Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்பெஷல் ஒன் ' அதிரடி நீக்கம் : செல்சியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் மொரின்ஹோ!

பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான செல்சி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து, நேற்று ஜோஸ் மொரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான தோல்விகள் மோரின்ஹோ நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. நடப்பு சாம்பியனான செல்சி,  தற்போது புள்ளிகள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

யார் இந்த மொரின்ஹோ ?

உலகின் முன்னணி  கால்பந்து பயிற்சியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் தன்னைத் தானே  ‘ஸ்பெஷல் ஒன்’ என்று கூறிக்கொள்வார். போர்ச்சுகலைச் சேர்ந்த இந்த மொரின்ஹோ கால்பந்தை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் நேசித்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம்தான். அம்பியாய் இருக்கும் அணிகளை அந்நியனாக மாற்றுவதில் வல்லவர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம்.  கடந்த 2010-ம் ஆண்டு தடுமாறிக் கொண்டிருந்த இன்டர்மிலன்,  இவரது பயிற்சியின் கீழ்தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பல ஆண்டுகளுக்கு பிறகு வென்றது.  இத்தனைக்கும் இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில்,   அதுவும் 45 ஆண்டுகளுக்கு பிறகு  இன்டர்மிலன் இத்தகைய சாதனையை புரிந்தது. அதனால்தான் மொரின்ஹோ தன்னை 'ஸ்பெஷல் ஒன் ' என்று கூறிக் கொள்வது வழக்கம். அதற்கும் தகுதியானவர்தான். 

ஏற்கனவே 2004 முதல் 2006 வரை செல்சி அணியின் பயிற்சியாளராக இருந்த மொரின்ஹோ, அந்த அணியை பிற  ஐரோப்பிய அணிகளுக்கு  சவால் விடும் வகையில் பட்டைத் தீட்டினார். இந்த காலக்கட்டத்தில் செல்சி தொடர்ந்து இரு முறை பிரீமியர் லீக் பட்டத்தை கைப்பற்றியது.  கடந்த  2013ல் இரண்டாவது முறையாக செல்சி அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற இவர், 2014-15 சீசனில் செல்சியை மீண்டும் சாம்பியனாக்கி காட்டினார். செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் தொடர்ந்து 75 போட்டிகளில் தோல்வி காணாத அணியாக செல்சியை வலம் வர வைத்தவர் என்ற பெருமையும் மொரின்ஹோவுக்கு உண்டு.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை


கால்பந்தில் சர்ச்சையுள்ள பேர்வழிகள் என்றால் அதில் மொரின்ஹோ டாப் 10க்குள் வந்துவிடுவார். அவர் எது பேசினாலும் அது செய்தியாகிவிடும். யாரையும் குறை கூறவோ, சாடவோ ஒருபோதும் தயங்க மாட்டார். நடுவர்களின் தீர்ப்புகள் தனக்கு திருப்தி தரவில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் நேரடியாக அதை மீடியாவில் சொல்லி விடுவார். கிரிக்கெட்டில் ஹர்பஜன்- சைமன்ட்ஸ் ஆகியோரின் சண்டை பிரசித்தி என்றால், கால்பந்திற்கு மொரின்ஹோ - ஆர்சனலின் வெங்கர் சண்டை வெகு பிரபலம்.  ஆர்சனல் அணியின் பயிற்சியாளர் வெங்கரை வறுத்து எடுத்து விடுவார் மொரின்ஹோ. அவரின் வாயைக் கிளற பத்திரிக்கையாளர்கள் தவம் கிடப்பார்கள். அவரிடம் ஒரு மணி நேரம் பேசினால் ஒரு புத்தகம் வெளியிடலாம். இதனாலேயே அபராதம், சஸ்பென்சன் என பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார். மிகவும் நேரடியாக மனதில் இருப்பதையெல்லாம் இவர் பேசுவதாலேயே இவரை விரும்பும் அளவிற்கு, வெறுக்கும் கூட்டமும் கால்பந்தில் உண்டு.

சர்ச்சையைத் தாண்டிய சாதனைகள்

 கால்பந்து பயிற்சியாளர்களில் மொரின்ஹோ மிகவும் வித்தியாசமானவர். தோல்வியைத் தடுப்பதே வெற்றியின் முதல்படி என்று தீர்க்கமாக நம்புபவர். தனது அணிகளை தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தச் செய்து எதிரணியினருக்கு தலைவலி ஏற்படுத்துவார். ‘மொரின்ஹோ கோல் கம்பம் முன்பு பேருந்தை நிற்க வைக்கிறார். இந்த முறையிலான கால்பந்தாட்டம்  மிக மோசமானது ’ என தோல்வியடையும் பல பயிற்சியாளர்கள் புலம்புவார்கள். இவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். ‘ எனது நிர்வாகிகள் வெற்றி பெறத்தான் என்னை நியமித்திருக்கிறார்கள். நான் அதைத்தான் செய்கிறேன்’ என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லி விடுவார்.

ஒரு அணியில் 3 ஆண்டுகள்


மொரின்ஹோ எந்த அணியிலும் இதுவரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயிற்சியாளராக இருந்ததில்லை. முதலில் செல்சியிலிருந்து விலக்கப்பட்ட போதும், ரியல் மாட்ரிட் அணியிலிருந்து வெளியற்றப்பட்ட போதும் அவரது அணிகளின் மூன்றாவது ஆண்டு செயல்பாடு சுமார்தான். கடந்த 2014-15 மொத்த சீசனிலும் சேர்ந்து மூன்றே போட்டிகளில் தோற்றிருந்த செல்சி அணி, இம்முறை 16 பிரீமியர் லீக் போட்டிகளில் 9ல் தோல்வியுற்று பரிதாப நிலையில் உள்ளது. வீரர்கள் சொதப்பினாலும், அணியின்தோல்விக்கு பயிற்சியாளர்களின் தலை உருள்வது சகஜமானதுதான்.

மொரின்ஹோவின் இந்த வீழ்ச்சியின் போது பல முன்னணி பயிற்சியாளர்களும், முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,  செல்சி அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதுவரை பிரெண்டன் ரோட்ஜர்ஸ், சாம் ஆலர்டைஸ் என பல முன்னனி பிரீமியர் லீக் பயிற்சியாளர்கள் பாதியில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த லிஸ்டில் யாரும் எதிர்பாராமல் இணைகிறார் மொரின்ஹோ.

அடுத்து மாட்ரிட்?

மொரின்ஹோ இடத்திற்கு தற்காலிகமாக கஸ் ஹட்டிங்  நியமிக்கப்பட்டுள்ளார்.  ரஃபேல் பெனிட்சின் தலைமையிலான ரியல்மாட்ரிட் அணியும் தொடர்ந்து சொதப்பிதான் வருகிறது. ஒரு வேளை மொரின்ஹோ மீண்டும் ரியல்மாட்ரிட்டுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

யானைக்கும் அடி சறுக்கும்... இப்போது மொரின்ஹோவுக்கு சறுக்கியிருக்கிறது...!

-மு.பிரதீப் கிருஷ்ணா  ( மாணவ பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close