Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய வம்சாவளி வீரர் சாதனை!

லிவர்பூல்... இந்த பெயரை சொன்னாலே கால்பந்து உலகம் அதிரும். ஏனென்றால் உலகின் அபாயகரமான கால்பந்து ரசிகர்கள் கொண்ட அணி எதுவென்றால், தாராளமாக லிவர்பூல் அணியை நோக்கி கை காட்டலாம். கடந்த 1985-ம் ஆண்டு, பிரஸ்சல்ஸ் நகரில் உள்ள ஹேசல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில், லிவர்பூல் அணியுடன் இத்தாலியின் யுவான்டஸ் மோதிக் கொண்டிருந்தது.

இந்த போட்டியில் யுவான்டஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்த போது, லிவர்பூல்  ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 39 யுவான்டஸ் ரசிகர்கள் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக லிவர்பூல் அணிக்கு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட பிற ஐரோப்பிய போட்டிகளில் விளையாட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான். இது போன்று பல சம்பவங்கள்  லிவர்பூல் அணியின் வரலாற்றில் உண்டு. லிவர்பூல் அணியின்  எம்பளத்தில் 'யூ வில் நெவர் வோக் அலோன்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். லிவர்பூல் எங்கே சென்றாலும் ரசிகர்களும் கூட வருவார்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே இந்த வாசகம் எம்பளத்தில் இடம் பெற்றிருக்கும்.  அந்த அளவுக்கு அபாயகரமான ரசிகர்களை கொண்ட அணி லிவர்பூல். ரசிகர்கள் மட்டுமல்ல அணியும் அப்படிதான். இந்த அணியின் செல்லப் பெயரே 'தி ரெட்ஸ்'  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சவால் விடும் வகையில்,  19 முறை பிரீமியர் லீக் கோப்பையை வென்ற ஒரே அணி லிவர்பூல்தான். ஐரோப்பாவின் பிரீமியர் கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, ஆர்சனல் போன்ற இங்கிலாந்து அணிகள் பிற ஐரோப்பிய அணிகளான ஏ.சி.மிலன், பார்சிலோனா , பேயர்ன், ரியல்மாட்ரிட் அணிகளை கண்டாலே தொடை நடுங்கி தோற்று ஓடிப் போய் விடும்.

மான்செஸ்டர் யுனைடெட் 3 முறைதான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது. செல்சி ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆர்சனல் காலிறுதியை தாண்டுவதே கடினம்.  ஆனால் லிவர்பூல் மட்டுமே மற்ற ஐரோப்பிய அணிகளுக்கு சாம்பியன்ஸ் லீக்கில் சவால் விட்டு நிற்கும். இங்கிலாந்தை சேர்ந்த அணிகளில் அதிக முறை அதாவது 5 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற ஒரே அணி லிவர்பூல்தான்.

இந்த லிவர்பூல் அணிக்குதான் முதன் முறையாக இந்திய வம்சாவளி வீரர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு.  புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். யான் தண்டா என்ற அந்த 17 வயது இந்திய வம்சாவளி இளம் வீரரை லிவர்பூல் அணி இரண்டரை ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.

பிர்மிங்ஹாம் நகரில் பிறந்த தண்டா,  கடந்த 2013-ம் ஆண்டு முதல் லிவர்பூல் கால்பந்து அகாடமியில்தான் பயிற்சி பெற்று வந்தார். அட்டாக்கிங் மிட்பீல்டரான தண்டா, லிவர்பூல் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இரண்டாவது பிரிட்டிஷ் ஆசியர் ஆவார். இதற்கு முன் ஸ்வான்ஸீ அணிக்காக விளையாடி வந்த நீல் டெய்லர்,  இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் பிரிட்டிஷ் ஆசியர்.

இங்கிலாந்து தேசிய அணியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் தண்டா இடம் பிடித்து அசத்தியுள்ளார். தண்டாவின் ஒப்பந்தம் குறித்து லிவர்பூல் தரப்பில், ''நாங்கள் ஆசியர் என்றோ ஆசியர் இல்லையென்றோ பார்ப்பதில்லை. திறமை மட்டுமே இங்கு பேசும். தண்டா மிகச்சிறந்த இளம் வீரர். லிவர்பூல் அணிக்காக அவர் பல சாதனைகள் படைப்பார்'' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close