Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜேந்தரின் தெறி வெற்றி ரகசியம்..!

2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தவர் விஜேந்தர் சிங்.

பிரேசில் ஒலிம்பிக்கில், இந்தியாவுக்காக பதக்கம் பெற்றுத்தருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தேசத்துக்காக விளையாடும் அமெச்சூர் வகை பாக்சிங்கில் இருந்து விலகி, பணம், புகழ் எல்லாம் எளிதில் வந்துவிழும், புரொஃபஷனல் பாக்சிங்கில் கலந்து கொள்ளப்போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார் விஜேந்தர். ஆனால் இப்படி இந்திய வீரர்கள் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னரே ராஜ்குமார் சங்வான், தேவ் ராஜன், தர்மேந்தர் யாதவ், குர்சரன் சிங் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரகாசிக்கவில்லை என்பதால், இதன்மேல் ஊடக வெளிச்சம் படாமலே இருந்துவிட்டது. ஆனால் விஜேந்தர் சிங் இப்படி அறிவிக்கவும், எதிர்பார்த்ததைவிட, அதிகம் வாழ்த்துக்களும், ஆதரவும் ரசிகர்களிடம் இருந்து விஜேந்தர் சிங்கிற்கு சென்றது. போட்டி நடக்கும்போது ட்விட்டரில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்தார் விஜேந்தர். ஆனால், இதே ரசிகர்களின் ஆதரவையும், பாராட்டுக்களையும், வெற்றிபெறாமல் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

தன்னுடைய முதல் போட்டியில், பிரிட்டனை சேர்ந்த சோனி ஒயிட்டிங்கை எதிர்கொண்டார் விஜேந்தர். 'வந்தோமா.. வென்றோமா.. சென்றோமா' என்ற குட் பாய் இமேஜ் என்பது இந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் நாம் எதிர்பார்க்ககூடாத ஒன்று. எதிர்த்து மோதும் வீரர்களை வசைபாடுவர். வென்றுவிட்டால் எள்ளி நகையாடுவர். ஊடகங்கள் தங்களை கவனிக்கின்றன எனத்தெரிந்தால், இந்த எல்லைகள் இன்னும் நீளும். காரணம் எந்த அளவு நீங்கள் பிரபலம் அடைகிறீர்களோ, அந்த அளவு பணம், ஸ்பான்சர்ஷிப் உங்களைத்தேடி வரும். இதை அப்படியே செய்தார் சோனி ஒயிட்டிங். 

“விஜேந்தர் சிங்கை நாக் அவுட் செய்து வெளியேற்றுவேன்” என சவால் விட்டார் ஒயிட்.  ஆனால், விஜேந்தர் விட்டக் குத்துக்களால், மூன்றாம் சுற்றிலேயே நாக் அவுட் ஆகிப்போனார் ஒயிட். ஒரு சுற்று மீதமிருக்கும் நிலையிலேயே வெற்றி பெற்று முதல் போட்டியில் முத்திரை பதித்தார் விஜேந்தர் சிங். வெற்றி பெற்ற பின்பு தன்னடக்கத்துடன் இப்படி பேட்டி கொடுத்தார்.

- “ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இது வெறும் தொடக்கம்தான். இனி நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சோனி ஒயிட்டிங்கிற்கு தேவையான பதிலை, ரிங்கில் அளித்துவிட்டேன் என நினைக்கிறேன். முதல் போட்டி என்பதால், கொஞ்சம் பயமாக இருந்தாலும், கடும் பயிற்சியும், உழைப்பும், வெற்றிபெற வேண்டும் என்ற ஆசைக்கு கைக்கொடுத்தது”-

அடுத்து நவம்பர் மாதம் தனது இரண்டாவது போட்டியில், இங்கிலாந்தின் கில்லனை எதிர் கொண்டார்.

“விஜேந்தர் சிங்கின் போட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு உலகத்தரமான குழந்தை. வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்ட என் முன்பு, அவர் ஜெயிப்பது கஷ்டம். அவர் நாட்டில் வேண்டுமானால் அவர் ஹீரோவாக இருக்கலாம்'' என நூல் விட்டார் கில்லன். ஆனாலும், வெறும் இரண்டே நிமிடங்களில் தோல்வியே கண்டிராத, கில்லனுக்கு தோல்வியை தந்துவிட்டு, வெற்றியை தனது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக அறிவித்தார் விஜேந்தர்.

டிசம்பர் 19-ம் தேதி தனது மூன்றாவது போட்டியில், பல்கேரியாவை சேர்ந்த சமெட் ஹியூசினோவை சந்தித்தார் விஜேந்தர். முந்தைய போட்டிகள், நான்கு சுற்றுகள் கொண்டவை. இந்த முறை 6 சுற்றுகள். எதிரில் இருப்பது அனுபவமிக்க வீரர். போட்டிகளுக்கு முன்பு, அதே வார்த்தை சீண்டல்கள். வழக்கம் போலவே வெற்றியை தன் பக்கம் இழுத்து 'ஹேட்ரிக்' வெற்றியாக்கி கொண்டார் விஜேந்தர். போட்டியின் முதல் சுற்றிலேயே ஹியூசினோவை சரமாரியான பன்ச்சுகளால் நிலைகுலைய செய்த விஹ்ஜேந்தர், இரண்டாவது சுற்றில் 35 விநாடிகள் மீதமிருக்கும் போதே ஹியூசினோ சாய்ந்துவிட, நடுவர் விஜேந்தரை வெற்றியாளராக அறிவித்துவிட்டார்.

வெற்றிக்கான ரகசியத்தையும் அவரே சொல்கிறார். ''மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. என்னால் வெல்ல முடியும் என்பது எனக்கு தெரியும். அதற்கு தேவையான கடின பயிற்சிகளை மட்டுமே நான் எடுத்தேன். புதிய உத்திகளை, புதிய முறைகளை கற்றுக்கொண்டு என்னை நான் மேம்படுத்திக்கொள்கிறேன். போட்டியாளர்கள் என்னை பற்றி அடிக்கும் கமெண்ட்களுக்கு நான் பாக்சிங் ரிங்கில் சரியான பதிலடி தந்துவிடுகிறேன் என நினைக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு வெற்றிகரமாக இருந்துள்ளது. இதனை கிறிஸ்துமஸ் பரிசாக எனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என கூறி சிரிக்கிறார் விஜேந்தர்.

தேசத்திற்காக விளையாடாமல், இப்படி தொழில்முறை ஆட்டத்திற்கு மாறிவிட்டீர்களே எனக்கேட்டால், ''அமெச்சூர் பாக்சிங்கைவிடவும், இந்த முறையில் விளையாடுவது மிக மிக கடினம். முடியாதது எதுவும் இல்லை. நான் இந்த முடிவை எடுத்தபோது, இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் நினைக்க வில்லை. நான் வெளிநாட்டில் விளையாடும்போது கூட, இங்கு ரசிகர்கள் வந்து ஆதரவு தருகிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

என்னுடைய வெற்றிகளுக்காக என் பயிற்சியாளர் லீ பேர்ட் மிகவும் மெனக்கெடுகிறார். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். எனவே, இது ஒன்றும் எளிமையானது என நான் நினைக்க வில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் 100 சதவீத பங்களிப்பை நான் கொடுக்கிறேன். நான் இப்போது பெறும் வெற்றிகள், வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து இன்னும் நிறைய புரொஃபஷனல் பாக்சர்ஸ் உருவாக ஊக்கமாக அமையும். அவர்களுக்கு நான் முன்னோடியாக இருக்கிறேன். இன்னும் நிறைய இளைஞர்கள் இந்த முறையில் விளையாட முன்வர வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் விஜேந்தர்.

- ஞா.சுதாகர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close