Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எலானோ-தான் தோனி... மெண்டோசா-தான் ரெய்னா... சிஎஃப்சி-தான் சிஎஸ்கே!

.பி.எல் கில்லி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாக உடைந்து விட்டது. தோனி, அஸ்வின் ஒருபுறம், ரெய்னா, ஜடேஜா மறுபுறம் என சி.எஸ்.கே ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் செய்வது என தெரியாமல் தவிக்கும் நேரத்தில், சென்னை ரசிகர்கள் விசில் போட இன்னோரு வாய்ப்பை வழங்கியுள்ளது, ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஆடும் சென்னையின் எஃப்.சி அணி. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை 4-2 என்று ஒட்டு மொத்தமாக வீழ்த்தி இறுதி போட்டியில் கெத்தாக நுழைந்திருக்கிறது சென்னையின் எஃப்.சி.

சென்னை ரசிகர்களைப் பொறுத்தமட்டில் கால்பந்து அணியை ரசிக்க இரண்டே காரணங்கள்... ஒன்று இந்த அணியின் இணை உரிமையாளர் தோனி, இன்னொன்று சென்னையில் ஃபுட்பாலுக்கு கொஞ்சம் மவுசு அதிகம். இந்த விஷயங்களோடு ஆரம்பித்த சென்னை அணி முதல் சீஸனில் அரையிறுதி வரை சென்றது. அப்போதிலிருந்தே சென்னையின் எஃப்.சி வீரர்களை ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பார்க்கத் துவங்கிவிட்டனர்.

எலானோ தான் தோனி!

பிரேசில் நாட்டு வீரரான எலானோ ப்ளூமர் தான் சென்னை அணியின் கேப்டன். இவரது ஜெர்ஸி நம்பர் 7 என்பது துவங்கி களத்தில் சற்று கோபம் அதிகமாகி கைகலப்பை நோக்கி நகரும் போது, வீரரை கூல் செய்வது வரை இவர் சி.எஸ்.கே கேப்டன் தோனியையே நியாபகப்படுத்துகிறார்.

சென்னையில் நடந்த ஆட்டங்களில் எல்லாம் எலானோ கால்களுக்கு பந்து சென்றதுமே மைதானமே எலானோ என கோஷம் எழுப்புவது, இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ஆட்டஙகளை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பாஸ்களை கோல்களாகவும், யாருக்கு பாஸ் தர வேண்டும் என்பதில் தெளிவாகவும் செயல்படும் கேப்டன் கூல் எலானோ - சி.எஃப்.சியின் தோனி!

மெண்டோசா தான் ரெய்னா!

எலானோ சென்னையின் தளபதி என்றால், மெண்டோசாதான் தல! களத்தில் இவரைச் சுற்றி எப்போதுமே 6 எதிரணி வீரர்களைப் பார்க்க முடியும். தன்னை தடுக்க முயற்சிக்கும் ஆறு வீரர்களையும் ஏமாற்றி, பல மீட்டர் தொலைவில் இருந்து பந்தை கோலுக்குள் கொண்டு செல்வதில் மெண்டோசா சூப்பர் ஸ்டார்.

இரண்டு தொடரிலும் சென்னையின் அல்டிமேட் ஸ்டார் மெண்டோசா தான். சி.எஸ்.கே-வுக்காக அனைத்து ஐ.பி.எல் தொடரிலும் ரெய்னா எப்படி 400 ரன்களுக்கு மேல் குவித்தாரோ, அதே போல் தான் மெண்டோசாவும். இந்த முறை அதிக கோல் அடித்து கோல்டன் பூட்டையே கிட்டதட்ட பாக்கெட் சென்னையின் தங்கமகன்.

ஜீஜே தான் அஸ்வின்!

இவர்கள் அனைவருமே வெளிநாட்டு வீரர்கள், ஃபுட்பால் சிறந்து விளங்கும் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆடுவதற்கு இணையான ஆட்டத்தை ஒரு இந்திய வீரர் செய்கிறார் என்றால், ஆச்சரியம் அன்லிமிடட்தானே. அவர்தான் ஜீஜே. இந்தியாவுக்கும், சென்னைக்கும் தோனி எப்படி அஸ்வினை துருப்பு சீட்டாக பயன்படுத்துவாரோ அப்படி தான் ஜிஜே. மெண்டோசாவின் அதிவேக பாஸ்களை அசால்ட்டாக கோலாக மாற்றியவர் இவர். இந்திய கால்பந்து அணியில் இவருக்கான இடத்தை சென்னையின் எஃப்.சி அழுத்தமாக எழுதியுள்ளது என்றே கூறலாம்.சி.எஸ்.கே தான் சி.எஃப்.சி!

அரையிறுதி வரை தடுமாற்றம், கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி, திடீரென ஒரு திருப்புமுனையில் இருந்து ஆட்டத்தை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வது என அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், சென்னையின் எஃப்.சி.க்கும் ஒற்றுமைகள் அதிகம். 360 நிமிடங்கள் கோல் விட்டுக்கொடுக்காத எடேல் தான் இந்த சீசனின் சிறந்த கோல்கிப்பர், அவருக்கு தான் தங்கப்பந்து விருது. பெரும்பாலான நேரங்களில் ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் இரண்டையும் சி.எஸ்.கே-தான் வைத்திருக்கும் பாணியை சி.எஃப்.சியும் தொடர்கிறது.


இறுதிப் போட்டியில் கோவா அணியை எதிர் கொள்வதிலும் ஒரு கிரிக்கெட் சுவாரஸ்யம்தான் ஒளிந்துள்ளது. ஒன்டே கேப்டன் தோனி உரிமையாளராக சென்னையின் எஃப்.சி எதிர்கொள்ள போவது டெஸ்ட் கேப்டன் கோலி உரிமையாளராக இருக்கும் கோவா அணியை! சென்னை-கோவா என்பது இப்போது தோனி-கோலியாக மாறியுள்ளது.

சென்னை ரசிகர்களைப் பொறுத்தமட்டில் சி.எஸ்.கே தடையால் மனமுடைந்து விசில்போட முடியாமல் தவித்ததற்கு இனி விசிலடித்து சொல்லலாம் சென்னைக்காக போடு மச்சி கோலு என்று!

- ச.ஸ்ரீராம்

படங்கள்: சென்னையின் எஃப்சி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ