Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமீர் ஒரு தேச துரோகி... பயிற்சியிலிருந்து வெளியேறிய பாக் வீரர்கள்!

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஒரு தேசத் துரோகி என்று கூறி அவரோடு சேர்ந்து பயிற்சி செய்ய அவ்வணியின் கேப்டன் அசார் அலியும், ஆல் ரவுண்டர் முகமது ஹபீசும் பயிற்சியிலிருந்து வெளியேறினர். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் சகாரியார் கான் இவ்விஷயத்தில் தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானம் செய்துள்ளதையடுத்து இரண்டு வீரர்களும் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப உள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் முகமது அமீர். 2009-ம் ஆண்டு, தனது 17 வயதிலேயே பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடினார். தனது அதிவேக பந்துவீச்சால் குறுகிய காலகட்டத்திலேயே பிரபலம் அடைந்தார். இந்நிலையில், 2010-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அமீர், வேகப்பந்து வீச்சாளர் ஆசிப், தொடக்க வீரர் சல்மான் பட் ஆகியோர் ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர்.

வேண்டுமென்றே ‘நோ பால்’ வீசியதாக புகார் கூறப்பட்டதால் அமீரும் அச்சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நடந்த விசாரணையில் மூவருக்கும் ஐந்தாண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், 6 முதல் 30 மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

அமீருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு தடை சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 26 நபர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அமீரின் பெயரும் இடம்பெற்றது. இந்த 26 நபர்களிலிருந்து தான் நியூசிலாந்து தொடருக்கான இறுதி அணி தேர்வு செய்யப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியும், ஆல்ரவுண்டர் ஹபீசும், அமீர் அணியில் இடம்பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போர்க்கொடி தூக்கினர். “நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்த ஒருவரோடு எங்களால் விளையாட முடியாது” என்று கூறி இருவரும் பயிற்சியிலிருந்து வெளியேறினர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அமீர் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆதரவு தெரிவித்திருந்தபோதும், இரு முன்னனி வீரர்கள் இப்படி பயிற்சியிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சகாரியார் கான், இரு வீரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் இரு வீரர்களும் சிறு ஒப்புதல்களோடு மீண்டும் பயிற்சியில் பங்கேற்க சம்மதித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் பேட்டியளித்த சகாரியார் கான், ''நாட்டுக்காக விளையாடுவது வீரர்களின் கடமை. அமீர் இன்னும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை. அப்படி அவர் அணிக்கு தேர்வானாலும் இந்த இரு வீரர்களும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். களத்தில் எவ்வித கருத்து வேறுபாடுமின்றி ஒற்றுமையோடு விளையாட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். அசாருக்கும், ஹபீசுக்கும் நிலமையை எடுத்துக் கூறியுள்ளேன். அவர்கள் பயிற்சியில் பங்கேற்பார்கள். அவர்களது நிலைப்பாடு மாறும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இதுகுறித்து பேசிய முகம்மது ஹபீஸ், ''அமீர் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தந்தவர். அப்படி ஒரு வீரரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தேசிய அணிக்குத் திரும்புவது கிரிக்கெடிற்கு நல்லதல்ல. நான் சுமாராக விளையாடும் வீரன் தான். ஆனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக பங்காற்றியுள்ளேன், மேலும் பங்காற்றுவேன்.

என்னுடைய நிலைப்பாடு அமீர் ஒருவருக்கு மட்டும் எதிரானது அல்ல. சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிரானது தான். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை நான் மண்ணித்தாலும், தீர்க்கமாக சூதாட்டத்தை எதிர்க்கிறேன். எனது இந்த முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டு எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இரண்டு மாதங்கள் முன்பு வங்கதேச பிரீமியர் கிரிக்கெட் தொடரில் சிட்டகாங் அணிக்காக விளையாட ஹபீசுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவ்வணியில் அமீர் இடம் பெற்றிருந்ததால் ஹபீஸ் அவ்வழைப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இரு வீரர்களும் தற்சமயம் பயிற்சியில் பங்கேற்றாலும் அமீர் நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் மீண்டும் பிரச்னை கிளம்ப வாய்புள்ளது.

என்றும் பிரச்னையிலேயே ஓடும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மீண்டும் ஒரு சோதனைக் காலம் தொடங்கியுள்ளது.

மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close