Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கில்லி’ அஷ்வின், 'பாகுபலி’ கோலி, ‘சிங்கம்’ ஜடேஜா! - இந்தியா ஜெயித்தது இப்படித்தான்!

லகின் நம்பர் ஒன் அணியான தென்னாப்பிரிக்காவை, கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி, டெஸ்ட் தொடரை வெல்லும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் பலரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக பல இடங்களில், பல அணிகளிடம் அடிவாங்கி டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது இந்திய அணி. இந்நிலையில்தான் விராட் கோலி தலைமையில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. எனினும், தீவிர ரசிகர்கள் இவ்வெற்றியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தென்னாப்பிரிக்க அணியிடம் எலி போல மாட்டிக் கொண்டு இந்தியா திணறும் என்றே பலரும் சொன்னார்கள். ஆனால், இன்று நடந்ததெல்லாம் தலைகீழ். தோனி தலைமையில் இந்திய அணி டி20, ஒருதின தொடர்களை இழக்க, யாருமே எதிர்பார்க்காத வகையில் அபாரமாக டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி.

 


ஒன்பது ஆண்டு காலமாக அயல்மண்ணில் எந்த அணியிடமும் தோற்காத அணி என பெருமையுடன் வளைய வந்த தென்னாப்பிரிக்காவை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஆறே நாளில் நசுக்கி, வெற்றி மகுடத்தை சூடி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்திய அணி. இந்தியாவின் அசத்தல் வெற்றிக்குக் காரணம் என்ன?

 

1. 'அஷ்வினே' ஆயுதம்

அறிவே ஆயுதம் எனப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்திய அணியைப் பொறுத்தவரையில் 'அஷ்வினே' ஆயுதம். அஷ்வினின் சிறப்பு என்ன தெரியுமா? தடாலடியாக முடிவை மாற்றி சமயோசிதமாக செயல்படுவதுதான். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 55 விக்கெட்டுகள் எடுத்து உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார் அஷ்வின். பல தடைகளைத் தாண்டிதான் இச்சிறப்பைப் பெற்றுள்ளார். 'ஒரே சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே தமிழக அணியில் இடம் பிடிக்க முடியும், தோனிக்கு நண்பன் அதனால்தான் அஷ்வின் அணியில் இருக்கிறார். அஷ்வின் சி.எஸ்.கே கோட்டா'  என பல சர்ச்சைகள் அஷ்வினை சுற்றினாலும், இன்று உலகத்துக்கே தான் எப்படிப்பட்ட சிறந்த பவுலர் என்பதை நிரூபித்து விட்டார்.

இலங்கையின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சங்கக்காராவை அவர்கள் மண்ணிலேயே வைத்து நான்கு இன்னிங்சிலும் அவுட் ஆக்கினார் அஷ்வின். இதற்கு மேல் அஷ்வின் சிறந்த பவுலர் என்பதை எங்கு நிரூபிக்க வேண்டும்? சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் அஷ்வின் பந்துகளை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப்பெரிய சவால். டெஸ்ட் போட்டியில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை சாய்க்கவில்லை எனப் பலரும் குறைப்பட்டு கொண்டிருந்த நிலையில், இத்தொடரில் அதையும் செய்து காட்டிவிட்டார் அஷ்வின். அவர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இதே நிலையில் அவர் இருந்தால் முரளிதரன், வார்னே ஆகியோரின் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு உலகின் ஆல் டைம் நம்பர் 1 ஸ்பின்னர் என்ற அந்தஸ்தை எளிதில் எட்டிப் பிடிக்கலாம்!

2. 'அஞ்சான்' விராட் கோலி

இந்தியாவின் இந்த வெற்றிக்கு விராட் கோலியின் பங்கு மகத்தானது. ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் சிறப்பாக  விளையாடவில்லை என்றாலும் கூட, கேப்டன் பொறுப்பில் மிகச்சிறப்பாக  செயல்பட்டார். இலங்கை தொடரை விராட் கோலி வென்றாலும் அவருக்கு தோனியை போன்ற பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பலரும் தென்னாப்பிரிக்கா தொடரைக் கவனிப்போம் என்றனர். தென்னாப்பிரிக்காவை விராட் கோலியை போல வேற எந்தவொரு கேப்டனும் கலங்க வைத்திருக்க முடியாது. டெஸ்ட் போட்டியில் கூட ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தினார் விராட் கோலி. பீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார்.

தனது முடிவு தவறு என தெரிந்தால், வலுக்கட்டயமாக தான் எடுத்த முடிவு சரி என நிரூபிக்க முயலாமல் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். குறிப்பாக, இந்த டெஸ்டில் இரண்டாவது நாளில் முதல் ஓவரையே அஷ்வினுக்கு கொடுத்தது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. டுபிலசிஸ், அம்லா இருவரும் விடாமல் போராட, அவர்களுக்கு சிறிதும் ரன்கள் சேர்க்க இடம்கொடுக்காமல், அவர்களை ஒரு விதமான அழுத்தத்துக்கு உட்படுத்தினார். சிறந்த பவுலிங், சிறந்த ஃபீல்டிங் ஆகியவைதான் வெற்றிக்கு உதவும் என ரகசியம் உடைக்கிறார் விராட் கோலி.

ஒவ்வொரு பிட்சுக்கும் ஏற்றார்போல பவுலிங் டிப்பார்ட்மெண்டை தேர்வு செய்வதில் மெனக்கெடுகிறார் கோலி. 'கிரிக்கெட் விளையாடுவதே வெற்றி பெறுவதற்குதான், டெஸ்ட் போட்டிகளில் சதமடிப்பதும், இரட்டைச் சதமடித்து, சாதனை செய்வதும் முக்கியமல்ல, போட்டியை வெல்ல வேண்டும்’ என உறுதியாகச் சொல்கிறார் விராட் கோலி. சொன்னதைச் செய்தும் காட்டியிருக்கிறார். ஆக, இந்திய டெஸ்ட் கேப்டன்களில் சிறந்த கேப்டன் வரிசையில் விராட் கோலி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
 
3. சாதகமான பிட்ச்

இந்த தொடரில் இந்திய பிட்ச்சை பற்றி முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், மீடியாக்கள், ரசிகர்கள் எனப் பலரும் பல விதமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்திய பிட்ச்கள் சாதகமானவை என்பது உண்மைதான். ஆனால், அவை இந்திய அணிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கோ சாதகமான பிட்ச்கள் கிடையாது. இரு அணிகளுக்கும் சூழலுக்குச் சாதகமான, பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்கள்.

ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு வீரர்கள் எதில் தேர்ந்தவர்களோ, சுற்றுப்பயணம் செய்யும் அணி எதில் தடுமாறுவார்களோ அதற்கேற்றவாறு பிட்ச் தயாரிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்குள் சுருண்ட கதையெல்லாம் இதற்கு முன்னர் நடந்திருக்கிறது. அந்த மூன்று போட்டிகளும் நடந்தது தென்னாப்பிரிக்க மைதானங்களில் என்பது கூடுதல் தகவல்.

ஸ்பின்னுக்கு சாதகமான இந்த பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என நிஜத்தில் மற்றவர்களுக்கு காட்டியது யார் தெரியுமா? கண்டிப்பாக இந்தியா வீரர்கள் கிடையாது. ஹஷிம் அம்லா, டு பிளசிஸ் ஆகியோர்தான். நாக்பூர் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் டெஸ்ட் போட்டிக்கே உரித்த நேர்த்தியுடன் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 278 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர். இவ்வகை பிட்ச்கள் தடுப்பாட்டம் விளையாட ஏதுவானவை. குறிப்பாக ஹாஷிம் அம்லாவுக்கு தாக்குதல் பாணியில் பந்துவீசியும் 167 பந்துகளைச் சமாளித்தார்.

இப்போதைய சூழ்நிலையில் உலகம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் நன்றாக விளையாடும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள்  எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள். டி20 ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் திறன் பெற்ற தகுதி வாய்ந்த பேட்ஸ்மேன்கள் குறைந்து விட்டனர் என்பதே உண்மை. இதற்கு பிட்ச்சை குறை சொல்லலாமா?

 

4. படுத்தே விட்ட 'தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்'

 

Ashwin's 7-wkt haul, Mishra's important breakthroughs, watch it all in this fall of wickets capsule #IndvsSA http://www.bcci.tv/videos/id/1557/3rd-test-ind-vs-sa-sa-2nd-innings-fall-of-wickets

Posted by Indian Cricket Team on 27 November 2015

நாக்பூர் போன்ற சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் சில சமயங்கள் சேவாக் பாணி ஆட்டம் கைகொடுக்கும். ஆனால், இரு அணியிலும் சேவாக் போன்று அடித்தது ஆடும் ஆட்ட பணியை யாருமே பின்பற்றவில்லை. தொடர்ந்து பந்துகளை வீசி ரன்களை வேகமாக சேர்க்கும்போது பீல்டிங்கில் வீரர்கள் கோட்டை விட ஆரம்பிப்பார்கள். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும்போது புஜாரா, தவான் ஆகியோர் அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டு வேகமாக ரன்களை சேர்த்தனர். அது போன்ற தைரியமான இன்னிங்க்ஸ் தென்னாப்பிரிக்க தரப்பில் ஓரிருவர் கூட விளையாடவில்லை என்பதே அந்த அணியின் தோல்விக்கு ஒரு சிறு காரணம்.

அஷ்வின் மற்றும் ஜடேஜா பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றே புரியாமல் தான் பெரும்பாலான வீரர்கள் அவுட்டானார்கள். குறிப்பாக, கடந்த  சில வருடங்களில், அரிதிலும் அரிதாக முதன் முறையாக ஜடேஜா பந்தை குழப்பத்துடன் அரைகுறை மனதோடு விளையாடி 'டக்' அவுட் ஆனார் டி வில்லியர்ஸ். கடந்த முறை தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது இதே நாக்பூர் டெஸ்டில் இரட்டைச் சதமடித்தவர் ஹாஷிம் அம்லா. ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்ஸ் தவிர, மற்ற அனைத்து இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக மோசமாக பேட்டிங் செய்தது தற்போதைய தென்னாப்பிரிக்க அணிதான். அந்தளவுக்கு உலகின் நம்பர் 1 அணிக்கான எந்த தகுதியும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களிடம் காணப்படவில்லை. ஒரு இன்னிங்ஸில் கூட 250 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை. குறிப்பாக அஷ்வினிடமும், ஜடேஜாவிடமும் 'படுத்தே விட்டார்கள்' தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

5. அதிர வைத்த 'சர்' ஜடேஜா

'சொல்லி வை ரிட்டர்ன் ஆஃப் தி 'சர்'னு... சொல்லி வை’ என டிவிட்டரில் சர் ஜடேஜாவுக்கு லைக்ஸ் தட்டுகிறார்கள் நெட்டிசன்ஸ். தனது மாயாஜால பந்துவீச்சில் தென்னாப்ரிக்காவை நிலைகுலைய வைத்தார் ஜடேஜா. மெதுவாக சுழன்று, வேகமாக பவுன்ஸ் ஆகும் வகையிலான டாப் ஸ்பின் பந்துகளை சரியான லைனில் வீசினார் ஜடேஜா. அஷ்வின் வீசும் பந்துகள் வேகமாக திரும்பும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகுவர். அந்தச்  சமயத்தில் ஜடேஜா முற்றிலும் அதற்கு நேர்மாறாக பந்தை வீசும்போது செய்தவறியாது திகைத்து, தவறான ஷாட் விளையாட முற்பட்டு, பலர் ஜடேஜா பந்தில் போல்ட் முறையில் அவுட் ஆயினர்.

தோனி, ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் சி.எஸ்.கே கோட்டா என ரசிகர்கள் கலாய்ப்பர். ஆனால், இப்போது ஒருதின டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவை மிஸ் செய்கிறோம் என அதே நெட்டிசன்ஸ் ஸ்டேட்டஸ் தட்டும் அளவுக்கும், ஃபுல்ஃபார்மில் பந்து வீசுகிறார் ஜடேஜா. பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை சேர்க்கிறார். இந்த தொடரில் ஜடேஜாவை விட பெரும்பாலான் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குறைவாக ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

6. 'பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்' அமித் மிஸ்ரா

மொகாலி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டி வில்லியர்சை அவுட்டாக்கினார் அமித் மிஸ்ரா. அப்போட்டியில் மற்ற வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார் டி வில்லியர்ஸ். எந்த நிலையிலும் போட்டியின் முடிவுகளை மாற்றும் திறன் கொண்டவர் டி வில்லியர்ஸ். அவரை எப்படி அவுட் ஆக்குவது என மற்ற பந்துவீச்சாளர்கள் திணறியபோது, ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை தொடர்ந்து போல்டாக்கினார் மிஸ்ரா.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் போட்டு அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர் அம்லாவும் - டு பிளசிசும். கிட்டதட்ட மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக 46 ஓவர்களாக இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்திய இக்கூட்டணியை மிஸ்ரா பிரித்தார். இந்தக் கூட்டணி மட்டும் மேலும் 10-20 ஓவர்கள் நின்று விளையாடி இருந்தால் போட்டி நான்காவது நாளுக்கு நீட்சி அடைந்திருக்கும் தவிர, தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கிப் பயணித்திருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்கவில்லை அமித் மிஸ்ரா.  இரண்டு பேரையும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆக்கினார்.

7. நெருக்கடி - பலமும், பலவீனமும்

இரண்டு அணியினருக்கும் இந்த டெஸ்ட் தொடர் கடுமையான நெருக்கடியாக அமைந்தது. ஒரு தின போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதால் டெஸ்ட் போட்டி தொடரை இந்தியா இழக்கக் கூடாது என ரசிகர்கள் எண்ணினர். விராட் கோலி முழு நேர கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரில் வென்று விட்டார். இரண்டாவது டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றிருக்காவிட்டால், 'பலரும் கோலிக்கு அதிர்ஷ்டம். இலங்கை வீரர்கள் ஃபார்மில் இல்லை. அதனால்தான் அப்போது இந்தியா வென்றது’ என சப்பைக்கட்டு கட்டியிருப்பார்கள்.

ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி குறைந்தது. அதே சமயம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகக் கடுமையாக தடுமாறினர் தென்னாப்ரிக்க வீரர்கள். ஆக, ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பலவீன நிலைக்குச் சென்றது. 'இதுவரை 1-0 என பின்தங்கிய நிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை' என்ற மோசமான வரலாறு. அதே சமயம், 'கடந்த 9 வருடங்களாக அயல் மண்ணில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை' என்ற சாதனையை வேறு காப்பாற்ற வேண்டும் என்பதால் கடுமையான நெருக்கடிக்குள்ளானது தென்னாப்பிரிக்கா. இச்சமயத்தில் இந்தியாவின் கை ஒங்க, அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களை அழுத்தத்தில் இருந்து மீள விடாமல் கடும் நெருக்கடி கொடுத்து தொடரை வென்று சாதனை படைத்திருக்கின்றனர்!

ஆக சிம்பிளாக, வெல்டன் இந்தியா!

 

The hits, the misses, the jubilation and the adulation. Relive all the memories from the Nagpur Test in UltraMotion...

Posted by Indian Cricket Team on 27 November 2015


- பு.விவேக் ஆனந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close