்டி உலகத்தரத்தில் உள்ளது. கடந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்சிலும் அஷ்வின் பந்தில் டி வில்லியர்ஸ் விக்கெட் இழக்கவில்லை, ஏனெனில் அஷ்வின் பந்தை சமாளிக்க வேகமான கால் நகர்த்துததில் கில்லியாக இருந்தார் டி வில்லியர்ஸ். பேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் டி வில்லியர்ஸ், அம்லா ஆகியோருக்கு எதிராக கடும் நெருக்கடி கொடுப்பார் நம்ம சென்னை பையன் அஷ்வின் என எதிர்ப்பார்க்கலாம்.

7. நான் நல்லவன் அல்ல - டி வில்லியர்ஸ் அதிரடி

ஆடுகளத்தில் என்னை நல்லவனாக சித்தரிப்பதை நான் விரும்பவில்லை. ஆடுகளத்தில் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். தேவைபட்டால் வாய்த்தகராறிலும் ஈடுபடுவேன் என ப்ரெஸ் மீட்டில் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் டி வில்லியர்ஸ். டி வில்லியர்ஸ், வீராட் கோலியின் நண்பர். எனினும், கோலியின் ஈகோவை சீண்டும் விதமாக ஏதேனும் செயலிலில் டி வில்லியர்ஸ் ஈடுபடுவாரா என்பதை  பார்க்க வேண்டும். பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிக்காக பெங்களூரு மைதானத்தில் அடிக்கடி விளையாடி பழகியவர்கள் இவர்கள். ஆக விராட் கோலி Vs டி வில்லியர்ஸ் போட்டி அனல் தெறிக்கும்.

இந்த சூழ்நிலைகளையெல்லாம் சமாளித்து இந்தியா இரண்டாவது டெஸ்டை கைப்பற்றுமா என்பது குறித்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்,


- பு.விவேக் ஆனந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close