Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்!

டந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து,  90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது.
            

பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜிடேன், மெட்ரசியை தலையால் முட்டி கீழே தள்ளினார்.

இந்த போட்டியை உலகம் முழுக்க தொலைகாட்சிகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டிருந்தனர். மைதானத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதனால் நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்ட ஜிடேன், உடனடியாக களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிரான்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி கண்டு, 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இத்தாலி அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இறுதி  போட்டி முடிந்ததும் ஜிடேன்,''கோடிக்கணக்கான குழந்தைகள் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வன்முறையை வெளிப்படுத்தும் விதத்தில், நடந்து கொண்டது குறித்து நான் வெட்கப்படுகிறேன். கால்பந்து ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் '' என்று கூறினார்.

தற்போது ரியல்மாட்ரிட் அணியின் துணை பயிற்சியாளராக ஜிடேன் உள்ளார். ஜிடேன் - வெர்னிகா தம்பதியருக்கு  நான்கு மகன்கள். இதில் 2வது மகன் லூகா. ரியல்மாட்ரிட் யூத் அணியின் கோல்கீப்பராக விளையாடி வருகிறார்.  மாட்ரிட் நகரில் நேற்று  அத்லெடிகோ மாட்ரிட் யூத் அணியுடன் ரியல்மாட்ரிட் யூத் அணி மோதியது.

இந்த போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்த போட்டியின் போது, 4 கோல்களை விட்டுக் கொடுத்த ஆத்திரத்தில் இருந்த லூகா,  எதிரணி வீரர் ஒருவரை தலையால் முட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் நடுவரால் உடனடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது 2006ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜிடேன் கதையை லூகா சம்பவத்துடன் இணைத்து, ஐரோப்பிய பத்திரிகைகள், செய்தி வெளியிட்டுள்ளன.  லூகாதான் ஜிடேனின் வாரிசாக உருவெடுக்கக் கூடும் என்றும் கணித்துள்ளன.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ