Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தரவரிசையில் சரிந்த கோலி... காரணம் என்ன?

ந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஸ்மித், வில்லியம்சன், இரட்டை சதமடித்த வார்னர், ராஸ் டெய்லர் ஆகியோர் தரவரிசையில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கின்றனர்.
 

பேட்டிங் தரவரிசை:

தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடம் டி வில்லியர்ஸ்க்கு தான். எனினும் டெஸ்ட் தரவரிசையில் மிகச்சிறு புள்ளிகள் வித்தியாசத்தில் ஸ்மித், வில்லியம்சன் பின் தொடர்கின்றனர்.

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட்களிலும் சொதப்பிய அம்லா ஆறாவது இடத்துக்கு சரிந்தார். சமீபத்தில் இரட்டை சதம் அடித்த வார்னர் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார்.

இந்திய தரப்பில், ஒன்பது இடங்கள் முன்னேறி தரவரிசையில் 12வது இடம் பிடித்திருக்கிறார் முரளி விஜய். முரளி விஜய்க்கு அடுத்ததாக இருபதாவது இடத்தில் இருந்த புஜாரா ஆறு இடங்கள் முன்னேறி 14 வது இடம் பிடித்திருக்கிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான பார்மேட்டிலும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை  விராட் கோலி இழந்தார். தவிர  கடைசி ஐந்தாறு டெஸ்ட்களிலும் பெரிய அளவில் சோபிக்காததால் அதிரடியாக புள்ளிகள் சரிந்து 17 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் மாஸ் ஷோ காட்டிய விராட் கோலி சுழற்பந்துக்கு சாதகமான ஆசிய மைதானங்களில் சற்று தடுமாறுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
 

பவுலிங் தரவரிசை:

டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், யாசிர் ஷா உள்ளனர்.

அஸ்வின் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் உலகின் டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்ரிக்காவை அலற வைத்த ரவீந்திர ஜடேஜா  29வது இடத்தில் இருந்து 13வது இடத்தில் பெரிய ஜம்ப் அடித்திருக்கிறார். வெறும் 14 டெஸ்ட் விளையாடி 13 வது இடத்திற்கு ஜடேஜா முன்னேறியிருப்பது ஆச்சர்யமானது.

முதலிடத்துக்கு போட்டி:

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் யார் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கவுரமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில்  தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது டி வில்லியர்ஸ் தான். ஒருதின போட்டிகளில் இந்த ஆண்டும் டிவில்லியர்ஸ் தான் முதலிடம் வகிக்க அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வெறும் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வில்லியம்சன், ஸ்மித் ஆகியோர் டி வில்லியர்ஸை பின் தொடர்கின்றனர். இந்திய - தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர் ஆகியவற்றின் முடிவில் தான் யார் டெஸ்ட் தரவரிசையில் டி வில்லியர்ஸ் முதலிடத்தை தக்கவைப்பாரா என்பது தெரியும்.

தலைநிமிருமா இந்திய பேட்டிங்?

ஆசிய கண்டத்தில் பொதுவாக இந்திய அணி அருமையாக விளையாடும். ஆனால் கடந்த சில போட்டிகளில், ஒரு இன்னிங்சில் கூட 400 ரன்களை கூட  இந்திய வீரர்கள் அடிக்கவில்லை. வலிமையான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி   சமீப காலமாக பேட்டிங்கில் சரிவை கண்டு வருகிறது. சச்சின், டிராவிட், சேவாக், லட்சுமன் ஆகியோர்  இருந்த இந்திய அணியை போலவே தற்போதும் இந்தியா வலிமையான பேட்டிங் கொண்ட வரிசையாக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில தொடர்களில் நன்றாக விளையாடி வருகிறது எனினும் டாப் 10 பேட்ஸ்மேன்களில் இந்தியர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை என்பது நல்லது தானா?  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆரோக்கியமான இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? இது குறித்து நீங்கள் விவாதிக்கலாம்.

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ