Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்!

ரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட்  போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு  முன்னேறியுள்ளன.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த  அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில்,  சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி சுற்றுக்கு அணிகள் முன்னேறும். 

ஏ.எஸ். ரோமா-   ரியல் மாட்ரிட்

 சாம்பியன்ஸ் லீக்கில் 10 முறை பட்டம் வென்றுள்ள ஒரே அணி ரியல்மாட்ரிட் ஆனால் நடப்பு சீசனில், புதிய பயிற்சியாளர் ரஃபா பெனிட்சின் தலைமையில் மாட்ரிட் அணி சொல்லிக்கொள்ளும் அளிவிற்கு சோபிக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்னர் கூட விலேரல் அணியிடம் தோற்றுள்ளது. இதற்கிடையே ஏறகனவே சஸ்பென்ட் செய்யப்பட்ட வீரரை களமிறக்கியதால் 'கோபா டெல் ரே' தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி பெற ரியல் எல்லாவகையிலும் முயற்சிக்கும்.

ரொனால்டோ, காரத் பேல் ஆகிய நட்சத்திரங்கள் பார்ம் இல்லாமல்  தவிக்கிறார்கள். நல்ல பார்மில் இருக்கும் பென்சிமா கூட ‘ஆபாச வீடியோ பிளாக் மெயில்’ குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இப்படி மாட்ரிட் அணிக்கு ஏக பிரச்சணைகள். ஆனால் இந்த அடிபட்ட புலியை எதிர்ப்பது ஒரு பூனை என்பதால் புலியின் கையே நிச்சயம் ஓங்கும். லீக் சுற்றில் பார்சிலோனா அணியிடம் ஒரே போட்டியில் 6 கோல்கள் வாங்கியது இத்தாலியின் ரோமா அணி. சமீப கால போட்டிகளில் ஜெகோ,சலா போன்ற வீரர்கள் கோலடிப்பதிலும் தினறுவதால் காலிறுதியில் ரியல் மாட்ரிட் எளிதில் கால் வைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சனல் - பார்சிலோனா

அர்சனலுக்கும் இந்த சுற்று கொஞ்சம் பிரச்சனையானது தான்.நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணியை  வீழ்த்துவது என்பது அவர்களுக்கு சீனப் பெருஞ்சுவரை உடைப்பதைப் போலத்தான். மற்ற வீரர்கள்கோலடிக்க பெரும் உறுதுணையாய் இருக்கும் மெசூத் ஒசில் விஸ்வரூபம் எடுத்தால் பார்சிலோனாவிற்கு சிறு அச்சுறுத்தல் அளிக்கலாம். 1980ஆம் ஆண்டில் இருந்து  இருந்து இதுவரை எந்த அணியும் தொடர்ந்து இருமுறை சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பையை வென்றதில்லை. 

அதைத் தகர்த்தெரிந்து சரித்திரம் படைக்கக் காத்திருக்கிறது பார்சிலோனா. அதோடு  மெஸ்ஸி, சுவாரஸ்,  நெய்மர் ஆகியோர் கூட்டணியனின் அதிரடி ஆட்டத்தை எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனாலும் சமீப காலமாக பார்சிலோனா அணி தடுப்பாட்டத்தில் சொதப்பி வருகிறது. ஓலிவர் ஜிராட் ,ஒசில் ஆகியோர் பார்மில் இருப்பதால்,  பார்சிலோனாவின் வீழ்த்த வியூகங்கள் அமைத்தால் அர்சனல் சரித்திரம் படைக்கக்கூடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. 2006ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பார்சிலோனா வெற்றி பெற்றது. அந்த முடிவே இப்பொழுதும் கிடைக்கும் என்பது நிபுனர்களின் கருத்து.


பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் - செல்சி

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரு  அணிகளும் நாக்-அவுட் சுற்றில் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. சென்ற வருடம் இதே சுற்றில் பாரீஸ் அணி செல்சியை வெளியேற்றியது. அதற்கு முன்பு செல்சி அணி காலிறுதியில் பாரீசை தோற்கடித்தது. இந்த சீசனிலும் மீண்டும் இரு அணிகளுக்கும் பழிவாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாரீஸ் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச்,ஏஞ்சல் டி மரியா,எடிசன் கவானி ஆகிய வீரர்கள்  நல்ல பார்மில் உள்ளனர்.

ஆனால் செல்சியின் நிலைமையோ பரிதாபம். உலகின் தலைசிறந்த மேனேஜர் ஜோஸ் மொரின்ஹோ தலைமையில் சென்ற ஆண்டு பட்டையைக் கிளப்பியது.இப்போதோ நிலைமை தலைகீழ்.கத்துக்குட்டி அணிகளிடமும் பேரடி வாங்குகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஈடன் ஹசார்டும் காயத்தால் போட்டியிலிருந்து வெளியற்றப்பட்டார். பிரீ கிக் மன்னனாக வலம் வரும் விலியன் மட்டுமே செல்சியின்  மிகப்பெரிய ஆறுதல். உள்ளூரில்சொதப்பினாலும் ஐரோப்பிய போட்டிகளில் எப்பொழுதுமே போராடும் என்பதால் செல்சியை அவ்வளவு சீக்கிரம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.ஆனாலும் இப்போட்டியில் பாரீசின் கை ஓங்கவே வாய்ப்புகள் அதிகம்.


யுவன்டஸ் -  பேயர்ன் மியூனிச் 


நாக்அவுட் சுற்றின் மிகவும் பரபரப்பான போட்டி இதுதான். கடந்த முறை இறுதிப் போட்டியை எட்டிய யுவன்டசும்,தொடர்ந்து இரண்டு முறை அரை இறுதியோடு வெளியேறிய பேயர்ன் மியூனிச் அணியும் விளையாடும் இப்போட்டி ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாய் அமையும். யுவன்டஸ் நடப்பு சீசன்  தொடக்கத்தில் சொதப்பினாலும் மீண்டெழுந்து  அசத்தி வருகிறது. பேயர்ன் மியூனிச் அணி நடப்பு சீசனில் மொத்தமே இரண்டு போட்டிகளில் தான் தோற்றுள்ளது.

தற்போது  6 வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் அந்த அணி  ஆடி வருகிறது.  நட்சத்திர வீரர்களான ஃபிராங்க்¢ ரிபரி,ஆர்ஜான ராபன் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டாலும்  லெவண்டொவ்ஸ்கி,முல்லர்,கோமன் ஆகிய இளம்புயல்களின் தாக்கம் எதிரணியினரை துவம்சம் செய்து வருகிறது. போட்டி கடுமையாக இருந்தாலும் பேயர்ன் அணியின் கோப்பை கனவிற்கு இப்போட்டி தடையாக இருக்காது என்றே கருதப்படுகிறது.


பிற ஆட்டங்களில் கென்ட் - வுல்ஸ்பர்க் பி.எஸ்.வி  - அத்லெடிகோ மாட்ரிட், பென்ஃபிகா-  செனித் , டைனமோ கீவ்  - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் லெக் ஆட்டங்கள் வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 23 ,24-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close