Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சாம்பியன்: எங்க தல எலானோ, மெண்டொசாவுக்கு பெரிய விசில் போடு!

ன்று நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கோவாவை வீழ்த்தியது. முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தாவையும் கோவா அணி டெல்லியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சொந்த மைதானத்திலேயே இப்போட்டி விளையாடப்பட்டது கோவா அணிக்கு அனுகூலமாய் அமைந்தது.


 
கோலே இல்லாத முதல் பாதி

 சென்னை அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் எலானோ புரூமரை சப்ஸ்டிட்யூட்டாக களமிறக்கினார் பயிற்சியாளர் மடரசி. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் எதிரணியின் கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். கோவா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் முன்கள வீரர் டூடு தலையில் காயம்பட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக லுக்கா மாற்று வீரராக களமிறக்கப் பட்டார். போட்டியின் முதல் 25 நிமிடம் கோவா அணி பந்தை தன்வசமே அதிக நேரம் வைத்திருந்தது. அதுவரை சென்னை அணி ஆட்டத்தில் சற்று பின்தங்கியே இருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய சென்னை அணியின் வத்தூ கோவா வீரர்களை பலமுறை பவுல் செய்தார். இதனால் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார். முதல் பாதியில் இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதும் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

அதிரடியான இரண்டாம் பாதி

 கோவா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் ‘அசிஸ்ட் கிங்’ லியோ மௌரா காயத்தால் முதல் பாதியோடு வெளியேறினார். நடுகள வீரரான அவருக்குப் பதில் முன்கள வீரரான ஹாகிப்பை களமிறக்கி அதிரடி வியூகங்கள் வகுத்தார் சிகோ. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷம் காட்டிய சென்னை அணிக்கு 54வது நிமிடத்தில் அதற்கான பலன் கிட்டியது. நட்சத்திர நாயகன் மெண்டோசாவை கோவாவின் ஹால்டர் தள்ளிவிட சென்னைக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெலிசாரி அடித்த பெனால்டி ஷாட்டை கோவா கோல்கீப்பர் கட்டிமானி முதலில் தடுத்து விட்டார். அது மீண்டும் பெலிசாரியிடமே செல்ல, இம்முறை பந்தை கோல் கம்பத்துக்குள் புகுத்தி சென்னைக்கு முன்னிலை ஏற்படுத்தினார் இந்த பிரேசில் வீரர். ஆனால் சற்றும் மனம் தளராத கோவா வீரர்கள் உடனேயே பதிலடி கொடுத்தனர். அடுத்த மூன்றாவது நிமிடத்தில் ரோமியோ ஃபெர்னான்டஸ் கொடுத்த கிராசை அபாரமாக கோலாக்கினார் ஹாகிப்.

 

கோல்கீப்பர்களின் அபார ஆட்டம்

 அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, இம்முறை அதை மெண்டோசா அடிக்க அதையும் தடுத்தார் கட்டிமானி. இத்தனை நாட்கள் தங்கள் அணியின் தலைமகனாய் விளங்கிய மெண்டோசா பெனால்டியை பயன்படுத்த தவற சென்னை ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதன்பின் கோவா அணி பலமுறை இரண்டாவது கோல் போட முயற்சித்தது. ஆனால் அவையனைத்தையும் சென்னை கோல்கீப்பர் எடல் தனது அபார செயல்பாட்டால் தடுத்தார்.

இறுதி நிமிட திக் திக்

 ஆட்டத்தின் 87 வது நிமிடத்தில் கோவா அணியின் ஜோஃபர் கோலடிக்க கோவா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஆனாலும் மனம் தளராமல் விளையாடிய சென்னை அணிக்கு கடைசி நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் கோவா அணியின் கோல்கீப்பர் கட்டிமானி தன் சக வீரருடன் மோதி தானே ‘ஓன் கோல்’ விட ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. அதன்பின்னரும் சென்னை அணியின் அனல் ஆட்டம் ஓயவில்லை. பெனால்டியை விட்டு சென்னையின் வில்லனான மெண்டோசா கூடுதல் நேரத்தில் அபாரமாக கோலடிக்க சென்னை அணி 3-2 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் ஜெயேஷ் கொடுத்த பாசை அவர் கோலாக மாற்றினார். இது இத்தொடரில் மெண்டோசா அடிக்கும் 13வது கோலாகும்.

 

 இதன்மூலம் ஐ.எஸ்.எல் லின் இரண்டாவது சாம்பியனாக உருவெடுத்தது சென்னையின் எஃப்.சி அணி. 13 கோல்கள் அடித்த மெண்டோசா தங்க காலனி விருதையும் சென்னை கோல்கீப்பர் எடல் தங்க கிளவுஸ் விருதையும் வென்றனர்.

டோனியின் வாழ்த்து...

 

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close