Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கிணற்றிலும், குளங்களிலும்தான் நீச்சல் பழகினேன்..!'

திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷ் பொன்னையா,  நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், 26 வயதாகும் விக்னேஷ்,  கல்லூரி படிப்பெல்லாம் முடித்த பிறகுதான் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய விக்னேஷிடம் பேசினோம்...

“நான் சிறுவயதில் கிணற்றிலும், குளங்களிலும்தான் நீச்சல் பழகினேன். நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் கிணறு, குளம், கண்மாய்களில் நீச்சல் பந்தயம் வைத்து விளையாடுவோம். அப்போது திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கே பயிற்சியாளராக இருந்த விஜயகுமார், நான் நீச்சல் அடிக்கும் முறை, வேகத்தை பார்த்து, 'முறையான பயிற்சி இருந்தால் நல்ல நீச்சல் வீரனாக வர வாய்ப்புள்ளது' என்றார்.

நானும் அவரிடம் பயிற்சி பெற்றேன். போட்டிகளுக்குச் செல்லும் அளவுக்கு தயாரானேன். ஆரம்பத்தில் கலந்துகொள்ளும் எல்லா போட்டிகளிலும் தோல்வியே அடைந்தேன். அந்த தோல்விகளே என்னை வளர்த்தன. என் போக்கிலேயே நீச்சல் பழகியதால், போட்டிகளுக்கான லாவகம் பிடிபட கொஞ்சம் நாட்களானது. தொடர்ச்சியான பயிற்சிகளுக்குப் பிறகு கலந்துகொள்ளும் போட்டிகளில் ஒவ்வொன்றாக வெற்றிபெற ஆரம்பித்தேன்” என்று பெருமித்ததுடன் கூறும் விக்னேஷ்,  2011 மற்றும் 2012-ம் ஆண்டு நடந்த முதல்வர் சுழற்கோப்பைக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நீச்சல் போட்டியில் 5 மீட்டர் ஹை போர்டு, ஒரு மீட்டர் ‘ஸ்பிரிங் போர்டு’ போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். பள்ளிக்காலங்களில் ஓட்டப்பந்தயத்திலும், யோகா போட்டிகளிலும் மாநில அளவில் பரிசுகளை பெற்றிருக்கும் விக்னேஷ்,  25 வயதைக் கடந்தவர்களுக்காக நடத்தப்படும் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

“ஸ்கில் எக்செலன்ஸ்” என்ற நிறுவனம் மூலம் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை நடத்தி வரும் விக்னேஷ்,  மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களுக்கு இலவச வகுப்புகள் மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் சேவையை செய்து வருகிறார்.

“என் வாழ்க்கையின் லட்சியம் இந்த துறைதான். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை நடத்தினாலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும்போது எந்த கட்டணமும் பெறுவதில்லை. இது ஒரு விதமான மனநிறைவை எனக்குத் தருகிறது” என்றார்.

சமீபத்தில்,  பாரலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள பெல்காம் செல்லும் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுத்திருக்கிறார்.

“ஒரு குழந்தைக்கு எந்த துறையில் ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவரை பயணிக்கச் செய்வதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தார் விக்னேஷ்.

-சு. அருண்பிரசாத்
படங்கள் : வீ. சிவக்குமார்

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ