Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுவிக்கு டாடா காட்டியது டேர்டெவில்ஸ் !

ரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்  9 சீசனுக்கு முன்னதாகவே  யுவராஜ் சிங்கை அணியிலிருந்து நீக்கியுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில் , டெல்லி அணியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லி அணி  16 கோடி ரூபாய்க்கு யுவராஜை வாங்கியது.யுவராஜ் மட்டுமல்ல,  டேல் ஸ்டெயின், பீட்டர்சன், மேத்யூஸ், தினேஷ் கார்த்திக் போன்ற பல முன்னனி வீரர்களையும் டெல்லி அணி கழற்றி விட்டுள்ளது.
 


மீண்டும் சங்கடத்தில் யுவராஜ்

50 ஓவர் உலகக்கோப்பை  டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பெரிதும் காரணமாய் இருந்தவர் யுவராஜ் சிங். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் ஃபார்ம் அவுட்  காரணமாக கடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த  சீசனில் டெல்லி அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ்சிங், அந்த தொடரில், 13 போட்டிகளில் விளையாடி 248 ரன்களே எடுத்தார். அடுத்த தொடருக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைத்துக்கொள்ள நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் செலவிட பட்ஜெட் குறைவாக உள்ளதால் யுவராஜை கழற்றி விட்ட டெல்லி அணி, அந்த தொகையை கொண்டு பிற வீரர்களை வாங்கத் திட்டமிட்டது.

சேவாக்கும் அவுட்

பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக்கும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய சேவாக் வெறும் 99 ரன்களே அடித்தார். வோஹ்ரா, சகா போன்ற இளம் வீரர்கள் ஜொலித்த நிலையில் அணியில் இடம் பிடிக்கவே அவதிப்பட்ட சேவாக் தற்போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் தன் பங்கிற்கு 9 வீரர்களை வெளியே அனுப்பியுள்ளது. காயத்தால் அடிக்கடி அவதிப்படும் வேகப்பந்துவீச்சாளே ஸ்டெயின், இங்கிலாந்தின் பீட்டர்சன், இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் தங்கள் இடத்தை இழந்துள்ளனர்.

பெங்களூர் அணி அதிகபட்சமாக 14 வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. கடந்த ஏலத்தில் பத்தரை கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இதில் பலியாகியுள்ளார். ஆல்ரவுண்டர் சமி, வேகப்பந்துவீச்சாளர் திண்டா உள்ளிட்டோருக்கும் கல்தா கொடுத்துள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் நிர்வாகம். இவர்கள் மட்டுமல்லாது ஆரோன் ஃபின்ச், பிரக்யான் ஓஜா, டேரன் சமி, ஜார்ஜ் பெய்லி போன்ற முன்னனி வீரர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த 61 வீரர்களும் பிப்ரவரியில் நடக்கும் வீரர்கள் ஏலத்தில் ஏலம் விடப்படுவார்கள். அனைத்து அணிகளும் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் யுவராஜ், சேவாக் போன்ற மூத்த வீரர்களின் நிலை கேள்விக்குறிதான்.

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்