Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களுக்கு அறிவிருக்கா கெய்ல் ? ட்விட்டரில் தெறிக்கும் ரசிகர்கள்..!

பெண் நிருபரிடம், தரக்குறைவாக கமென்ட் அடித்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு கடும் கண்டனங்கள் குவிந்துவருகிறது.

நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில், மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல் 15 பந்துகளில், 41 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்க்ஸ் முடிந்து, கெய்லிடம் பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் மெல் மெக்லாக்ளின்,  இது குறித்து கேள்வி கேட்க, “ நானே உங்களிடம் பேட்டி தர வரலாம் என இருந்தேன். அதனால்தான் வந்தேன். உங்களது கண்களை முதல்முறையாக பார்க்கவே வந்திருக்கிறேன். போட்டி முடிந்தவுடன் நாம் மது அருந்தலாம்” என சொல்லி சிரித்துவிட்டு, அதோடு நிறுத்தாமல், “வெட்கப்படாத பேபி” என மீண்டும் எல்லை மீறினார். இதனை சாதுர்யமாக சமாளித்த மெக்லாக்ளின்,  “நான் வெட்கப்படவில்லை...” எனக்கூறி தப்பித்தார்.


 

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அரங்கில், நேரலையாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை இப்படி விமர்சித்தது ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. கிரிக்கெட் வீரர்கள் உட்பட, கெய்லை இந்த செயலுக்காக கண்டித்துள்ளனர். அதோடு மெக்லாக்ளினின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் என கெய்லை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

யார் இந்த மெல் மெக்லாக்ளின் ?

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விளையாட்டு தொகுப்பாளர் மெல் மெக்லாக்ளின். தற்போது ஆஸ்திரேலியாவின் 'நெட்வொர்க் 10' என்னும் சேனலில் பணிபுரிகிறார். இதற்கு முன்பு பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் இருந்த போது, உலகம் முழுக்க புகழ்பெற்ற தொகுப்பாளராக விளங்கினார் மெக்லாக்ளின். பெண் தொகுப்பாளர்கள் என்றால் அழகாக இருப்பார்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளுக்கு ஏற்ப, நிபுணத்துவத்தோடு , விளையாட்டு செய்திகளை துல்லியமாக சொல்வது மெக்லாக்ளின் ஸ்டைல்.

 

காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், கால்பந்து போட்டிகள் என எல்லாவகை விளையாட்டுகளிலும் சிறப்பாக வர்ணனை செய்து, ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

 

 

 

அதோடு மட்டுமில்லாமல், அழகாக இருப்பதால், நமது ஊர் மந்த்ரா பேடி போல, தீவிர ரசிகர்களும் கிடைத்தார்கள். வீரர்களிடம், களத்திற்கே சென்று பேட்டி எடுப்பது, விமர்சனங்களை கூட, வீரர்கள் முகம் சுளிக்காதவாறு, அழகாக எடுத்துக்கூறுவது, நேரலை நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன குறும்புகள், சாமர்த்தியமாக செயல்படுதல் என “மிஸ் பர்பெக்ட் “ ஆக இருந்ததால், அழகாக இருக்கிறார் என்பதை தாண்டி, திறமையான தொகுப்பாளர், விமர்சகர் என பெயர் பெற்றார் மெக்லாக்ளின்.

 

பல முன்னணி வீரர்களும், மெல்லிடம் தனி மரியாதை காட்டுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் 2013 ல் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார் மெக்லாக்ளின் . அப்போது, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாசமழையில் நனைந்தார். அடுத்து என்ன செய்யப்போகிறார் என இருந்த நிலையில், டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் கிரிக்கெட் தொடருக்காக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் மெக்லாக்ளின்.

 

இது முதல்முறையல்ல..!

 

மெல்லிடம், இப்படி வீரர்கள் சீண்டுவது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு, மேற்கிந்திய தீவுகள் அணியின் ட்வைன் பிராவோ, இதே போல, அத்துமீறினார். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பிராவோ, “நான் மெல்லிடம் ஒரு ஹலோ சொல்ல விரும்புகிறேன். அதுவும் அழகான மெல்லிடம்... இந்த சிட்னியில் அவரை பார்த்தது மகிழ்ச்சி... இன்னும் கூட, மெல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்...!” என அசடு வழிந்தார் பிராவோ.

 

அப்போது வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்,  “இது கொஞ்சம் சங்கடமானது” என்றார். ஆனால் அப்போது இது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் கெய்ல் தற்போது உளறியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கெய்ல் இப்படி நடந்துகொள்வதும் முதல்முறையல்ல. கடந்த ஆண்டு, ஜமைக்கா நாட்டு பெண் நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியிலும், கொச்சை வார்த்தைகளை பயன்படுத்த, ஜமைக்க பெண் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

 


மன்னிப்புக்கேட்டார் கெய்ல்

 

கெய்லின் இந்த செயலை கண்டித்து ரெனகேட்ஸ் அணி, 10,000 டாலர் அபராதம் விதித்திருக்கிறது. அதோடு இந்த பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கெய்ல்,  “அது ஒரு சிம்பிள் ஜோக். அதனை வேறு மாதிரி புரிந்து கொண்டு சீரியசான பிரச்னையாக்கி விட்டனர். இது தனிப்பட்ட முறையில் யாரையும் காயப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மெல்லிடமும் நான் மன்னிப்புகேட்கிறேன்” என அறிவித்துள்ளார்.

 

 

என்ன சொல்கிறார் மெல்?

 

“அவர் மன்னிப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.15 பந்தில் 41 ரன் அடித்திருந்தார் கெய்ல். அதைப்பற்றி கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக இப்படி நடந்துவிட்டது. அவர் அப்படிக்கேட்டதும், நானும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டேன். இப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. என்னுடைய வேலையை இன்னும் நன்றாகத்தான் பார்ப்பேன். இதனால் எந்த கவலையும் இல்லை. எல்லா அனுபவத்திலும் ஏதாவது கற்றுக்கொள்ளலாம். அப்படித்தான் இதையும் பார்க்கிறேன்.

 

எப்போதும் நான் நேர்மறை சிந்தனை கொண்டவள். பெண்கள் விளையாட்டுத்துறையில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதில் இதுவும் ஒன்று. இதோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்வோம்.

 

எனக்கு நான் செய்யும் வேலை மிகவும் பிடிக்கும். எனவே இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் உலகம் முழுதும் இருந்து, இந்த பிரச்னைக்காக பல பேர் எனக்காக குரல் கொடுப்பதுதான் மகிழ்ச்சி. மக்கள் இதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷம்” என்கிறார் மெல்.

 

தற்போது இந்த பிரச்னைக்கு பிறகு உலகம் முழுக்க மேலும் பாப்புலர் ஆகிவிட்டார் மெல் மெக்லாக்ளின்.

 

ஏற்கனவே, கெய்லின் இன்ஸ்டாகிராம் பக்கம் பெண்களுடன் மது அருந்துவது, உல்லாசமாக இருப்பது என A கிளாஸ் பக்கமாக இருக்கிறது. தற்போது, இந்த விஷயம் மூலம் மேலும் பேட் பாய் இமேஜ் கிடைத்துள்ளது கெய்லுக்கு.

 

-ஞா.சுதாகர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close